பிறந்த நாள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6752
என் மனதில் தாங்க முடியாத அளவிற்குக் கவலை. எழுந்துபோய் கண்ணாடியை எடுத்து, அதில் என் முகம் எப்படி இருக்கிறதென்று பார்த்தேன். அப்படியொன்றும் மோசமில்லை. பார்ப்பதற்குப் பரவாயில்லை என்பது மாதிரி இருந்தது. நல்ல அகலமான நெற்றி, அசைவே இல்லாத கண்கள், வளைந்த வாள்போல மீசை- மொத்தத்தில் மோசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியைப் பார்த்து என் மனதில் உண்டான வேதனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஒரு நரைமுடி! என் காதுக்கு மேலே கருப்பு முடிகளுக்கு மத்தியில் ஒரு வெள்ளை முடி தெரிந்தது. அதை நான் மிகவும் கஷ்டப்பட்டுப் பிடுங்கி ஏறிந்தேன். தலையைத் தடவிப் பார்த்தேன். தலையின் பின்பக்கம் முழுக்க வழுக்கை. அதை நான் கையால் தடவிக் கொண்டிருந்தபோது, தலைவலி வருவதுபோல் உணர்ந்தேன். சூடாக தேநீர் அருந்தினால்தான் சரியாக வருமோ!
மணி ஒன்பது: என்னைக் கண்டவுடன் "உம்”மென்று முகத்தை வைத்துக் கொண்டு ஹோட்டல்காரன் அறைக்குள் வந்தான். தேநீர் போடும் அழுக்கடைந்து போயிருக்கும் பையன் அவன். நான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டான்.
நான் சொன்னேன்: "ஓ... அதை நாளைக்குத் தர்றேன்.''
அவன் அதை நம்பவில்லை. "நேத்தும் இதைத்தான் சொன்னீங்க'' என்றான்.
"இன்னைக்குப் பணம் வரும்னு நினைச்சேன். ஆனா வரலியே!''
"பழைய காசைத் தராம, உங்களுக்கு தேநீர் தரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க...''
"அப்படியா?''
மணி பத்து: உதடு வறண்டு போய்விட்டது. வாய் உலர்ந்து போயிருந்தது. வெளியே வெயில் காய்ந்து கொண்டிருந்தது. அதன் உஷ்ணம் அறைக்குள்ளும் தெரிந்தது. உடல் மிகவும் களைத்துப் போனதுபோல் உணர்ந்தேன். அப்போது புதிய காலணி விற்கும் எட்டு, பத்து வயது மதிக்கக் கூடிய இரண்டு வெளுத்த- மெலிந்துபோய் காணப்படும் கிறிஸ்துவப் பையன்கள் என் அறை வாசலில் வந்து நின்றனர். நான் காலணி வாங்கத்தான் வேண்டும். ஒரு ஜோடி காலணி மூன்று அணா வாம். (ஒரு அணா- ஆறு பைசா. ஒரு ரூபாய்- பதினாறு அணா)- பையன்கள் சொன்னார்கள்.
"வேண்டாம்... பிள்ளைகளே!''
"சார்... உங்களைப்போல உள்ளவங்க வாங்கலைன்னா, பிறகு யார் வாங்குறது!''
"பிள்ளைகளே! எனக்கு வேண்டாம். என் கையில காசு இல்ல...''
"ஓ...''
நான் சொன்னதை அந்தப் பையன்களால் நம்பவே முடியவில்லை. பால் வடியும் முகத்தோடு என்னையே பார்த்தார்கள். ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாத சுத்தமான மனதைக் கொண்ட சிறுவர்கள்! பந்தாவாக ஆடையணிந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு இருக்கும் என்னை நானே ஒரு நிமிடம் மேலிருந்து கீழ்வரை கண்களால் பார்த்தேன். உண்மையிலேயே நான் ஒரு "சார்” மாதிரி தெரிகிறேனா? சாய்வு நாற்காலி, சட்டை, வேஷ்டி, ஷூ எதுவுமே எனக்குச் சொந்தமானது அல்ல. பிள்ளைகளே! சொல்லப்போனால்
எனக்கென்று சொந்தமாக இந்த உலகத்தில் ஒன்று கூடக் கிடையாது. நிர்வாணமான நான்- அது எனக்குச் சொந்தமானதா? இந்தியாவின் ஒவ்வொரு நகரமாக எத்தனையோ வருடங்கள் தெருத் தெருவாக பல ஜாதிகளாக அலைந்து திரிந்து, தங்கி... நான் யாருக்குச் சொந்தம்? என்னுடைய ரத்தமும், சதையும், எலும்பும் இந்தியாவுக்குச் சொந்தமானது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை- கராச்சி முதல் கல்கத்தா வரை- இப்படி இந்தியாவின் எல்லா இடங்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ஆண்களும், பெண்களுமாய் இருக்கின்ற அந்த என் நண்பர்களை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். நினைவு...! ஒவ்வொருவரையும் மனதார கட்டித் தழுவி என்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறேன். என் அன்பு இந்தியா முழுக்க பரவட்டும்! இந்தியாவைத் தாண்டி... பூமியைத் தாண்டி... மணம் கொண்ட மலர்களைப்போல அது பரவட்டும்! அன்பு! என்மேல் உண்மையாகவே அன்பு கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? அதாவது- என்னைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்தக் கூடியவர்கள்... புரிந்து கொண்டு என்றால் திரையை நீக்கிப் பார்த்தால் என்ற எண்ணத்தில் கூறுகிறேன். குறைகளையும், பலவீனங்களையும் நீக்கிப் பார்த்தால் மீதம் இருப்பது என்ன? நமக்குப் பிடித்த மாதிரி ஏதாவது இருக்க வேண்டும். அன்பு காட்டவும், அன்பு காட்டப்படுவதற்கும்... ஓ... காலம் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது! தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொண்டே கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த நான்- "அம்மா பசிக்குது” என்று தாயின் புடவை நுனியைப் பிடித்துக் கொண்டு தொங்கிய நான்- இன்று...? ஓ... காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டிருக்கிறது! மனதில் வைத்திருந்த எத்தனை எத்தனை லட்சியங்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன! சொல்லப்போனால் என் இதயத்தை ஒரு மிகப்பெரிய போர்க்களம் என்றுகூடக் கூறலாம். இன்று நான் யார்? புரட்சிக்காரன், தேசத்துரோகி, தெய்வத்துரோகி, கம்யூனிஸ்ட்- இன்னும் என்னென்னவோ நான்.
உண்மையிலேயே இதெல்லாம் நானா? அய்யோ... என்ன வலி! தலைக்குள்ளிருந்து ஒரே குத்தல். தேநீர் அருந்தாமல் இருப்பதால் இப்படித் தலைவலி உண்டாகிறதோ? நேராகத் தலையை வைக்க முடியவில்லை. போய் சாப்பிட வேறு செய்ய வேண்டும். தலைவலியோடு ஒரு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டியதுதான். வேறு வழி? இருந்தாலும், வயிறு நிறைய இன்று ஒரு நாளாவது சாப்பிடலாமே!
மணி பதினொன்று: ஹமீத் கடையில் இல்லை. வீட்டில் இருப்பாரோ? என்னையும், போகும்போது தன்னுடன் அழைத்துப் போயிருக்க வேண்டும். அதுதான் மரியாதை. ஒருவேளை அவர் மறந்து போயிருக்கலாம். நாமே வீட்டிற்குப் போனால் என்ன? அதுதான் சரி.
மணி பதினொன்றரை: ஹமீதின் பெரிய மாளிகையின் தகரத்தால் ஆன வெளிக்கதவு அடைக்கப்பட்டிருந்தது. நான் அதைத் தட்டினேன்.
"மிஸ்டர் ஹமீத்...''
பதில் இல்லை.
"மிஸ்டர் ஹமீத்...''
கோபம் கலந்த ஒரு பெண்ணின் குரல்:
"இங்க அவர் இல்ல...''
"எங்கே போயிருக்காரு?''
ஒரே அமைதி. மீண்டும் நான் கதவைத் தட்டினேன். மனம் மிகவும் தளர்ந்து போயிருந்தது. பேசாமல் திரும்பி நடக்கலாமா என்று நினைத் தேன். அப்போது யாரோ பக்கத்தில் வரும் காலடிச் சப்தம். தொடர்ந்து வளையல் ஓசை. வாசல் கதவு இலேசாகத் திறந்தது- ஒரு பெண்!
நான் கேட்டேன்: "ஹமீது எங்கே போயிருக்கார்?''
"ஒரு முக்கியமான விஷயமா வெளியே போயிருக்கார்''- அமைதியான குரலில் அந்தப் பெண் பதில் சொன்னாள்.
"எப்போ அவர் வருவாரு?''
"சாயங்காலத்திற்குப் பிறகு...''
சாயங்காலம் கழிந்தா?
"அவர் வர்றப்போ நான் வந்தேன்னு சொல்லுங்க.''
"நீங்க யாரு?''
நான் யார்?
"நான்... ஓ... நான் யாருமில்ல... ஒண்ணும் சொல்ல வேண்டாம்!''