
சாந்தாவின் அழகு, என்னுடைய கவித்துவம், எங்கள் இருவருக்குமிடையே இருந்த காதல்- இவை மூன்றும் ஒன்று சேர்ந்த ஒரு வாழ்க்கையை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
பூ நிலவு உள்ள இரவுகளில், காளிந்தியின் கரைகளில் கிருஷ்ணனும் ராதாவும் போல நாங்கள் விளையாடிக்கொண்டிருப்போம். மாலை நேரங்களில் நான் கடலின் முற்றத்தில் அமர்ந்து கவிதை இயற்றும் போது, சாந்தா யமுனையிலிருந்து நீர் குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு ஏறி வரும் அந்தக் காட்சியை நான் எப்படி வர்ணிப்பேன்?
அப்படியே இரண்டு வருடங்கள், இரண்டு நீர்ப் பறவைகள் யமுனையின் மறுகரையில் இருந்து இந்தக் கரைக்குப் பறந்து வருவதைப் போல, அவ்வளவு வேகமாக கடந்து போய்விட்டன.
நான் "சீதையின் தியாகம்’’ என்ற புதிய ஒரு காவியத்தை இயற்றும் வேலையில் ஈடுபட்டு, அதன் முதல் சுலோகத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தபோது, சாந்தா நாணம் கலந்த ஒரு புன்சிரிப்புடன் எனக்கு முன்னால் வந்து நின்றாள். அவளை அந்த அளவிற்குப் பேரழகுடன் முன்பு எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை என்று எனக்குத் தோன்றியது.
“செல்லமே, அங்கேயே அப்படியே நில்லு. கணவனுக்கு அருகில் வந்து சீதை நின்று கொண்டிருக்கும் கோலமும், முக வெளிப்பாடும் அப்படியே! நான் என்னுடைய காவியத்தின் முதல் சுலோகத்தில் அதைக் கொண்டு வரட்டுமா? கர்ப்பிணியாக இல்லை என்ற ஒரு குறை மட்டுமே உனக்கு இருக்கிறது.''
“அப்படியென்றால் அதுவும் நடந்த பிறகு இந்த சுலோகத்தை எழுதினால் போதும். இன்னும் எட்டு மாதங்கள் காத்திருக்கக் கூடாதா?''
அர்த்தம் நிறைந்த அந்த வார்த்தைகளைக் கேட்டு, ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் நான் சிறிது நேரம் அதிர்ந்து போய்விட்டேன். நான் பேனாவைக் கீழே வைத்துவிட்டு அவளுடைய கண்களையே அமைதியாகப் பார்த்தேன். எங்களுடைய திருமண வாழ்க்கையை ஆசீர்வதிப்பதற்காக ஒரு பைங்கிளி பறந்து வந்துகொண்டிருக்கிறதா என்ன?
நான் அவளுடைய மார்பின் கீழ்ப் பகுதியை அர்த்தம் நிறைந்த ஒரு திருட்டுப் பார்வையுடன் பார்த்தேன். அவள் புடவையைச் சரி செய்துவிட்டு, முன்னோக்கி வந்து என் கழுத்தைக் கட்டிப் பிடித்தாள். என் மார்பின்மீது தன் தலையை வைத்து ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.
"நீ ஒரு அப்பா ஆகிவிட்டாய்... நீ ஒரு அப்பா ஆகி விட்டாய்” - என் இதயம் அப்படி உரத்த குரலில் கூறுவதைப் போல எனக்குத் தோன்றியது. அந்த இளம் அன்னையின் கன்னத்தில் நான் தொடர்ந்து முத்தமிட்டேன். சாந்தாவின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகள் என் மார்பை நனைத்தன.
கர்ப்ப சுமையைச் சுமந்துகொண்டு நடக்கும் அவளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் அந்தப் புதிய ஆனந்தத்தில் நான் எல்லாவற்றை யும் மறந்துவிட்டேன். வசந்த நிலவைப் போல அவளுடைய கர்ப்பம் வளர்ந்தது. அந்தப் பௌர்ணமியை எதிர்பார்த்தவாறு நான் மன அமைதி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன். அன்றொரு நாள் சாந்தா என்னுடைய வலக் கையைப் பிடித்து மெதுவாக அவளுடைய வயிற்றின் இடப் பக்கத்தைத் தொடும்படிக் கூறியவாறு சொன்னாள். “இதோ... இங்கே தொட்டுப் பாருங்க. அந்த கில்லாடி பொடிப்பயல் கால்களை அசைக்கிறான். இவன் ஒரு மகா குறும்புக்காரப் பயல்தான்.''
நான் சாந்தாவின் வீங்கிய, மென்மையான, வெள்ளியைப் போல பிரகாசித்துக் கொண்டிருந்த வயிற்றைப் பாசத்துடன் மெதுவாகத் தடவினேன். அவள் வயிற்றுக்குள் உணர்ந்த குழந்தையின் அசைவை என்னால் உணர முடியவில்லை. அவளுடைய மலர்ந்த, நாணத்துடன் இருந்த, அழகான கண்களையே பாசத்துடன் பார்த்துக்கொண்டே நான் கேட்டேன். “அன்பே, அது ஒரு "இவன்” என்று நீ எப்படி தெரிந்து கொண்டாய்?''
சாந்தா என் உள்ளங்கையைப் பிடித்து அழுத்தியவாறு, வயிற்றைப் பார்த்துக்கொண்டே சொன்னாள்: “அதுதான் என் நம்பிக்கை''.
நான் அவளுடைய வெளிறிய வயிற்றையே கண்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். அதற்குள்ளே வெளிச்சத்தைப் பார்க்க ஏங்கியவாறு படுத்திருக்கும் ஒரு பச்சைக் குழந்தையின் உருவத்தை, ஒரு கனவில் பார்ப்பதைப் போல நான் பார்த்தேன். பிரசவமாகி வெளியே வந்த பிறகு அவன் கண்களைச் சிமிட்டிக் கொண்டு அழுவதையும், சாந்தாவின் மடியில் ஒரு தாமரை மலரைப் போல படுத்திருப்பதையும், என் சட்டையில் தேன் சொரியும் வாயிலிருந்து சாறை ஒழுக விட்டவாறு என்னுடைய மார்பில் படுத்து விளையாடுவதையும் நான் பார்த்தேன். கர்ப்பப்பையின் இருண்ட அறையில் அவனுக்கு நிலை கொள்ள முடியாமல் இருக்கலாம். உயிரின் முதல் அசைவுகளும், வாழ்க்கையின் என்னவென்று தெரியாத இனிய விஷயங்களும் அவனை அமைதி இல்லாமல் ஆக்கியிருக்கலாம். பாவம்- அவன் சாந்தாவின் கர்ப்பப்பைக்குள் அல்லவா கிடக்கிறான்? அப்படி ஒரு நிம்மதி மட்டுமே எனக்கு இருந்தது.
நான் அவளுடைய வயிற்றை முத்தமிட்டவாறு சொன்னேன்: “அவனுக்கு முதல் முத்தத்தை நானே தருகிறேனே!''
ஒரு புதிய அன்னையின் பெருமையை முகத்தில் காட்டியவாறு சாந்தா சொன்னாள்: “உங்களுடைய மீசை ரோமங்கள் குத்தி அவன் வயிற்றுக்குள் இருந்து கொண்டு அழாமல் இருந்தால் போதும்.''
நாங்கள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். திரைச்சீலைக்கு அப்பால் சுருண்டு படுத்திருந்த அந்த அருமைக் குழந்தை, குழந்தைப் பிரியர்களான எங்களுடைய வேடிக்கையான பேச்சுக்கள் எதையும் கேட்டிருப்பானா?
ஆனால், சகோதரரே! மனிதனின் கனவுகள் விதியின் சுடுகாட்டில் சாம்பல் குவியல்களாக மாறுகின்றன. விதியின் தூதனான "நாளை' ஒரு மகா வஞ்சகன்தான்.
அன்று இரவு உணவு சாப்பிட்டு முடித்து நாங்கள் வாசலில் இருந்த மாமரத்திற்குக் கீழே பூ நிலவின் பிரகாசத்தில் சந்தோஷத்துடன் இருந்தோம். களைப்புடன் சாந்தா என்னுடைய மடியில் சாய்ந்தாள்.
“தலைவலி... கடுமையான தலைவலி...'' -அவள் என் மார்பில் நெற்றியை வைத்துக்கொண்டு சொன்னாள்.
நான் மெதுவாக அவளுடைய முகத்தைப் பிடித்து உயர்த்தி நெற்றியைத் தடவினேன்.
“அய்யோ... தாங்க முடியவில்லை. என் தலை இப்போது வெடித்துச் சிதறிவிடும். நீங்கள் எங்கே? நீங்கள் எ...ங்...கே?''
“சாந்தா... சாந்தா...'' - நான் பதைபதைப்புடன் அழைத்தேன். பதில் இல்லை.
ஆமாம்- அவைதான் அவளுடைய இறுதி வார்த்தைகள். "நீங்கள் எங்கே?' மரணத்தின் கண்ணுக்குத் தெரியாத கைகள் அவளை கண்களுக்குப் புலப்படாத இருட்டுக்குள் இழுத்துக் கொண்டு போனபோது, எதுவும் செய்ய முடியாமல் அவள் உரத்த குரலில் கத்தினாள்: "நீங்கள் எங்கே? நீங்கள் எங்கே?'
என்னுடைய மடியில், வாழ்க்கை உறவு இல்லாமல் கிடந்த அந்தக் காதல் கொடியை வைத்துக்கொண்டு நான் நேரத்தைக் கடத்தினேன்... பிறகு நடைபெற்ற சம்பவங்களைத் தெளிவாக நினைத்துப் பார்க்க என்னால் முடியவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook