பிறந்த நாள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6752
கடிதங்களைப் பக்கத்தில் வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் படுத்துக் கிடந்தேன். வங்கியில் க்ளார்க்காக வேலை பார்க்கும் கிருஷ்ண பிள்ளையின் வேலைக்காரச் சிறுவன் ஒரு தீக்குச்சி கேட்டு என்னிடம் வந்தான். அவனை ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி பருகினேன்.
"என்ன சார், உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்சினையா?'' பதினொரு வயது நடக்கும் அந்தப் பையன் கேட்டான்.
நான் சொன்னேன்: "அதெல்லாம் ஒண்ணுமில்ல!''
"பிறகு... சார்... நீங்க சாப்பிடலியா?''
"இல்ல...''
"என்ன சார்... இவ்வளவு நேரமாச்சு! இன்னுமா சாப்பிடாம இருக்கீங்க?''
சின்ன முகம். கறுத்த விழிகள். கரி அப்பியிருக்கும் வேஷ்டி. அவன் என்னையே பார்த்தான். நான் கண்களை மூடிக் கொண்டேன்.
மெதுவான குரலில் அவன் அழைத்தான்: "சார்...''
"ம்...''
நான் விழிகளைத் திறந்தேன்.
அவன் சொன்னான்: "என்கிட்ட ரெண்டணா இருக்கு.''
"அதுனால?''
அவன் தயங்கியவாறு சொன்னான்: "நான் அடுத்த மாசம் வீட்டுக்குப் போறதா இருக்கேன். சார்... அப்ப நீங்க எனக்கு இந்தக் காசைத் திருப்பித் தந்தாப் போதும்!''
என் இதயம் அழுதது: அல்லாஹுவே!
"கொண்டு வா!''
அதைக் கேட்காத மாதிரி, அவன் ஓடினான்.
அப்போது தோழர் கங்காதரன் வந்தார். வெள்ளை கதர் வேஷ்டி. வெள்ளை கதர்ஜிப்பா. மேலே போட்டிருக்கும் நீலச் சால்வை. கறுத்த முகம். காரியத்தோடு பார்க்கும் பார்வை.
சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருந்த என்னைப் பார்த்த அந்தத் தலைவர் சொன்னார்: "அடடா... நீ வர வர பெரிய பூர்ஷ்வாவே ஆயிட்டே!''
எனக்குத் தலை சுற்றுவது மாதிரி இருந்தது. இருந்தாலும், இதையெல்லாம் மீறி எனக்குச் சிரிப்பு வந்தது. என்னருகில் அமர்ந்திருந்த தலைவர் அணிந்திருந்த ஆடைகள் யாருடையதாக இருக்கும் என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். எனக்குப் பழக்கமான ஒவ்வொரு அரசியல் தலைவரையும், தொண்டனையும் மனக்கண்முன் கொண்டு வந்து பார்த்தேன். இவர்கள் கடைசியில் அடையப்போவது என்ன?
கங்காதரன் கேட்டார்: "நீ என்ன சிந்திச்சுக்கிட்டு இருக்கே?''
நான் சொன்னேன்: "ஒண்ணுமில்ல... நம்மளோட ஆடைகளைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன்.''
"தமாஷ் பண்றதை விட்டுட்டு நான் சொல்றதைக் கேளு. பெரிய கலாட்டாவே நடந்துக்கிட்டு இருக்கு. லத்தி சார்ஜ், கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு- எல்லாமே நடக்கப்போகுது. கிட்டத்தட்ட மூவாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்துல ஈடுபட்டிருக்காங்க. ஒண்ணரை வாரமா அவங்க பட்டினி கிடக்கிறாங்க. பெரிய அளவுல விஷயம் போகப்போகுது. மனிதர்கள் பட்டினி கிடக்கிறப்போ எது வேணும்னாலும் நடக்கும்!''
"நான் இந்த விஷயங்களை எந்தப் பத்திரிகையிலயும் படிக்கலியே!''
"பத்திரிகைகளுக்குச் செய்தி தரக்கூடாதுன்னு உத்தரவு!''
"அது சரி... நான் இதுல என்ன பண்ண முடியும்?''
"அவங்க பொதுக்கூட்டம் போடுறாங்க. நான்தான் தலைமை தாங்குறேன். அங்கே போகணும்னா படகுல போறதுக்கு படகோட்டிக்கு ஒரு அணா கூலி தரணும். பிறகு... நான் இதுவரை ஒண்ணும் சாப்பிடல... நீயும் என் கூட கூட்டத்துக்கு வா!''
"நீங்க சொல்றது சரிதான். ஆனா, என்கிட்ட காசு எதுவும் கிடையாது. நான் சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு. காலையில் விடிஞ்சதுல இருந்து இதுவரை நான் ஒண்ணுமே சாப்பிடல. போதாதற்கு இன்னைக்கு என்னோட பிறந்தநாள் வேறு.''
"பிறந்தநாள்... நமக்கென்ன பிறந்த நாள் வேண்டிக் கெடக்கு?''
"இந்தப் பிரபஞ்சத்துல இருக்குற எல்லாருக்குமே பிறந்தநாள்னு ஒண்ணு இருக்கே!''
இருவரும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே இருந்தோம். கங்காதரன் தொழிலாளிகளைப் பற்றியும், அரசியல் தொண்டர்களைப் பற்றியும், அரசியல் தலைவர்களைப் பற்றியும், அரசாங்கத்தைப் பற்றியும் பேசினார். நான் வாழ்க்கையைப் பற்றியும், பத்திரிகை முதலாளிகளைப் பற்றியும், இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பையன் வந்தான். ஒரு அணாவை நான் கையில் வாங்கினேன். மீதி இருந்த ஒரு அணாவுக்கு தேநீரும், பீடியும், தோசையும் வாங்கி வரச்சொன்னேன். தேநீர் காலணா, தோசை அரை யணா, பீடி காலணா.
தோசை கட்டப்பட்டு கொண்டு வரப்பட்ட அமெரிக்கப் பேப்பர் துண்டில் ஒரு படம் இருந்தது. அதை எனக்கு மிகவும் பிடித்தது. நானும் கங்காதரனும் தோசையைச் சாப்பிட்டோம். ஆளுக்கொரு டம்ளர் தண்ணீர் குடித்தோம். பிறகு கொஞ்சம் தேநீர் அருந்தினோம். எல்லாம் முடிந்து பீடியை உதட்டில் வைத்து புகைத்தோம். புகையை வெளியே விட்டவாறு கங்காதரன் கையில் ஒரு அணாவைக் கொடுத்தேன். புறப்படும் நேரத்தில் தாமாஷுக்காக கங்காதரன் கேட்டார்: "இன்னைக்கு உன்னோட பிறந்தநாள். உலக மக்களுக்கு ஏதாவது பிறந்தநாள் செய்தி சொல்லுறியா?''
நான் சொன்னேன்: "நிச்சயமா... புரட்சி சம்பந்தமா ஒரு செய்தி.''
"எங்கே சொல்லு பார்ப்போம்!''
"புரட்சியோட நெருப்பு ஜுவாலைகள் எல்லா இடங்களுக்கும் பரவட்டும். இன்றைய சமூக அமைப்பு முழுமையாக அழிந்து, சமத்துவம், அழகு, ஆரோக்கியம் கொண்ட புதிய உலகம் இங்கு உருவாகட்டும்!''
"பேஷ்... இன்னைக்கு நடக்குற தொழிலாளிகள் கூட்டத்துல இதை நான் சொல்லிடுறேன்''னு சொன்ன கங்காதரன் வேகமாக நடந்து சென்றார். நான் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். எழுத்தாளர்களைப் பற்றி எண்ணிப் பார்த்தேன். உலகில் உள்ள ஆண்கள்- பெண்கள் எல்லாரைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். இவர்கள் எல்லாம் எப்படி வாழ்கிறார்கள்? படுத்தவாறே தோசை கட்டிக் கொண்டு வரப்பட்ட அமெரிக்க செய்தித்தாள் துண்டை எடுத்தேன். அப்போது படியைக் கடந்து வீட்டு உரிமையாளர் "கடுகடு”வென்ற முகத்துடன் வருவதை நான் பார்த்தேன். படத்தை மீண்டும் பார்த்தேன். ஆகாயத்தை முட்டிக் கொண்டிருக்கும் உயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த பெரும் நகரம். அதன் நடுவில் தலையை மேல் நோக்கி உயர்த்தியவாறு நின்றிருக்கிறான் ஒரு மனிதன். இரும்பு சங்கிலியால் அவன் கால்கள் பூமியோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. இருந்தாலும், அவனின் பார்வை கட்டப்பட்டிருக்கும் சங்கிலிலோ பூமியின்மீதோ இல்லை. தூரத்தில்... பல கோடி மைல்களுக்கப்பால்... முடிவே இல்லாத தூரத்தில் கதிர்களை வீசிக் கொண்டிருக்கும் ஒளிமயமான சக்தியை நோக்கி... அந்த மனிதனின் கால்களுக்குப் பக்கத்தில் ஒரு புத்தகம் திறந்திருக்கிறது. அதன் இரண்டு பக்கங்களில் அந்த மனிதனின் என்றல்ல எல்லா மனிதர்களின் சரித்திரமும் எழுதப்பட்டிருக்கிறது இப்படி...
சங்கிலியால் அவனை மண்ணோடு சேர்த்து கட்டிப் போட்டாலும், அவன் பார்வை வேறு எங்கோதான். காலங்களைக் கடந்து அவன் பார்வை நாளையை நோக்கி!
அந்த "நாளை” எப்போது வரும்?
"என்ன மிஸ்டர்?'' வீட்டு உரிமையாளரின் குரல்: "இன்னைக்காவது கிடைக்குமா?''
நான் சொன்னேன்: "பணம் இன்னும் கைக்கு வரல. கூடிய சீக்கிரம் தர்றேன்.''