சலாம் அமெரிக்கா!
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7608
அமெரிக்காவில் நான் இருந்த காலம் வரையிலும் நான் நல்ல மகிழ்ச்சியுடனே இருந்தேன். கைப்பிடியோடு கூடிய ஒரு பெரிய குப்பியில்தான் இங்கு ஜானிவாக்கர் கிடைக்கிறது. ராயல் சல்யூட் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும். அது விற்றால் கொள்ளை லாபம்தான். மரவள்ளிக்கிழங்கு என்றால் மரவள்ளிக்கிழங்குதான். நல்ல தரமான மரவள்ளிக்கிழங்கை அதிகம் தீயில் கருகி விடாமல் ப்ளாஸ்டிக் பைகளில் போட்டு அங்கு விற்பனை செய்கிறார்கள். ரொட்டிக் கப்பையால் கூட அதன் பக்கத்தில் வந்து நிற்க முடியாது.
மாமிச விஷயம்கூட இப்படித்தான்.என்ன மாமிசம் நமக்கு வேண்டும் என்பதுதான் முக்கியம். கொஞ்ஞிமீனுக்கும் செம்மீனுக்கும் விலை சற்று அதிகம்தான். இவை அல்லாத மற்ற மீன்களுக்கும்கூட கிராக்கி இருக்கத்தான் செய்கிறது. நான் காலையில் தூக்கம் கலைந்த பிறகும்கூட சில நிமிடங்கள் கட்டிலிலேயே படுத்துக் கிடப்பேன். உண்மையிலேயே நான் எங்கிருக்கிறேன் என்று அந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்பேன். எனக்கு படுக்கையை விட்டு எழுந்திருக்கவே தோன்றாது.
அய்யோ... மச்சநாட்டு ஆற்றங்கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் அந்த ஜோஸியா இது? படகுத் துறையில் சாதாரணமாகக் கேட்கும் சத்தங்கள் எதுவும் கேட்கவில்லையே! நான் காதுகளைத் தீட்டிக்கொண்டு மீண்டும் கவனிப்பேன். ஆற்றின் அக்கரையில் இருந்து வெட்டுக்காரன் பாக்கிரி கூவும் சத்தம் எதுவும் காதில் விழவில்லையே! பெரிய பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்கு அடிக்கப்படும் மணியோசைகூட கேட்கவில்லை! பாத்திரம் தேய்க்க வரும் ரோஸிலி பாட்டுப் பாடும் சத்தம்கூட காதில் ரீங்காரமிடவில்லையே! அம்மா கிணற்றில் நீர் இறைக்கும் சத்தம் கூட கேட்கவில்லையே! காரணம்- நான் இருப்பது அமெரிக்காவில். அதாவது- நியூயார்க்கில், ஒரு மிகப்பெரிய கட்டடத்தின் உச்சியில், என்னைப் படைத்த கடவுளே! நான் இங்கே இருந்து கொண்டு என்ன செய்வது? இங்கே ஒரு ஓசையும் இல்லை... ஃப்ரிட்ஜின் சிறு சத்தம் காதில் விழுகிறது. ஏர்கண்டிஷன் மெஷினில் காற்று வரும் ஒரு சிறு ஓசை. பெரிய படுக்கையறையில் இருக்கும் டெலிவிஷனில் இருந்து வரும் சத்தம் வேறு... டி.வி.யை யாரும் இன்னும் நிறுத்தவில்லையா என்ன? நான்தான் நிறுத்தாமல் விட்டிருக்கிறேன். நேற்று கால்பந்து விளையாட்டை டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்த நான் அப்படியே உறங்கிவிட்டேன். பிறகு... எழுந்து குழந்தையின் படுக்கைக்குப் பக்கத்தில் இருக்கும் இந்தக் கட்டிலில் வந்து படுத்தேன். கால்பந்து விளையாட்டை நான் பார்க்கவில்லை என்றால், யாராவது கேட்பார்கள்-பார்த்தாயா என்று. அதற்காகவே நான் அதைப் பார்த்தேன். ஆனால், அந்த விளையாட்டே எனக்கு சரியாகப் புரியவில்லை. மம்மூட்டி, நெடுமுடிவேணு, மோகன்லால் ஆகியோரின் முகங்கள் கொஞ்ச நேரமாவது தோன்றி மறையாதா என்று அப்போது நினைப்பேன். இப்படியே என்னென்னவோ நினைத்தவாறு கட்டிலில் இருக்கும் நான் மெதுவாக எழுந்து காப்பி போடுவேன். அதைக் கொஞ்சம் பருகியவாறு, கழிவறைக்குள் நுழைவேன். பல் துலக்கிவிட்டு நான் வரும்போது, சில நேரங்களில் குழந்தை தூக்கம் கலைந்து எழுந்திருக்கும்.அவனைத் தூக்கியெடுத்து, நாப்கினை மாற்றித் துடைத்து, சீரியலை பாலில் கலந்து குழைத்துக் கொடுப்பேன். அதற்குப்பிறகு அவனை ப்ளே பென்னில் கொண்டு போய் விடுவேன். அவனை அங்கே விட்டு விட்டு, ஃப்ரிட்ஜைத் தேடி வருவேன். கொஞ்சம் மரவள்ளிக் கிழங்கை நன்றாக வேகவைத்து, வெங்காயமும், மிளகாயும், தேங்காய் எண்ணெய்யும், கருவேப்பிலையும் கலந்து கொஞ்ச நேரம் இப்படியும் அப்படியுமாய் நடப்பேன். இரண்டு முட்டைகளைப் பொரிப்பேன். ஃப்ரிட்ஜில் இருந்த மாமிசத்தை எடுத்து சூடு படுத்துவேன். வறுத்த மீன் ஏதாவது மீதி இருந்தால் அதோடு சிறிது ரொட்டியையும் எடுப்பேன். எல்லாவற்றையும் மேஜைமேல் வைத்துவிட்டு, ஒரு கண்ணாடி டம்ளர் நிறைய ஒரு டபுள் ஜானிவாக்கரை ஊற்றிக் குடிப்பேன். காலை நேரத்தில் பொதுவாக சோடா கலக்காமல் மது அருந்துவதுதான் எனக்குப் பிடிக்கும். வாய்க்குள் ஜானிவாக்கர் சென்றதும் அப்படியொரு சுகம்... உடலில் அப்படியொரு கிறக்கம்... இரண்டு பெக் உள்ளே சென்றதும் மனமே குளிர்ந்து போனதுபோல் இருந்தது. வெறும் வயிற்றுக்குள் அவன் போகும் போக்கு இருக்கிறதே, அடடா...! நம்மிடம் அப்படிப்பட்ட ஒரு விஸ்கி இருக்கிறதா? எது எப்படியோ... வெள்ளைக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான். மது அருந்திவிட்டு நான் குளிக்கப் போவேன். அப்போது டெஸ்ஸி வருவது என் காதில் விழும். அவள் வெளியே இருந்தவாறு கதவைத் திறக்கும் சத்தம் எனக்குக் கேட்கும். குழந்தை அவளை அழைப்பதுகூட என் காதுகளில் விழும். டெஸ்ஸி குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுத்தவாறு படுக்கையறைக்குள் நுழையும் சத்தம் கேட்கும். குழந்தை அழும் குரலைக் கேட்கும்போது, எனக்கு என்னவோபோல் இருக்கும்.நான் வேகவேகமாகக் குளித்து முடித்து, டவலால் உடம்பைத் துடைத்துவிட்டு, அதை இடுப்பில் கட்டியவாறு வெளியே வருவேன். அப்போது டெஸ்ஸி உடம்பில் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு, வெறும் ஜட்டி மாத்திரம் அணிந்து நின்றிருப்பாள். முகத்தில் ஏதோ ஒரு க்ரீமை அவள் கைகள் அப்போது தடவிக்கொண்டிருக்கும். குழந்தையைத் தூக்குவதற்கு முன்பு சில நேரங்களில் கொஞ்சமும் எதிர்பாராமல் அவளை இறுகக் கட்டிப்பிடிப்பேன். அவள் அப்போது என்னைப் பார்த்து ஆங்கிலத்தில் ஏதாவது கூறுவாள். "யூ லுக் நைஸ்" என்றோ, வேறு ஏதாவதோ கூறுவாள்.தொடர்ந்து என் முகத்தில் ஒரு முத்தத்தைப் பதித்துவிட்டு, அடுத்த நிமிடமே போர்வைக்குள் போய் தன்னை அடக்கிக்கொண்டு தூங்க ஆரம்பித்துவிடுவாள். இதில் என்ன பெரிய சிக்கல் தெரியுமா?
அவள் கிட்டத்தட்ட மலையாளத்தை மறந்தே போய்விட்டாள். மருத்துவமனையில் அவளுடன் பணியாற்றும் இன்னும் சில மலையாள நர்சுகள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளைக்காரர்களுக்கு மத்தியில் மலையாளம் பேசினால் நன்றாகவா இருக்கும்? அதன் விளைவு- வீட்டுக்கு வந்தால்கூட அவள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவாள். நான் குழந்தையைத் தூக்கி, அவன் அழுகையை நிறுத்தும்வரை அவனுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருப்பேன். அவன் தன் தாயைப் பார்க்க வேண்டுமென்று சொல்லும்போது, அவனை எடுத்துக்கொண்டு படுக்கையறையைத் தேடிப் போவேன். அங்கே ஒரு துணிமூட்டையைப்போல டெஸ்ஸி தன்னையே மறந்து தூங்கிக் கொண்டிருப்பாள். அவளை குழந்தை தொட்டுப் பார்ப்பான். மீண்டும் அவனை ப்ளே பென்னில் விட்டுவிட்டு, சோடாவைக் கலந்து ராயல் சல்யூட்டைக் கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக் குடிப்பேன். பிறகு... மெதுவாக மொட்டை மாடியில் போய் நிற்பேன். அடேயப்பா...! பரந்து விரிந்து கிடக்கும் அமெரிக்கா! ஆனைமுடியின் உச்சியில் நின்று பார்ப்பதைப்போல நான் பார்ப்பேன். என் காலுக்குக் கீழே நியூயார்க் நகரம்! நியூயார்க் நகரம்! "டேய் ஜோஸி... இப்ப நீ பார்க்குறே இல்ல...