மூன்று துறவிகள் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8301
"நமக்குப் பின்னாடி வந்துக்கிட்டு இருக்குற ஒரு படகாத்தான் அது இருக்கும்." அவர் நினைத்தார்: "ஆனா, அது நம்மைவிட படுவேகமா வர்றது மாதிரி இருக்கே! ஒரு நிமிடத்துக்கு முன்னாடி அந்த வெளிச்சம் எங்கோ தூரத்தில் தெரிந்தது. இப்போ ரொம்பவும் பக்கத்துல தெரியுது. நிச்சயம் அது படகா இருக்குறதுக்கு வாய்ப்பில்ல. பாய்மரம் எதுவும் கண்ணுல தெரியலியே! அது வேகமா நம்மைத் தொடர்ந்து வந்துக்கிட்டு இருக்கு. சீக்கிரமே பிடிச்சிடும்போல இருக்கே!"
அவரால் அது என்னவென்று கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது ஒரு படகாக இருக்காது! பறவையும் இல்லை! மீனும் இல்லை! ஒரு மனிதனைவிட மிகவும் பெரியதாக இருந்தது அது! தவிர, ஒரு மனிதன் கடலின் மையப்பகுதியில் எப்படி இருக்க முடியும்? பாதிரியார் எழுந்து, மாலுமியைப் பார்த்துக் கூறினார்.
"அங்கே பாருங்க... அது என்ன? நண்பரே! ம்... அது என்ன?'' பாதிரியார் தான் சொன்னதையே திரும்பவும் சொன்னார். இப்போது அது என்ன என்று அவருக்குத் தெளிவாகவே தெரிந்தது. அந்த மூன்று வயதான துறவிகளும் நீருக்குமேலே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள்தான் வெள்ளை நிறத்தில் ஒளிமயமாகத் தெரிந்தவர்கள். அவர்களுடைய சாம்பல் நிற தாடி ஒளிர்ந்து கொண்டிருந்தது. கப்பலை படுவேகமாக அவர்கள் நெருங்கி வந்தார்கள்.
மாலுமி அவர்களைப் பார்த்து, உண்மையிலேயே பதைபதைத்துப் போனார்.
"ஓ... கடவுளே! துறவிகள்தான் நம்மைத் தொடர்ந்து ஏதோ கட்டாந்தரையில் ஓடிவர்ற மாதிரி நீருக்குமேலே ஓடி வர்றாங்க.'' பாதிரியார் சொன்னார்.
கப்பலிலிருந்து மற்ற பயணிகள் பாதிரியார் சொன்னதைக் கேட்டு உற்சாகத்தில் குதித்து, கப்பலில் பின்பகுதிக்கு வந்து கூடினார்கள். அந்த வயதான துறவிகள் ஒருவர் கையை இன்னொருவர் கோர்த்துக் கொண்டு நீரின்மீது ஓடி வருவதை அவர்கள் பார்த்தார்கள். உயரமான இரு துறவிகளும் கப்பலை நிறுத்தும்படி சைகை செய்தார்கள். அவர்கள் மூவரும் கால்பாதங்களை அசைக்காமலே நீரில் வழுக்கிக் கொண்டு வந்தார்கள். கப்பலை நிறுத்துவதற்கு முன்பே, துறவிகள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி ஒரே குரலில் சொன்னார்கள்.
"நாங்க நீங்க சொல்லிக் கொடுத்ததை மறந்துட்டோம். கடவுளின் பணியாளே! நாங்க திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருந்தது வரை, அந்த வார்த்தைகள் எங்க ஞாபகத்துல இருந்துச்சு. கொஞ்ச நேரம் அதைச் சொல்லாம நிறுத்தினோம்... அவ்வளவுதான்... ஒரே ஒரு வார்த்தை மறந்தது... அதுக்குப் பின்னாடி எல்லா வார்த்தைகளுமே எங்களுக்கு மறந்து போச்சு. இப்போ எங்க ஞாபகத்துல எதுவுமே இல்லை. எங்களுக்கு திரும்பவும் சொல்லித் தாங்க.''
பாதிரியார் தனக்குத் தானே சிலுவை இட்டுக்கொண்டு கப்பலில் சாய்ந்தவாறு சொன்னார்:
"உங்க சொந்த பிரார்த்தனையே கடவுளிடம் உங்களைக் கொண்டு போய் சேர்த்திடும். கடவுளின் மனிதர்களே! நான் உங்களுக்கு சொல்லித் தர்றதுக்கு எதுவுமே இல்ல. பாவிகளான எங்களுக்காக பிரார்த்தனை பண்ணுங்க!''
பாதிரியார் அந்த வயதான மனிதர்களுக்கு முன்னால் தலை குனிந்து நின்றார். அவர்கள் திரும்பி, கடல்மீது மீண்டும் நடந்தார்கள். அவர்கள் பார்வையை விட்டு மறைந்த இடத்தில், பொழுது புலரும் நேரத்தில் ஒரு ஒளி பளிச்சிட்டது.