முதல் கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6878
ஒரு வீழ்ச்சியுடன் ஆரம்பிக்கிறது- ஒரு சைக்கிள் விபத்து.
அப்போது நான் ஒரு விளையாட்டுப் பொருட்களின் ஏஜென்டாக இருந்தேன். கம்பெனி சியால்கோட்டில் இருந்தது. ஒன்பது பத்து வருடங்கள் இந்தியா முழுக்கப் பயணம் செய்து முடித்துவிட்டு வந்திருந்தேன். பயணம் அகில இந்தியாவில் மட்டுமல்ல. கப்பலில் ஒரு கலாஸியாக அரேபியாவில் இருக்கும் ஜித்தா வரை சென்றேன். விளையாட்டுப் பொருட்களின் ஏஜென்டாக எர்ணாகுளத்திற்கு வந்திருந்தேன். ஒரு ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அன்று நான் ஒரு நாகரீக மனிதனாக இருந்தேன். சுருள் முடி, தொப்பி, டை, கோட்டு, ட்ரவுசர், சாக்ஸ், ஷூ.
அந்தக் காலத்தில் எர்ணாகுளத்தில் ஒரு சாப்பாட்டுக்கு ஒரு அணா விலை. அதாவது- ஆறு பைசா. தேநீருக்கு காலணா. கால் ரூபாய் இருந்தால் ஒரு நாள் பரம சுகத்துடன் இருக்கலாம். பெரிய கம்பீரமான ஹோட்டல்களில் ஒரு சாப்பாட்டுக்கு இரண்டணா விலை. ஹாஸ்டலில் தங்கினேன். சாப்பாடும் தேநீரும் ஹோட்டல் களில்.
ஒரு நாள் மதிய நேரம் நான் சைக்கிளில் வந்து கொண்டிருந் தேன். விளையாட்டுப் பொருட்கள் இருந்த தோல் பையை சைக்கிளின் விளக்கு காலில் தொங்க விட்டிருந்தேன். இடம்- சண்முகம் சாலை. அங்கு சிறிய இறக்கம் இருக்கும். இறக்கத்தில் இறங்கி வேகமாக சைக்கிளில் செல்கிறேன். அந்தச் சமயத்தில் பெட்டியின் கைப்பிடி விலகிவிட்டது. பெட்டி சைக்கிளின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. நான் ஒரு மூட்டையைப் போல சிதறி விழுந்தேன்.
அந்தக் கோலத்தில் ஹாஸ்டலில் கிடக்கிறேன். நடக்க மிகவும் சிரமம். முழங்காலிலும் கையிலும் தோல் நிறைய போய்விட்டது. சில நாட்கள் படுத்திருந்தேன். கையிலிருந்த காசெல்லாம் செலவாகிவிட்டது. சாம்பிளாகக் கிடைத்திருந்த விளையாட்டுப் பொருட்களை விற்று சாப்பிட்டாகிவிட்டது. தொப்பியையும் டையையும் கோட்டையும் மாற்றிவிட்டேன். ட்ரவுசருக்கு வெளியே சட்டை வந்தது. அப்படியே நடப்பேன். ஒரு வேலையும் இல்லை. கையில் காசும் இல்லை. வைக்கம் தலயோலப்பறம்பில் இருந்த வீட்டில் மிகவும் கஷ்ட நிலை. வாப்பாவிற்கு மர வியாபாரம். அது நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்தது. வீடும் நிலங்களும் அடமானத்தில் இருந்தன. இரண்டு சகோதரிமார்கள் திருமண வயதை அடைந்திருந்தார்கள். மூன்று சகோதரர்கள் இருந்ததில் யாருக்கும் குறிப்பிட்டுக் கூறுகிற வகையில் வேலை எதுவும் இல்லை. எனக்கு அடுத்த தம்பி அப்துல் காதர் பள்ளிக்கூடத்தில் மலையாள ஆசிரியராக இருந்தான். பாதி சம்பளம்தான் கிடைக்கும். (குடும்பத்தைப் பற்றிப் பிற்காலத்தில் "பாத்தும்மாவின் ஆடு' என்ற நூலில் கூறியிருக்கிறேன்).
நான் ஒரு வழியும் இல்லாமல் எர்ணாகுளத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். என்ன செய்வது? அடுத்த ப்ரோக்ராம் என்ன? முன்பு பயணத்திற்கு முன்னால் அரசியல் தொண்டனாக இருந்தேன். சிறையில் இருந்திருக்கிறேன். அதற்குப் பிறகு பத்திரிகையாளனாக இருந்தேன். தீவிர அமைப்பைச் சேர்ந்த வனாகவும். அப்படித்தான் நாடு முழுக்கப் பயணம் செய்தேன். நான் சிந்தித்தேன். அரசியல்வாதியாக ஆக வேண்டாம். இலக்கிய வாதியாக ஆகலாம். ஒரு முடிவுக்கு வந்தேன். இலக்கியத்தில் கவிதையா, உரைநடையா? கவிதைகள் எழுத வேண்டுமா, கதைகள் எழுத வேண்டுமா? இரண்டும் தெரியாது. மொழியும் சிரமமாக இருந்தது. எழுத்துக்கள் அனைத்தும் சரிவரத் தெரியாது. எனினும், உரைநடை எழுதலாம். எவ்வளவோ வாழ்க்கை அனுபவங்கள் இருக்கின்றன. அப்போது அது எதைப் பற்றியும் நினைக்கவில்லை. எப்படியிருந்தாலும் எழுத்தாளனாக ஆவது என்பதில் உறுதியாக இருந்தேன். எதை எழுதுவது? ஒரு வடிவமும் கிடைக்கவில்லை.
முதலில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று பார்ப்போம். அந்த நோக்கத்துடன் வெளியேறி சுற்றினேன். எவ்வளவோ நடந்தேன். பல கடைகளிலும் பார்த்தேன். நடந்து களைத்துப் போய் அப்படி வரும்போது- ஜெயகேசரி!
ஒரு பத்திரிகை அலுவலகம். அங்கு நுழைந்தேன். வெளுத்த பிரகாசமாக முகத்தைக் கொண்ட ஒரு மனிதர் மேஜைக்கு அருகில் அமர்ந்து ப்ரூஃப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னார்:
“உட்காருங்க சார்.''
நான் நாற்காலியில் உட்கார்ந்தேன். விவரத்தைச் சொன்னேன். அவர் சிரித்தார். அவர் சொன்னார்:
“பத்திரிகை ஆசிரியர், ப்ரூஃப் ரீடர், எழுத்தாளன் எல்லாமே நான்தான். பேப்பர் வாங்கிக்கொண்டு வருவதும் நான்தான். நான் பத்திரிகை எடுத்துக்கொண்டு போய் விற்பது இல்லை என்பதொன்றுதான் பாக்கி. வேலை தருவதற்கு வாய்ப்பில்லை. ஏதாவது எழுதிக்கொண்டு வந்தால், நான் பிரசுரிக்கிறேன்.''