மூன்று துறவிகள் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8301
மீனவர் பேசிக்கொண்டிருந்தபோது, கப்பல் நகர்ந்து அந்தத் தீவை நெருங்கியிருந்தது.
"அதோ... அந்தத் தீவை கடவுள் அருளால இப்போ நீங்க தெளிவா பார்க்கலாம்.'' வியாபாரி சொன்னார்- தன் கையால் அந்தத் தீவைச் சுட்டிக்காட்டியவாறு.
பாதிரியார் பார்த்தார். அந்தத் தீவு ஒரு கறுப்பான கோடுபோல அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. அதைச் சிறிது நேரம் பார்த்த அவர் அந்த இடத்தை விட்டு நீங்கி நேராக கப்பலில் இருந்த மாலுமியிடம் சென்று கேட்டார்.
"அந்தத் தீவோட பேர் என்ன?''
"அந்தத் தீவுக்கு பேரே இல்ல. அந்த மாதிரி இந்தக் கடல்ல நிறைய தீவுகள் இருக்கு.''
"தங்களோட மன மகிழ்ச்சிக்காக அங்கே துறவிகள் வாழ்கிறார்களா என்ன?''
"அப்படித்தான் சொல்றாங்க. ஆனா, அது உண்மையான்னு எனக்குத் தெரியாது. அவங்களைப் பார்த்ததா மீனவர்கள் சொல்றது உண்டு. அவங்க வேணும்னே கயிறு திரிக்கிறாங்கன்னுதான் நான் நினைக்கிறேன்.''
"நான் அந்தத் தீவுக்குப் போய் அந்த மனிதர்களைப் பார்க்க விரும்புகிறேன்.'' பாதிரியார் சொன்னார்: "அங்கே எப்படிப் போறது?''
"கப்பல் தீவுக்குப் பக்கத்துல போக முடியாது.'' மாலுமி சொன்னார்: "ஆனா நீங்க ஒரு படகுல பயணம் செய்து அங்கு போகலாம். இந்த விஷயத்தை நீங்க கப்பல் தலைவர்கிட்ட பேசுங்க...''
கப்பல் தலைவருக்கு சொல்லி அனுப்பப்பட, அவர் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.
"நான் அந்தத் தீவுல இருக்குற துறவிகளைப் பார்க்க விரும்புகிறேன்.'' பாதிரியார் சொன்னார்: "அந்தத் தீவுக்கு படகுல போறதுக்கு வழி இருக்குதா?''
கப்பல் தலைவர் பாதிரியாரின் மனதை மாற்ற நினைத்தார்.
"போகலாம்...'' அவர் சொன்னார்: "ஆனா, நமக்கு நேரம் நிறைய வீணாகும். உங்க ஆசையை நான் நிறைவேற்றி வைக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்... நீங்க சிரமப்பட்டு போகுற அளவுக்கு அந்த வயதான ஆளுங்க அவ்வளவு பெரிய ஆளுங்க இல்ல. அவங்க சரியான முட்டாள்கள்ன்றதுதான் நான் அவங்களைப் பற்றி கேள்விப்பட்டதுல தெரிஞ்சிக்கிட்ட விஷயம். நாம சொல்றது எதையும் அவங்க புரிஞ்சிக்கப் போறது இல்ல. ஒரு வார்த்தைகூட பேச மாட்டாங்க... சொல்லப்போனா கடலுக்குள்ளே இருக்குற மீனுக்கும் அவங்களுக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்ல.''
"நான் அவங்களைப் பார்க்க விரும்புகிறேன்.'' பாதிரியார் சொன்னார்: "வீணாகுற நேரத்துக்கும் உண்டாகுற சிரமங்களுக்கும் தரவேண்டிய பணத்தை நான் தர்றேன். தயவு செய்து எனக்கு ஒரு படகை ஏற்பாடு பண்ணித் தாங்க!''
அதற்குமேல் வேறு வழியே இல்லை. உரிய கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மாலுமி கப்பலை தீவு இருக்கும் பக்கம் திருப்பினார். பாதிரியாருக்கு கப்பலின் முன்பக்கத்தில் ஒரு நாற்காலி கொண்டு வந்து போடப்பட்டது. பாதிரியார் அதில் உட்கார்ந்து முன்னால் பார்த்தார். கப்பலில் இருந்த அனைத்துப் பயணிகளும் அந்த இடத்திற்கு வந்து தீவையே வெறித்துப் பார்த்தார்கள். அவர்களில் கூர்மையான பார்வையைக் கொண்டவர்கள் முதலில் தீவில் இருந்த பாறைகளைப் பார்த்தார்கள். பிறகு மண்ணாலான குடிசையைப் பார்த்தார்கள். கடைசியில் ஒரு மனிதனின் பார்வையில் துறவிகள் தெரிந்தார்கள். கப்பலின் தலைவர் ஒரு தூர நோக்கியைக் கொண்டு வந்து அதன் மூலம் பார்த்துவிட்டு, அதை பாதிரியாரிடம் தந்தார்.
"சரிதான்... அந்த மூணு பேரும் கரையில நின்னுக்கிட்டு இருக்காங்க. அந்தப் பெரிய பாறைக்கு கொஞ்சம் தள்ளி வலது பக்கமா...''
பாதிரியார் தூர நோக்கியை வாங்கி அதன் வழியே அந்த மூன்று மனிதர்களையும் பார்த்தார். உயரமான ஒரு மனிதர். சற்று உயரம் குறைவான ஒரு மனிதர். மிகமிக குள்ளமாகவும் முதுகு வளைந்தும் உள்ள ஒரு மனிதர். அவர்கள் மூவரும் கரையில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
கப்பலின் தலைவர் பாதிரியாரைப் பார்த்துச் சொன்னார்: "இதுக்கு மேல கப்பல் போக முடியாது. நீங்க அங்கே போக விரும்பினா, ஒரு படகுல அங்கே போங்க. நாங்க இங்கேயே இருக்கோம்.''
கயிறு கீழே தொங்க விடப்பட்டது. கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது. அப்போது கப்பல் சற்று குலுங்கியது. படகொன்று கீழே விடப்பட்டது. படகோட்டிகள் படகுக்குள் குதித்து உட்கார்ந்தார்கள். பாதிரியார் படிகள் வழியாக இறங்கி படகில் போய் உட்கார்ந்தார். படகோட்டிகள் துடுப்புகளைப் போட, படகு படு வேகமாக தீவை நோக்கி நகர ஆரம்பித்தது. கல்லெறியும் தூரத்தில் வந்தவுடன், அவர்கள் அந்த மூன்று வயதான மனிதர்களையும் பார்த்தார்கள். இடுப்பில் ஒரு கம்பளி ஆடையை மட்டும் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு உயரமான மனிதர், கிழிந்துபோன விவசாயிகள் அணியும் ஆடையை அணிந்திருக்கும் குள்ள மனிதர், பழைய அங்கி ஒன்றை அணிந்த வயதால் முதுகு வளைந்த முதிய மனிதர்- மூவரும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
படகோட்டிகள் கரை வந்தவுடன், படகை நிறுத்தினார்கள். பாதிரியார் படகை விட்டுக் கீழே இறங்கினார்.
அந்த வயதான மனிதர்கள் அவரைப் பார்த்ததும் தலையைக் குனிந்து கொண்டு வணங்கினார்கள். அவர் அவர்களுக்கு தன்னுடைய ஆசீர்வாதத்தைத் தர, அவர்கள் மேலும் குனிந்து வணங்கினார்கள். பிறகு பாதிரியார் அவர்களைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.
"நான் கேள்விப்பட்டேன்.'' அவர் சொன்னார்: "உங்களை நீங்களே பார்த்துக்கிட்டு நம்மோட கடவுள் இயேசுவிடம் மற்ற மனிதர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வீர்கள் என்று. நான் கடவுளோட ஒரு சாதாரண வேலைக்காரன். கடவுளோட கருணையால் மக்கள் கூட்டத்திற்கு போதனைகள் செய்றதுக்காக அனுப்பப்பட்டவன் நான். கடவுளோட வேலைக்காரர்களான உங்களை நான் பார்க்க விரும்பினேன். உங்களுக்கு நான் ஏதாவது சொல்லித்தர விரும்புகிறேன்.''
அந்த வயதான மனிதர்கள் தங்களைத் தாங்கள் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்களே தவிர, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
"சொல்லுங்க.'' பாதிரியார் சொன்னார்: "உங்க ஆன்மாவைக் காப்பாத்துறதுக்கு நீங்க என்ன செய்றீங்க? இந்தத் தீவுல நீங்க கடவுளுக்கு எப்படி சேவை செய்றீங்க?''
இரண்டாவது துறவி வெட்கத்துடன் மிகவும் வயதான துறவியைப் பார்த்தார். பிறகு அவர் சிரித்தவாறு சொன்னார்:
"கடவுளுக்கு எப்படி சேவை செய்யிறதுன்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்துக்குவோம். துணையாய் இருப்போம். அவ்வளவுதான்.''
"கடவுள்கிட்ட எப்படி பிரார்த்தனை செய்வீங்க?'' பாதிரியார் கேட்டார்.
"நாங்க இப்படித்தான் பிரார்த்தனை செய்வோம்.'' அந்தத் துறவி சொன்னார்: "நீங்க மூணு பேரு, நாங்க மூணு பேரு. எங்கமேல கருணை காட்டுங்க...''
அந்தத் துறவி இதைச் சொன்னதும், மூன்று துறவிகளும் தங்களின் கண்களை சொர்க்கத்தை நோக்கி உயர்த்தி திரும்பச் சொன்னார்கள்: