பிறந்த நாள் - Page 7
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6752
மணி பத்து: திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு வியர்வையில் குளித்த உடம்புடன் நான் சமையலறையைவிட்டு வெளியே வந்தேன். கிழவன் திரும்பி வந்தபோது நான் குழாயின் அருகில் சென்று தண்ணீர் குடித்து முடித்து, கை, கால், முகம் ஆகியவற்றைக் கழுவி, திரும்பவும் என் அறைக்கு வந்து ஒரு பீடியை உதட்டில் வைத்து புகைத்தேன். மிகமிக ஆனந்தமான அனுபவம். இருந்தாலும் ஒருவித களைப்பை உடலில் உணர முடிந்தது. அப்படியே போய்ப் படுத்தேன். தூக்கம் வரவில்லை.
பலவித சிந்தனைகளும் மனதில் உண்டாயின. கிழவன் நான் சாப்பிட்டதைக் கண்டுபிடித்திருப்பானா? அவனுக்குத் தெரிந்தால், அடுத்து இந்த விஷயம் மேத்யூவின் காதுகளுக்குப் போகும். பிறகு... இதே விஷயம் மாணவர்களுக்கும், க்ளார்க்குகளுக்கும் தெரியவரும். எல்லாரும் கேவலமாக நினைப்பார்கள். என்ன ஆனாலும் சரி... நடப்பது நடக்கட்டும். பிறந்தநாள்! மகிழ்ச்சியாக உறங்கலாம். எல்லாருடைய எல்லா பிறந்த நாட்களும்... மனிதன்... அப்பாவி மனிதன்... வறுமையின் பிடியில் சிக்கிக்கிடக்கும் ஏழை மனிதன் சிறிது நேரத்தில் நான் என்னை மறந்து அப்படியே மயங்கிப் போனேன். அப்போது என்னுடைய அறையை நோக்கி யாரோ நடந்துவரும் சத்தம்!
"ஹலோ மிஸ்டர்...'' மேத்யூவின் குரல்! அவ்வளவுதான். எனக்கு உடம்பு "குப்”பென வியர்த்து விட்டது. உறக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி விட்டதுபோல் இருந்தது. எனக்குப் புரிந்துவிட்டது யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக சமையலறைக்குள் நான் போய் சாப்பிட்ட விஷயம் எப்படியோ மேத்யூவிற்குத் தெரிந்து விட்டது. கிழவன் கண்டுபிடித்திருப்பான். நான் கதவைத் திறந்தேன். இருட்டின் இதயத்தில் இருந்து என்பது மாதிரி ஒரு டார்ச் விளக்கு! அதன் பிரகாசமான வெளிச்சத்தில் நான்! மேத்யூ என்னிடம் என்ன கேட்கப் போகிறான்? இதயம் பயத்தால் நூறு துண்டுகளாகச் சிதறிவிடும்போல் இருந்தது.
மேத்யூ சொன்னான்:
"படம் பார்க்கப் போயிருந்தேன். விக்டர் ஹ்யூகோவின் "பாவங்கள்”. நீங்க கட்டாயம் பார்க்க வேண்டிய அருமையான படம்!''
"அப்படியா?''
"சரி... நீங்க சாப்பிட்டுட்டீங்களா? எனக்குப் பசியே இல்ல. சாதம் வீணாயிடும். வந்து சாப்பிடுங்க வர்ற வழியில "மாடர்ன் ஹோட்டல்”ல நாங்க சாப்பிட்டுட்டோம்.''
"தேங்க்ஸ்... நான் ஏற்கெனவே சாப்பிட்டாச்சு.''
"ஓஹோ... அப்படின்னா... படுத்துத் தூங்குங்கோ... குட்நைட்...''
"குட் நைட்...!''