முதல் கதை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6879
“என்ன எழுதணும்? கதையா, கவிதையா?''
“எதை வேணும்னாலும் எழுதுங்கோ.''
“சரி...''
நான் போய் ஒரு கதையை எழுதிக் கொண்டு வந்து கொடுத்தேன். அவர் அதை ஜெயகேசரியில் பிரசுரம் செய்தார். ஜெயகேசரி வார இதழாக வந்து கொண்டிருந்தது. விலை கால் அணா என்று நினைக்கிறேன். பத்திரிகை ஆசிரியர் பத்மனாப பை. நான் மூன்று கதைகளை ஜெயகேசரியில் எழுதினேன். சாப்பாடும் தேநீரும் சற்று முன்னாலிருந்த சிறிய ஹோட்டலில். அங்கு தரவேண்டிய பணம் அதிகம் ஆனபோது, பத்திரிகை ஆசிரியர் எனக்கு பதினோரு அணா கொடுத்தார். கிட்டத்தட்ட முக்கால் ரூபாயை நெருங்கி வரும். அதை ஹோட்டலில் கொடுத்தேன். அந்தப் பதினோரு அணாதான் முதல் சன்மானம். (பிற்காலத்தில் ஒரு சிறுகதைக்கு நூற்றைம்பதிலிருந்து ஆயிரம் ரூபாய் வரை சன்மானம் கிடைத்திருக்கிறது). அந்தப் பதினோரு அணா பெரிய விஷயமாகத் தோன்றியது. பெரும்பாலான நேரமும் பத்திரிகை அலுவலகத்தில்தான். நான் ப்ரூஃபையும் பார்த்துக்கொண்டிருந் தேன். நாங்கள் மிகவும் நெருக்கமானோம். நான் சொன்னேன்:
“என் மொழி மிகவும் மோசமாக இருக்கும். ஒன்பது பத்து வருடங்களில் மலையாளத்தை மறந்து விட்ட மாதிரிதான். ஆங்கிலத்தையும் இந்துஸ்தானியையும்தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். சிந்திப்பதுகூட அந்த மொழிகளில்தான். மலையாளத்தைச் சரி பண்ண என்ன வழி?''
அவர் சொன்னார்:
“மொழியைச் சரி பண்ண மலையாளப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை என்றொருவர் "ரமணன்' என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதை வாசித்தால் புதிய சொற்கள் கிடைக்கும். கிருஷ்ணபிள்ளையின் இரண்டு நண்பர்கள் தான் அதை பிரசுரம் செய்திருக்கிறார்கள். எ.கெ. ஹமீதும் சி.கெ. பாவாவும். எ.கெ. ஹமீத் ஒரு கவிஞர். சி.கெ. பாவா ஒரு பத்திரிகை யாளர். எ.கெ. ஹமீதிற்கு துணி வியாபாரம். சி.கெ. பாவாவிற்கு ஒரு இரும்புக்கடை இருந்தது. அவர்கள் ஆயிரம் பிரதிகளை அச்சடித்தார்கள். சங்ஙம்புழ 250 பிரதிகளைக் கொண்டு போனார். அந்த புத்தகம் விற்பனை ஆகவேயில்லை. கட்டிக் கிடக்கிறது. ஒரு புத்தகம் கிடைக்குமா என்று பாருங்கள்.''
நான் சி.கெ. பாவாவின் இரும்புக்கடைக்குச் சென்றேன். அங்கு "ரமணன்” கட்டப்பட்டுக் கிடக்கிறது. சி.கெ. பாவா எனக்கு ஒரு புத்தகத்தைத் தந்தார். நான் அதை வாசித்தேன். எனக்குப் புதிய சொற்கள் எதுவும் கிடைக்கவில்லை. "ரமணன்” ஒரு பிரதிக்கு காலணா என்று கணக்குப் போட்டு விற்றார்கள் என்றோ, மொத்த பிரதிகளையும் எடை போட்டு பேப்பர் விலைக்கு விற்றார்கள் என்றோ கேள்விப்பட்டிருக்கிறேன். (அந்த "ரமண” னின் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் பின்னர் விற்பனை ஆயின.) பத்திரிகை ஆசிரியர் பல நேரங்களிலும் என்னை அவருடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய் சாப்பாடு தந்திருக்கிறார்.
சாதாரணமாக நான் எழுதும்போது எழுதப்போகும் விஷயம் தெளிவாக என்னுடைய மனதில் இருக்கும். ஆனால், முதல் கதையை எழுதியபோது இதயம் பங்கு சேரவில்லை. முதல் கதை "என்னுடைய தங்கம்' என்ற பெயரில் வந்தது. பின்னர் அதை
நூலில் சேர்த்தபோது "தங்கம்” என்று மட்டுமாக ஆக்கினேன். அதை எழுதியது ஒரு ஆச்சரியமான விஷயம். பத்திரிகை ஆசிரியர் கதையோ, கவிதையோ எழுதிக் கொடுக்கும்படி சொன்னபோது நான் நேராக ஹாஸ்டலுக்குச் சென்றேன். மனதில் எதுவும் இல்லை. ஹாஸ்டலுக்குச் சென்று வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். முன் பக்கமிருந்த சாலையின் அருகில் குழாய் இருந்தது. நீர் கொண்டு செல்வதற்காகக் கொஞ்சம் இளம் பெண்கள் குழாயைச் சுற்றி நின்றிருந்தனர். இளம் பெண்கள் அனைவரும் ஹாஸ்டல் மாணவர்களின் காதலிகள். அதாவது- மாணவர்கள் எல்லாரும் ஒவ்வொருவரையும் காதலியாக ஆக்கியிருந்தனர். அந்தக் கூட்டத்தில் யாருக்கும் தேவைப்படாத ஒரு கறுத்த பெண் இருந்தாள். அவளை நான் எடுத்துக் கொண்டேன். அவளைப் பற்றி ஒரு கதை தோன்றியது.
அதுதான் என்னுடைய தங்கம்...!