யமுனைக் கரையில்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6758
ஆங்காங்கே சுருக்கங்கள் விழுந்து, கோடையின் வெள்ளை விரிப்பைப் போல கிடக்கும் யமுனைக் கரையின் வழியாக, ஒரு மாலை நேரத்தில் நான் அப்படியே நடந்து கொண்டிருந்தேன். கிராமத்தின் அமைதியில் ஊர்ந்து கொண்டிருக்கும் தெளிவற்ற சிந்தனைகளுடன், இலக்கே இல்லாமல், எங்கு போகிறோம் என்ற தீர்மானமே இல்லாமல் நான் நடந்து கொண்டிருந்தேன். அழகான காளிந்தி என்னுடன் இருந்தது என்பதைத் தவிர, நான் புறப்பட்டு வந்த தில்லி நகரம் நான்கைந்து மைல்கள் பின்னால் இருக்கிறது என்ற உண்மையை நான் நினைக்கவே இல்லை.
காய்கறித் தோட்டங்கள், புல்வெளிகள், உழுது முடித்த வயல்கள், தலையில் நீர் குடத்துடன் நதியில் இருந்து திரும்பி வரும் கிராமத்துப் பெண்கள், கன்றும் கரியுமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் தலையில் துணி சுற்றியிருக்கும் விவசாயிகள்- இப்படி ஒரு காட்சி தொடர்ந்து கண்ணில் பட்டது. மாற்றத்தின் ஆரவாரத்தை நோக்கிக் கண்விழிக்காமல் கிடக்கும் பழைய பாரதத்தின் ஒரு அம்சம்!
நான் ஒரு சிறிய படகுத் துறையை அடைந்தேன். தூரத்திலிருந்து நான் வருவதைப் பார்த்து, படகோட்டி எனக்காகக் காத்துக்கொண்டு நின்றிருந்தான். அந்தக் கிழவனை ஏமாறச் செய்வது எனக்கு என்னவோ போல இருந்தது. கொஞ்சம் மறுகரைக்குப் போய்விட்டுத் திரும்பித்தான் வருவோமே என்று நான் முடிவெடுத்து படகில் ஏறி உட்கார்ந்தேன். அந்தச் சிறிய படகு, காளிந்தி நதியின் நீரோட்டத்தைக் கிழித்துக்கொண்டு மறு கரையை அடைந்தது.
கரையில் இரண்டு பேர் படகில் ஏறுவதற்காகக் காத்து நின்றிருந்தார் கள்- சிவப்புநிறக் கீரைக்கட்டைத் தலையில் வைத்துக்கொண்டு ஒரு இளம் பெண்ணும், சிவப்பு நிறத்தில் பட்டுத் தலைப்பாகை அணிந்த ஒரு நடுத்தர வயது மனிதனும்.
நான் படகிலேயே உட்கார்ந்திருப்பதைப் பார்த்து படகோட்டி சந்தேகத்துடன் என்னையே கொஞ்ச நேரம் பார்த்தான். நான் பாக்கெட்டிற்குள் இருந்து ஒரு அணாவை எடுத்துப் படகோட்டியிடம் நீட்டியவாறு சொன்னேன்:
“எனக்கு இறங்குவதற்கு நேரமில்லை. திரும்பிச் செல்கிறேன். சாயங்காலத்திற்கு முன்பே நான் தில்லி நகரத்திற்குத் திரும்பிச் செல்லணும்.''
அந்தப் படகோட்டி மேலும் சந்தேகத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே நாணயத்தைக் கையில் வாங்கினான். அதற்குள் கரையில் நின்றிருந்த இரண்டு பேரும் படகில் ஏறிவிட்டிருந்தார்கள். அந்த கீரைக் கட்டுப் பெண் படகின் ஓரத்தில் ஒரு சேவலைப் போல நின்றிருந்தாள். சிவப்புத் தலைப்பாகை அணிந்திருந்த மனிதன் எனக்கு அருகில் படகில் குறுக்காக இணைக்கப்பட்டிருந்த பலகைமீது உட்கார்ந்திருந்தான். மொத்தத்தில் மிகவும் அழுக்கடைந்து காணப்பட்ட அந்த மனிதன் மீது எனக்கு ஒரு வெறுப்பு தோன்றியது. சேறும் கறையும் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு வேட்டியையும் கிழிந்து போயிருந்த ஒரு நீளமான சட்டையையும் அணிந்து, தாடி ரோமங்கள் தாறுமாறாக வளர்ந்திருந்த நீண்ட முகத்துடன் இருந்த அந்த மனிதனின் கண்களில் மட்டுமே ஒரு புனிதம் தெரிந்தது.
துடுப்பை நீருக்குள் செலுத்திப் படகை ஓட்டியவாறு படகோட்டி என்னைப் பார்த்துச் சொன்னான்: “நீங்கள் எப்படி சாயங்காலத்திற்கு முன்பே தில்லி நகரத்தை அடைய முடியும்? சூரியன் மறைய ஆரம்பித்து விட்டது. தில்லி நகரம் ஆறு மைல்களுக்கு அப்பால் இருக்கிறது.''
நான் பதில் சொல்லவில்லை. ஒரு முட்டாளைப் போல எதுவும் பேசாமல் இருந்தேன்.
“நீங்கள் தில்லி நகரத்திற்கா செல்ல வேண்டும்?'' - எனக்கு அருகில் அமர்ந்திருந்த பயணி முகத்தை உயர்த்தியவாறு கேட்டான். “நானும் அங்குதான் போகிறேன். பயப்பட வேண்டாம்.''
நான் பேசவில்லை. அந்த நட்பை நான் விரும்பவில்லை.
அவன் தொடர்ந்து சொன்னான்: “சிறிது நேரம் கடந்தால், நிலவு உதயமாகும்.''
பிறகு அந்த மனிதன் மிகவும் இனிமையாக ஒரு இந்தி மொழிக் கவிதையைப் பாடினான். அதன் அர்த்தம் இதுதான்:
"குளிர்கால நிலவு தலையில் சந்தனச் சாறை ஊற்றும்போது,
காளிந்தியின் மணல் மேடுகள்
கால் பாதங்களை வருடும்போது,
நீர்வஞ்சிக் கொடிகளில் இருந்து
வெள்ளிப் பறவைகளின் காதல் முனகல்கள்
காதல் சிணுங்கல்களைக் கேட்டவாறு,
தோழியே, நாம் சந்தோஷத்துடன் பயணிப்போம்'
அவன் சொன்ன கவிதையில் இருந்த விஷயமும் இசை இனிமையும் என்னை வசீகரித்தன.
அவனுடைய கண்கள் பிரகாசித்தன. அந்த முக ரோமங்களுக்கு மத்தியில் ஒரு புன்னகை நீந்தி வந்தது.
“சகோதரா! இதோ இந்தக் கவிதையைத்தான் அப்படிப் பாடினேன்.''
“அப்படியென்றால் நீங்கள் ஒரு கவிஞரா?'' - ஆச்சரியத்துடன் கேட்டேன்.
அந்த மனிதன் தலையைக் குனிந்து கொண்டு, கையிடுக்கில் இருந்து ஒரு துணிப் பொட்டலத்தை எடுத்து மெதுவாக அதை அவிழ்த்தான். ஒரு நீளமான புத்தகம் வெளியே வந்தது. அந்த நூலை என்னுடைய கையில் நீட்டியவாறு அவன் சொன்னான்: “இது என்னுடைய புதிய நூல். நான் இப்போது கூறிய வரிகள் இதில் இருக்கு.''
நான் அந்த நூலைப் பிரித்துப் பார்த்தேன். அது ஒரு கையெழுத்துப் பிரதியாக இருந்தது.
"சிதையின் தீப்பொறிகள்' -கவிஞர்: "தர்மபால் மிஸ்ரா' என்று முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது.
“இது அச்சாகவில்லையா?'' - நான் கேட்டேன்.
“இல்லை. ஏதாவது பிரசுரகர்த்தாவுக்கு விற்பதற்காகக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்.
“இதில் என்ன விஷயம் இருக்கு? காதலா?''
“ஆமாம்... காதலின் கண்ணீரும் பெருமூச்சுகளும் உணர்த்திய கவிதை. சூடு குறையாத அனுபவங்கள் மற்றும் இதயகாயங்கள் ஆகியவற்றின் வாய்க்கால்கள்தான் இதில் இருக்கும் ஒவ்வொரு வரியும்.''
“சில பகுதிகளை வாசித்துக் காட்ட முடியுமா?''
“முடியும். ஆனால், என்னுடைய வாழ்க்கைக் கதையின் சில பகுதி களைக் கேட்டு முடித்தால், உங்களுக்கு இந்தக் கவிதையை மேலும் அதிகமாக சுவைக்க முடியும். யமுனைக் கரையின் வழியாக நடக்கும் போது, நான் உங்களுக்கு அதைக் கூறுகிறேன். படகு கரைக்கு வந்து விட்டது. நாம் இறங்குவோம்.''
நானும் கவிஞனும் கீழே இறங்கினோம். அந்த சேவலும் கரையில் இறங்கியது. முன்னால் தூரத்தில் போய்க் கொண்டிருந்த இன்னொரு பெண் உருவத்தை அழைத்தவாறு உரத்த குரலில் கூவியது.
பூ நிலவும் நீர்வஞ்சிக் கொடிகளின் நிழல்களும் படர்ந்து கிடந்த நதியின் கரை வழியாக நாங்கள் நடந்து கொண்டிருந்தபோது, கவிஞன் தர்மபால் தன்னுடைய காவியத்தின் கருப்பொருளுக்கு பாதிப்பும் பின்புலமும் தந்த அந்த அந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக என்னிடம் சொன்னான்.
யமுனைக் கரைக்கு அருகில் இருந்த என்னுடைய குடிசைக்குள், அந்தக் காதல் பொக்கிஷம் மணமகளாக நுழைந்தது நேற்றுத்தான் நடந்ததைப் போல இருக்கிறது. உண்மையிலேயே மூன்று வருடங் களுக்கு முன்பு ஒரு முழு பௌர்ணமி நாளன்று எங்களுடைய திருமணம் நடந்தது. சாந்தாவிற்கு அப்போது பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது.