பிறந்த நாள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6749
ஜனவரி 19-ஆம் தேதி. இன்று எனது பிறந்தநாள். என்றைக்கும் இல்லாதது மாதிரி இன்று அதிகாலை நேரத்திலேயே படுக்கையை விட்டு எழுந்து காலைக்கடன்களை முடித்தேன். இன்றைக்கு அணிய வேண்டும் என்று எடுத்து வைத்திருந்த வெள்ளை நிற கதர் சட்டையையும், வெள்ளை நிற கதர் வேஷ்டியையும் வெள்ளை நிற கேன்வாஸ் ஷூவையும் அணிந்து அறையில் என்னுடைய சாய்வு நாற்காலியில் வெந்து போன இதயத்துடன் நான் மல்லாக்க சாய்ந்திருந்தேன்.
என்னை இந்த அதிகாலை வேளையில் இப்படிப்பட்ட கோலத்தில் பார்த்த- என் அறைக்குப் பக்கத்தில் தங்கியிருக்கும் பணக்கார வீட்டுப் பையனான பி.ஏ. மாணவன் மேத்யூ உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனான். அவன் மகிழ்ச்சி பொங்க என்னிடம் காலை வணக்கம் சொன்னான்.
"ஹலோ, குட்மார்னிங்.''
நான் சொன்னேன்: "யெஸ்... குட்மார்னிங்!''
அவன் கேட்டான்:
"என்ன, என்னைக்கும் இல்லாதது மாதிரி அதிசயமா இன்னைக்கு இந்த அதிகாலை வேளையிலேயே எழுந்து ரெடியா இருக்கீங்க! எங்கேயாவது போறீங்களா என்ன?''
"அதெல்லாம் ஒண்ணுமில்லை...''- நான் சொன்னேன்: "இன்னைக்கு என்னோட பிறந்த நாள்.''
"யுவர் பெர்த்டே?''
"யெஸ்...''
"ஓ... ஐ விஷ் யூ மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே!''
"தேங்க் யூ!''
மேத்யூ கையிலிருந்த டூத் பிரஷ்ஷால் பல் துலக்கியவாறு குளியலறைக்குள் நுழைந்தான். ஆங்காங்கே சில கூக்குரல்கள் கேட்டன. உரத்த சத்தங்களும் ஒலித்தன. சினிமா பாடல்களை யாரோ பாடினர். இங்கு தங்கியிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களும் க்ளார்க்குகளும்தான். மொத்தத்தில் இங்கிருக்கும் எல்லாருமே ஏதோ ஒருவிதத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தனர். இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை உல்லாசமயமான ஒன்றே. ஆனால், நானோ ஒரு தேநீர் குடிக்க என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். மதிய உணவைப் பற்றிக் கவலையே இல்லை. அது ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. நேற்று நான் பஜாரில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, கொஞ்சமும் எதிர்பாராமல் என்னைப் பார்த்த என் நண்பர் ஹமீத் என்னை மதிய உணவு சாப்பிட தன் வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தார்.அவர் ஒரு கவிஞர்- அதே நேரத்தில் ஒரு பணக்காரரும்கூட. அதற்காக மதியம் வரை தேநீர்கூட அருந்தாமல் இருப்பது என்பது சாதாரணமான ஒரு விஷயமா என்ன? சூடாக ஒரு தேநீர் குடிக்க வேண்டும். இதற்கு என்ன வழி? மேத்யூவின் வயதான வேலைக்காரன் அவனுக்குத் தேநீர் உண்டாக்கித் தரும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான் என்பதை என்னுடைய அறையில் உட்கார்ந்தவாறே என்னால் உணர முடிந்தது. இது எப்படிச் சாத்தியமாகிறது என்றால், நான் இருக்கும் அறைதான் மேத்யூவின் சமையலறையின் ஸ்டோர் ரூம் என்பதுதான்.
மாதமொன்றுக்கு எட்டு அணா (50 பைசா) வாடகைக்கு வீட்டு உரிமையாளர் எனக்கு வாடகைக்கு அந்த அறையை விட்டிருந்தார்.
கட்டிடத்திலேயே மிக மிக மோசமாக- தரம் தாழ்ந்த நிலையில் இருந்த அறை அதுதான். அதில் என்னுடைய சாய்வு நாற்காலி, மேஜை, அலமாரி, படுக்கை- இவற்றையெல்லாம் நீக்கிப் பார்த்தால் மூச்சுவிடக்கூட அங்கு இடம் கிடையாது. பெரிய சுவர்களுக்குள் அமைக்கப்பட்டிருந்த அந்த மூன்று மாடிக் கட்டிடத்தின் மேலேயும் கீழேயும் குடியிருப்பவர்கள் மாணவர்களும், அலுவலகங்களில் பணியாற்றும் க்ளார்க்குகளும்தான். வீட்டு உரிமையாளருக்குக் கொஞ்சம்கூட தேவையே படாத ஆள் நான் மட்டும்தான். என்னை அவருக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம்- சரியாக அவருக்கு நான் வாடகை தராமல் இருந்ததே.
என்னைக் கொஞ்சம்கூடப் பிடிக்காத வேறு இரண்டு ஆட்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஹோட்டல்காரனும், அரசாங்கமும். ஹோட்டல்காரனுக்கு நான் கொஞ்சம் பணம் பாக்கி தர வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை நான் தரவேண்டியது ஒன்றுமே இல்லை. இருந்தாலும், என்னைக் கண்டால் அதற்குப் பிடிக்காது. இருப்பிடம், உணவு, நாடு- இந்த மூன்றும் என் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இருக்கின்றன என்பதைக் கூறிவிட்டேன். இனி என்னுடைய ஆடைகளைப் பற்றியும், ஷூவைப் பற்றியும், விளக்கைப் பற்றியும் கூறப்போகிறேன். (எல்லா விஷயங்களையும் எழுதுவதற்கு முன்பு, ஒன்றைத் தெளிவாக விளக்கிவிட வேண்டும். இப்போது பாதி இரவு கழிந்திருக்கிறது. பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு நான் நகரத்தின் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன். எதற்காக அறையை விட்டு வெளியே வந்து இப்படி ஒவ்வொரு தெருவாக அலைந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா? ஒவ்வொரு நாளும் நான் டைரிக் குறிப்பு எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இன்றைய தேதிக்கு நான் டைரியில் நடந்த சம்பவங்களை எழுதியாக வேண்டும்.
ஒரு நல்ல சிறுகதைக்கு தேவையான விஷயங்கள் இதில் இருக்கும். ஆனால், என் அறையில் இருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. எழுத வேண்டியதோ நிறைய. விளைவு- அறையை விட்டு வெளியேறி நகரத் தெருக்களில் எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குகளின் காலில் சாய்ந்தவாறு அமர்ந்து டைரிக் குறிப்புகளை எழுதினேன்.) மழை பெய்யப்போகிற கார்மேகங்களைப்போல இன்றைய சம்பவங்கள் என் மனதில் நின்று என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியொன்றும் பெரிய சம்பவங்கள் இல்லை. ஆனால், இன்று என் பிறந்தநாள் ஆயிற்றே! நான் என் சொந்த ஊரை விட்டு வந்து பல மைல் தூரத்தில் இருக்கும் சம்பந்தமில்லாத ஊரில் இப்போது இருக்கிறேன். கையில் காசு என்று எதுவும் இல்லை. கடன் வாங்கவும் வழியில்லை. அணிந்திருக்கும் ஆடைகள்கூட என்னுடையவை அல்ல. என் நண்பர்களுக்குச் சொந்தமானவை அவை. என்னுடையது என்று கூற- சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை. இந்த அவல நிலையில் நான் இருக்க- "இதேபோன்ற பிறந்தநாள் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே இருக்கட்டும்” என்று மேத்யூ என்னை வாழ்த்தியபோது மனதில் வேதனை உண்டாகாமல் என்ன செய்யும்?
மணி ஏழு: நான் சாய்வு நாற்காலியில் இலேசாகச் சாய்ந்தவாறு சிந்திக்கிறேன். இன்றைய நாளை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஓட்டிவிட வேண்டும். யாரிடமும் இன்று கடன் வாங்கக் கூடாது குழப்பமான சம்பவங்கள் எதுவும் இன்று நடக்கக் கூடாது. நல்ல ஒரு நாளாக இன்றைய நாள் முடிய வேண்டும். நேற்று வரை இருந்த இரவு- பகல்களில் நடைபெற்ற கருப்பும் வெளுப்புமான சம்பவங்கள் இன்று ஒருநாள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நடக்கக் கூடாது. காரணம்- நேற்றைய நான் இல்லை இன்றைய நான். இன்று எனக்கு என்ன வயது? போன வருடம் இருந்ததைவிட ஒரு வயது இப்போது கூடியிருக்கிறது. அப்படியானால்... போன வருடம் என்னுடைய வயது
என்ன?.... இருபத்தாறு... இல்லை... முப்பத்து இரண்டு... இல்லை... நாற்பத்து ஏழாக இருக்குமோ?