
கிராமத்து மக்கள் அவளுடைய பிணத்தை எடுத்துக்கொண்டு போய், யமுனையின் கரையில் ஒரு சிதையை உண்டாக்கி அங்கு வைத்தார்கள். அவளுடைய பிரசவ காலத்திற்காக சேர்த்து வைத்திருந்த விறகும், எண்ணெய்யும் அந்த சிதைக்கு அதிக உதவியாக இருந்தன. அந்த சிதையிலிருந்து சிதறித் தெறித்த நெருப்புப் பொறிகள் என்னுடைய மூளையைத் தட்டி எழுப்பின. வெளிச்சத்தைப் பார்ப்பதற்காக ஏங்கிக் கொண்டு கிடந்த அந்தக் குழந்தை, சிதையின் சிவந்த நெருப்பு ஜூவாலைகளில் வெந்து கரிந்து கொண்டிருக்கும் காட்சி என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்தது... உடம்பு முழுவதும் காயம் பட்ட நிலையில், என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனான கிஷோரி லாலின் வீட்டின் முன்னறையில் படுத்திருந்த கோலத்தில்தான் பிறகு நான் என்னைப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் அந்த சிதை அணைந்து உடல் சாம்பலாகி விட்டிருந்தது.
காளிந்தியின் அழகும் குளிர் வெண்ணிலாவும் சந்தித்த அந்தக் கனவு உலகத்தின் வழியாகக் கதை கூறிக்கொண்டு சென்ற எங்களுக்கு முன்னால், தூரத்தில் பழைய தில்லியின் மின் விளக்குகளின் வெளிச்சம் தெரிந்தது. வெண்ணிலாவில் சந்தன அரண்மனைகளைப் போல தோன்றிய அந்த மணல் மேடுகளைக் கடந்த நாங்கள், போலித்தனமும் அசுத்தமும் நிறைந்த பிரதான சாலைக்குள் நுழைந்தோம்- கனவில் இருந்து உண்மைக்கு.
நான் கவிஞனிடம் கேட்டேன்: “இந்தக் காவியத்தை பிரசுரகர்த்தாக் களிடம் விற்றால், உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?''
அவன் வருத்தத்துடன் சொன்னான்: “இருபத்தைந்து ரூபாய் கிடைத்தால் நான் அதிர்ஷ்டசாலி. கனவு உலகத்திலிருந்து கண்விழிக்கும்போது, நான் வயிறு உள்ள ஒரு மனிதப் பிறவி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வயிற்றுப் பிழைப்பிற்காக சிதையில் கிடந்து எரிந்துகொண்டிருக்கும் என்னுடைய அன்பு மனைவியையும், பிறக்காத குழந்தையையும் கவிதை மூலம் விற்கும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன். சகோதரரே, வாழ்க்கை என்பது அப்படித்தான்...''
நான் கவிஞனிடம் விடை பெற்றேன்.
பட்டினியைப் போக்குவதற்காக போலித்தனமும் கபடமும் நிறைந்த நகரத்துடன் நட்பு கொள்ளச் செல்லும் கிராமத்தின் அந்தக் கனவுப் புதையல் என் கண்களில் இருந்து மறைந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook