
நான் திரும்ப நடந்தேன். நடந்து வந்த பாதையில் போட்டிருந்த மணல் பயங்கரமாகச் சுட்டது. உஷ்ணம் உடலைக் தகித்துக் கொண்டிருந்தது. கடுமையான வெயிலால் கண்கள் இருட்டிப்போன மாதிரி இருந்தன. உடலில் தாங்க முடியாத களைப்பு. நான்கைந்து பேர் அடித்துப் போட்ட மாதிரி உடம்பில் அப்படியொரு வலி. தாகம்! பசி! வெறி! உலகத்தையே வாய்க்குள் போட்டு விழுங்கினால் என்ன என்ற வெறி. எண்ணியது நடக்கவில்லை என்கிறபோது, உலகத்தின் மீதே ஒருவித வெறுப்பு வந்தது. நமக்குத் தேவையானது கிடைக்கவில்லை என்றால் இந்த உலகம் எதற்கு? இது இருந்தால் என்ன அழிந்தால் என்ன? யாருக்குக் கவலை? தாகத்தாலும் பசியாலும் மயங்கிக் கீழே விழுந்துவிடுவேன்போல இருந்தது. ஆனால், விழவில்லை... விழக்கூடாது... நடக்க வேண்டும்... நடந்தே ஆக வேண்டும்.
மணி பன்னிரண்டரை: எனக்கு நன்கு தெரிந்த மனிதர்கள் பலரும் சாலையில் நடந்து போய்க் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் யாருமே என்னைக் கண்டும் காணாதது மாதிரி நடந்து கொண்டார்கள்.
"நண்பர்களே, இன்னைக்கு என்னோட பிறந்தநாள். என்னைக் கொஞ்சம் வாழ்த்திட்டுப் போகக்கூடாதா?” என்று என் இதயம் ஏங்கியது. ஆனால், யார் காதிலாவது அது விழுந்தால்தானே! அவர்கள் தங்கள் போக்கில் போய்க் கொண்டே இருந்தார்கள். நண்பர்கள் ஏன் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை? எனக்கே புரியவில்லை.
எனக்குப் பின்னால் ஒரு சி.ஐ.டி.
மணி ஒன்று: முன்னாள் பத்திரிகை முதலாளியும் இப்போதைய வியாபாரியுமான மிஸ்டர் பி.யைத் தேடிப் போனேன். பசி மயக்கத்தால் கண்ணே சரியாகத் தெரியவில்லை.
பி. என்னைப் பார்த்துக் கேட்டார்: "புரட்சி எந்த அளவுல இருக்கு?''
நான் சொன்னேன்: "கிட்டத்தட்ட வந்த மாதிரிதான்!''
"என்ன... ஆளை ரொம்ப நாளா காணோம்?''
"ஆமா...''
"விசேஷம் ஏதாவது உண்டா?''
"ம்... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை... சும்மா பார்க்கலாம்னு வந்தேன்!''
நான் அவருக்கு அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். நான் எழுதிய பல கட்டுரைகள் இவரின் பெயரில் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. இவரின் பழம் பெருமைகளைக் காட்டுவதற்காகப் பழைய பத்திரிகைகளை இவர் "பைண்ட்” செய்து வைத்திருந்தார். நான் அதை எடுத்து தலைவலியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். "எனக்கு உடனடியாக சூடா ஒரு தேநீர் வேணும். நான் ரொம்ப களைச்சுப் போயிட்டேன்” என்று என் இதயம் அடித்துக்
கொண்டிருந்தது. பி. என்னிடம் எதுவுமே பேசவில்லை. என் உடல் வருத்தத்தை இந்த மனிதர் உணரவில்லையா என்ன? பி. பணப்பெட்டிக்கு அருகில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். நான் மவுனமாகத் தெருவைப் பார்த்தேன். சாக்கடையில் கிடந்த ஒரு துண்டு தோசைக்காக இரண்டு பிச்சைக்கார சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். "ஒரு சூடான தேநீர்”- பி.யின் குரல். அவ்வளவுதான்- என் மவுனம் இருந்த இடம் தெரியாமல் கலைந்தது. மிஸ்டர் பி. பெட்டியைத் திறந்தார். ரூபாய்களுக்கும் சில்லறைகளுக்கும் மத்தியில் தேடிப்பிடித்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையன் கையில் கொடுத்தார்.
"தேநீர் கொண்டு வாடா.''
அடுத்த நிமிடம் பையன் ஓடினான். என் இதயம் குளிர்ந்தது. மிஸ்டர் பி. எவ்வளவு நல்ல மனிதர்?... பையன் கொண்டு வந்த தேநீரைக் கையில் வாங்கிய பி. அதைக் குடிக்க ஆரம்பித்தார். பின்னர் என்ன நினைத்தாரோ, என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்துக் கேட்டார்:
"உங்களுக்குத் தேநீர் வேணுமா?''
நான் சொன்னேன்: “வேண்டாம்...''
ஷூவின் கயிறைச் சரி பண்ணுவது மாதிரி நான் நடித்தேன். என் முகத்தை அவர் எங்கே பார்த்து, அதில் தெரியும் கவலையின் ரேகைகளையும், சோகம் கப்பிப் போயிருக்கும் அவலத்தையும் கண்டுபிடித்து விடுவாரோ என்ற எண்ணம் எனக்கு.
பி. வருத்தத்துடன் சொன்னார்: "உங்களோட புத்தகங்கள் எதையும் எனக்கு நீங்க தரலியே!''
நான் சொன்னேன்: "தர்றேன்!''
"அந்தப் புத்தகங்களைப் பற்றி பத்திரிகைகள் எழுதுற விமர்சனங்களை நான் படிக்கிறேன்.''
நான் சொன்னேன்: "நல்லது...''
சொல்லிவிட்டு புன்னகைக்க முயன்றேன். இதயத்தில் ஒளியே இல்லாமல் முகத்தில் மட்டும் அது எப்படி வரும்?
நான் பி.யிடம் சொல்லிவிட்டு, தெருவில் இறங்கி நடந்தேன்.
எனக்குப் பின்னால் மீண்டும் அந்த சி.ஐ.டி.!
மணி இரண்டு: நான் மிகவும் களைத்துப்போய் அறையில் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். நல்ல ஆடைகள் அணிந்து, வாசனைத் திரவியங்களை உடலில் பூசியிருக்கும் முன்பின் பழக்கமில்லாத ஒரு பெண் என் அறை வாசல் அருகில் வந்து நின்றாள். வெள்ளப் பெருக்கால் அவளின் ஊர் அழிந்துவிட்டது. ஏதாவது உதவி செய்ய வேண்டும்! புன்சிரிப்பு தவழ, அவள் என்னைப் பார்த்தாள். மார்பைக் கதவில் உரசியவாறு என்னையே உற்று நோக்கினாள். அவ்வளவுதான்- எனக்குள் இனம் புரியாத ஒரு உன்மத்த நிலை உண்டானது. அது சிறிது நேரத்தில் நாடி நரம்புகளில் எல்லாம் படர்ந்தது. என் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது. அதன் துடிப்பை என்னால் உணர முடிந்தது. உண்மையிலேயே பயங்கரமான நிமிடங்கள்தாம் அவை!
"சகோதரி... என்கிட்ட பணம் ஒண்ணும் இல்ல... நீங்க வேற யாரையாவது பார்த்துக் கேளுங்க... என்கிட்ட எதுவுமே இல்லை...''
"ஒண்ணுமே இல்லியா?''
"இல்ல...''
அப்போதும் அவள் போகவில்லை. நின்று கொண்டே இருந்தாள். உரத்த குரலில் நான் சொன்னேன்: "போங்க. என்கிட்ட காசு எதுவும் இல்ல...''
"ஓ...'' அவள் கவலை தோய்ந்த முகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் போன பிறகுகூட அவள் அங்கு விட்டுச் சென்ற நறுமணம் கமழ்ந்து கொண்டே இருந்தது!
மணி மூன்று: யாரிடமாவது கடன் கேட்டுப் பார்த்தால் என்ன? பயங்கரக் களைப்பு. உடலில் தெம்பே இல்லை. யாரிடம் கேட்பது? பல பேர் என் மனதில் வந்தார்கள். ஆனால், கடன் வாங்குவது என்பது நட்பின் மரியாதையைக் குறைக்க கூடிய ஒரு செயல் என்பது என் எண்ணம். பேசாமல் இறந்துவிட்டால் என்ன என்றுகூட நினைத்தேன். மரணம்! எப்படி மரணத்தை வரவழைப்பது?
மணி மூன்றரை: நாக்கு வறண்டு போய்விட்டது. என்னால் ஒன்றுமே முடியவில்லை. குளிர் நீரில் கொஞ்ச நேரம் மூழ்கி எழுந்தால் என்ன? உடம்பில் சிறிது குளிர்ச்சி பரவினது மாதிரி இருக்குமே!... இப்படி நினைத்தவாறு நான் சாய்வு நாற்காலியில் கிடக்க, சில பத்திரிகை அதிபர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். கதைகள் உடனே அவர்களுக்கு வேண்டுமாம். உடனே எழுதி அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook