மூன்று துறவிகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8299
ஆர்ச்சேஞ்சல் நகரத்திலிருந்து சோலோவெஸ்க் மடத்திற்கு ஒரு பாதிரியார் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அதே கப்பலில் அந்த ஊரில் இருக்கும் கடவுள் உருவங்களை வணங்குவதற்காகச் செல்லும் நிறைய புனிதப் பயணிகளும் இருந்தார்கள். பயணம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நன்றாகப் போய்க் கொண்டிருந்தது. காற்று சாதாரண அளவிலேயே வீசிக்கொண்டிருந்தது. தட்பவெப்ப நிலையும் அவர்களுக்கு சாதகமாகவே இருந்தது. புனிதப் பயணிகளில் சிலர் மேல்தளத்தில் படுத்திருந்தார்கள். சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலரோ கூட்டமாக உட்கார்ந்து ஒருவரோடொருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பாதிரியாரும் மேல் தளத்திற்கு வந்தார். மேலும் கீழுமாக அங்கு நடந்தார். கூட்டமாக சிலர் நின்று, அங்கிருந்த மீன் பிடிக்கும் மனிதர் ஒருவர் ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்பதை அவர் பார்த்தார். அந்த மீனவர் கடலைச் சுட்டிக்காட்டியவாறு என்னவோ கூறிக்கொண்டிருந்தார். பாதிரியார் நின்று, மீனவர் சுட்டிக் காட்டிய திசையைப் பார்த்தார். அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. மாறாக, சூரிய வெளிச்சத்தில் கடல் தகதகத்துக் கொண்டிருந்தது. அந்த மீனவர் என்ன கூறுகிறார் என்பதைக் கேட்க வேண்டும் என்பதற்காக அவர் அந்த மனிதருக்கு அருகில் வந்தார். ஆனால், அந்த மனிதர் அவரைப் பார்த்ததும் தன் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றிவிட்டு அமைதியாக இருந்தார். அவருக்கு முன்னால் நின்றிருந்த மற்றவர்களும் தங்களின் தலையிலிருந்த தொப்பிகளை நீக்கிவிட்டு, மரியாதையாக தலை குனிந்தார்கள்.
"நான் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்குறதுக்காக வரலை, நண்பர்களே!'' பாதிரியார் சொன்னார்: "இந்த மனிதர் உங்கக்கிட்ட என்ன சொல்லிக்கிட்டு இருக்குறார்ன்றதைக் கேக்குறதுக்குத்தான் நான் வந்தேன்.''
"மீனவர், துறவிகளைப் பற்றி எங்கக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு.'' அங்கிருந்தவர்களில் ஒருவர் சொன்னார். அவர் ஒரு வியாபாரி. அங்கிருந்த மற்றவர்களைவிட அவர் பலசாலியாக இருந்தார்.
"எந்தத் துறவிகள்?'' பாதிரியார் கேட்டார். கப்பலின் ஒரு ஓரப் பகுதிக்குச் சென்ற அவர் அங்கிருந்த ஒரு பெட்டிமீது உட்கார்ந்து கொண்டே கேட்டார்: "அவர்களைப் பற்றி நானும் தெரிஞ்சிக்க விரும்புறேன். சொல்லுங்க. அங்கே எதை நீங்க கையால சுட்டிக்காட்டினீங்க?''
"அதுவா? அதோ அங்கே தெரியுதே, ஒரு சின்ன தீவு! அதைத்தான்...'' அந்த மனிதர் சொன்னார். வலது பக்கம் தூரத்தில் தெரிந்த ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டியவாறு, அவர் மேலும் சொன்னார்: "தங்களோட ஆத்ம நலனுக்காக அந்தத் தீவுலதான் அந்தத் துறவிகள் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க!''
"அந்தத் தீவு எங்கே இருக்கு?'' பாதிரியார் கேட்டார். "எனக்கு எதுவும் தெரியலையே?''
"அதோ... தூரத்துல. நான் கையை நீட்டுற பக்கம் பார்த்தா, உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு அந்தச் சிறு மேகக் கூட்டம் தெரியுதா? அதற்குக் கீழே, கொஞ்சம் இடது பக்கம் தள்ளி ஒரு சின்ன இடம் தெரியுதா? அதுதான் அந்தத் தீவு.''
பாதிரியார் கூர்ந்து பார்த்தார். அவருடைய கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. சூரிய ஒளியில் மின்னிக் கொண்டிருக்கும் நீர் மட்டும்தான் தெரிந்தது.
"என்னால எதையும் பார்க்க முடியல.'' அவர் சொன்னார்: "சரி... அங்கே வசிக்கிற அந்தத் துறவிகள் யார்?''
"அவங்க ரொம்பவும் புனிதமானவங்க.'' மீனவர் சொன்னார்: "அவங்களைப் பற்றி நான் ரொம்ப காலமாகவே கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, ரெண்டு வருடங்களுக்கு முன்னாடிதான் அவங்களைப் பார்க்கறதுக்கான வாய்ப்பு எனக்கு கிடைச்சது!''
ஒருமுறை மீன் பிடிப்பதற்காகப் போனபோது, இரவு நேரத்தில் தான் அந்தத் தீவில் மாட்டிக்கொண்டதையும், எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே தனக்குத் தெரியாமல் போனதையும் அவர் சொன்னார். பொழுது விடிந்தவுடன், அந்தத் தீவில் அவர் நடந்து வரும்போது, மண்ணாலான ஒரு குடிசையை அவர் பார்த்திருக்கிறார். அந்தக் குடிசைக்கு முன்னால் ஒரு வயதான மனிதர் நின்றிருந்திருக்கிறார். தொடர்ந்து வேறு இரண்டு மனிதர்களும் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த மீனவருக்கு உணவளித்து, அவருடைய நனைந்து போன பொருட்களைக் காய வைத்து உதவியிருக்கிறார்கள். பிறகு அவருடைய சேதமடைந்த படகைச் சரி செய்ய உதவியிருக்கிறார்கள்.
"அவங்க எப்படி இருந்தாங்க?'' பாதிரியார் கேட்டார்.
"ஒருத்தர் ரொம்பவும் குள்ளமா இருப்பார். அவரோட முதுகு வளைஞ்சிருக்கும். அவர் பாதிரியார்கள் அணியிற ஆடையை அணிஞ்சிருந்தார். ரொம்பவும் வயதானவர் அவர். அநேகமா அவருக்கு நூறு வயதுக்குமேல் இருக்கும்னு நினைக்கிறேன். அவரோட தாடியில இருக்குற வெள்ளை நிறம் பச்சை நிறமா மாறிக்கிட்டு இருக்குற அளவுக்கு வயதானவர் அவர். ஆனா, எப்பவும் சிரிச்ச முகத்தோடயே இருப்பார். சொர்க்கத்துல இருந்து வந்த ஒருத்தரோட முகம் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு அவர் முகம் எப்பவும் பிரகாசமா இருக்கும். ரெண்டாவது மனிதர் ரொம்பவும் உயரமா இருப்பார். அவரும் ரொம்பவும் வயதானவர்தான். விவசாயிகள் அணியிற கிழிஞ்சிபோன கோட் ஒன்றை அவர் அணிந்திருப்பார். அவரோட தாடி பெருசா, மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்துல இருக்கும். அவர் ரொம்பவும் பலசாலி. எனக்கு உதவி செய்ய வந்த அவர் என் படகை ஏதோ வாளியைத் தூக்குற மாதிரி அலாக்கா தூக்கி திருப்பிப் போட்டார். அவரும் எப்பவும் கருணைமயமான மனிதரா இருந்தார். எப்பவும் உற்சாகம் ததும்பி வழியும் அவர்கிட்ட மூணாவது மனிதர் நல்ல உயரம். அவரோட தாடி பனி மாதிரி நல்ல வெள்ளை நிறத்தில இருக்கும். அந்த தாடி முழங்கால் வரை தொங்கிக்கிட்டு இருக்கும். அவர் எப்பவும் நிமிர்ந்துதான் நடப்பார். அவரோட புருவங்கள் ரொம்பவும் வளைஞ்சிருக்கும். தன்னோட இடுப்பில் ஒரே ஒரு கம்பளி ஆடையைச் சுற்றியிருப்பார். அதுதான் அவரோட ஆடை அதைத் தவிர, அவர் வேற எதையும் அணியிறதே இல்ல...''
"அவங்க உங்கக்கிட்ட பேசினாங்களா?'' பாதிரியார் கேட்டார்.
"அவங்க பெரும்பாலும் பேசாம அமைதியா இருந்துக்கிட்டுத் தான் எல்லா விஷயங்களையும் செய்றாங்க. அவங்களுக்குள்ளேயே எப்பவாவது கொஞ்சம்தான் அவங்க பேசிக்கிறாங்க. ஒருத்தர் ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும்- அந்தப் பார்வையோட அர்த்தம் என்னன்னு மத்தவங்க புரிஞ்சிக்கிறாங்க. நான் மிகவும் உயரமா இருக்குற மனிதர்கிட்ட, "ரொம்ப காலமா நீங்க இதே தீவுல இருக்கீங்களா?"ன்னு கேட்டேன். அவர் எதுவும் பேசாமல் அமைதியா இருந்தார். பிறகு என்னவோ முணுமுணுத்தார். அவர் கோபமா இருப்பது மாதிரி எனக்குத் தெரிஞ்சது. ஆனா, ரொம்பவும் வயதான மனிதரா இருந்தவர் அவரோட கையைத் தன் கையில் எடுத்து புன்னகை செய்தார். அவ்வளவுதான்- உயரமான மனிதர் அமைதி ஆயிட்டார். வயதான மனிதர், "எங்கமேல கருணை வைங்க..."ன்னு சொல்லிட்டு புன்னகை செய்தார்.''