சலாம் அமெரிக்கா! - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7611
இதுதான் நியூயார்க்! நீ அதோட தலையில் இப்போ நின்னுக்கிட்டு இருக்கே- பத்திரிகைகள்ல பல வருடங்களா படிச்சிக்கிட்டு இருக்குற, வெள்ளைக்காரங்க வசிக்கிற நியூயார்க்!" எனக்குள் நானே சொல்லிக்கொள்வேன். இதைச் சொல்லி முடிக்கிறபோது, கால் முதல் தலை வரை "ஜிவ்" என்று எனக்கு ஏறும். ராயலை இன்னொரு மடக்கு விழுங்கியவாறு, கீழே தெரிகிற சாலைகளையும் கார்களையும் மக்கள் கூட்டத்தையும் சிறிதுநேரம் பார்த்தவாறு நின்றிருப்பேன். கீழே இருந்து வருகிற ஓசைகள் என் காதில் விழும். இதோ தெரிகிறது லாங்ஐலண்ட். டெஸ்ஸியின் சொந்தக்காரரான மாத்தச்சனும், அவரின் மனைவியும் அங்கு இருக்கிறார்கள். ப்ராங்க்ஸ் எங்கே இருக்கிறது? என் நண்பன் கொச்சப்பனும், அவன் தம்பியும் அங்குதான் இருக்கிறார்கள். நான் பீட்ரெயினில் ஏறி எவ்வளவோ நாட்களாகிவிட்டன! ப்ராங்க்ஸிஸ் சீட்டு விளையாடப்போன நாட்கள்கூட மறந்துபோய்விட்டன! மவுண்ட் வெர்ணோனில் இப்போது கோபியும் குட்டப்பனும், இருக்கிறார்களா தெரியவில்லை. போன வருடம் அவர்களுடன் மேரிலேண்டிற்கு மான்வேட்டைக்குப் போனேன். குட்டப்பன் துப்பாக்கியால்சுட, அது காட்டுக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெல்ட் கட்டிய பசு மேல் போய் பாய்ந்தது. அவன் அதிகமாக மது அருந்தி, கண் மண் தெரியாமல் நின்று கொண்டிருக்கிறான். நாங்கள் இரவோடு இரவாக அந்த இடத்தைவிட்டு அகன்றோம். இரண்டு நாட்கள் நாங்கள் அவன் வீட்டைவிட்டு வெளியே முகத்தைக்கூடக் காட்டவில்லை. வெள்ளைக்காரர்கள் கையில் நாங்கள் சிக்கினால் என்ன ஆவது?
அதோ தெரிகிறது பெரிய பாலத்தைக் கடந்து நியூஜெர்ஸிக்கும், பிறகு ஃபிலடெல்ஃபியாவுக்கும், வாஷிங்டனுக்கும் போகிற சாலை. இந்த சாலைகளையெல்லாம் பார்க்கிறபோது என் மனதில் என்ன தோன்றுகிறது தெரியுமா? இவ்வளவு சாலைகளும் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கின்றன. நான் இந்தக் கட்டடத்தின் மேற்பகுதியில் ஒரு காரியமும் செய்யாமல், வெறுமனே குழந்தையைப் பார்த்துக்கொண்டு சோம்பேறித்தனமாக இருக்கிறேன். கென்னடி விமான நிலையத்திற்கு யாரையாவது வழியனுப்பப் போகும்போதுகூட, என் மனதில் இனம்புரியாத ஒருவித கவலை உண்டாகும். அவர்கள் இப்போது ஆகாயத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சியுடன் கொச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் இந்த நடுங்க வைக்கும் குளிரில் நின்று கொண்டிருக்கிறேன். இந்தக் குளிரில் நின்றுகொண்டிருந்து என்ன பிரயோஜனம்? "கிடுகிடு"வென்று நடுங்கிக்கொண்டு, வெள்ளைக்காரர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டுக்கொண்டு, லிஃப்ட்டில் ஏறியும் இறங்கியும் ஏறியும் இறங்கியும், சாமான்கள் வாங்கப்போவதும் வருவதுமாய் இருந்து கொண்டு, துணி துவைப்பதையும், பாத்திரம் தேய்ப்பதையும் காதில் கேட்டுக் கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு... இப்படி ஒரு வாழ்க்கை! விளையாடவும், சிரிக்கவும் முடியவில்லை என்றால் இது என்ன வாழ்க்கை? சொர்க்கத்திற்குப் போகிறபோது, நாம் என்ன சம்பாதித்த பணத்தையா கொண்டு போகிறோம்! நான் வேகமாக உள்ளேபோய் முதல்நாள் பயன்படுத்திய பாத்திரங்களை எடுத்து வாஷ்பேசினில் போடுவேன். சனிக்கிழமையாக இருந்தால், துணி துவைக்கும் இயந்திரத்தை "ஆன்" செய்வேன். ஒவ்வொரு துணியையும் எடுத்துப் போட்டு, தனித்தனியாகப் பிரிப்பேன். டெஸ்ஸியின் துணியை எடுக்கிறபோது, அதனுடன் மருத்துவமனை வாசனை "குப்"பென்று வரும். அவளுடைய உடல் முழுக்க அந்த வாசனை கலந்திருந்தது என்று சொல்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். ஃப்ரீஸரில் இருந்து இரண்டு கேன் பீரை எடுப்பேன். இரண்டு கேனிலிருந்த பீரையும் ஒரு பெரிய மக்கில் ஊற்றி வாஷிங் இயந்திரத்துக்கு அருகில் போய் உட்காருவேன். என்னதான் சொல்லுங்கள்- இப்படி ஒரு சுவையான பீர் உலகத்தில் வேறு எங்கு கிடைக்கும்? சொல்லப்போனால், விலைகூட அவ்வளவு அதிகம் இல்லை. இதைக் குடிக்கும்போது உடலுக்குத்தான் எத்தனை குளிர்ச்சி! ராயல் உள்ளே போய் முடிந்து, அதைத் தொடர்ந்து பீரும் உள்ளே போகும்போது உண்டாகும் ஆனந்தம் இருக்கிறதே... அடடா...! அப்போது குழந்தை நன்றாக உறங்கிக்கொண்டிருப்பான். நான் போய் கொஞ்சம் அரிசியை எடுத்துக் கழுவி அடுப்பில் வேக வைப்பேன். என் அருமைப்பெண்ணே... ஃப்ரிட்ஜில் எல்லாம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக பழைய சாதத்தை மட்டும் என்னைச் சாப்பிடச் சொல்லாதே. எனக்கு எப்போதும் சாதம் மட்டும் சூடாக இருக்க வேண்டும். சோறு வெந்து கொண்டிருக்கும்போதே, நான் மோர் தயார் பண்ணி, பருப்பு சாம்பார் வைத்து, அப்பளம் பொரித்து, பாவைக்காய் வறுவல் செய்து, ஃப்ரிட்ஜில் இருந்த மாமிசத்தையும், மீனையும் எடுத்து சூடு பண்ணி... இத்தனை வேலைகளையும் மளமளவென்று முடித்துவிடுவேன். இதற்கிடையில் இரண்டு பீரை உள்ளே போகவிட்டு, அதன் குளிர்ச்சியில் என்னையே மறந்து ஆனந்தம் அனுபவித்துக் கொண்டிருப்பேன். பிறகு... டெஸ்ஸியை எழுப்பி, சோறு உண்ண அழைப்பேன். அவள் ஜட்டியை அணிந்து எழுந்து வருவதை இங்கிருந்தே பார்த்துக்கொண்டிருப்பேன்.
அவள் முகம் கழுவி, தலைமுடியை வாரி, பேன்ட்டை மேலே இழுத்துப்போடுவதையும் இங்கிருந்தே நான் பார்ப்பேன். நடக்கட்டும்... நடக்கட்டும்... நான் சில நேரங்களில் அவளை பேன்ட் அணிவதற்கு முன்பு, அருகில் சென்று கட்டிப்பிடிப்பேன். அப்போது அவள் சொல்வாள்: "ஜோஸி... நம்ம ரெண்டு பேருக்குமிடையே ஏடாகூடமா ஏதாவது நடந்து, பிரசவ விடுப்பு எடுக்கிறேன்னு ஓவர்டைம் வேலை செய்யிற காசும் வராமப் போனா, கான்டோமினியத்தில் வீட்டுக்கு வாங்கின கடனை யார் அடைப்பது? ஜோஸி... நீங்க குடிச்சிருக்கீங்கள்ல...?'' அதற்கு நான் சொல்வேன்: "நீதான் மாத்திரை சாப்பிட்டு சரி பண்ணிடலாமே! அப்படியே நடந்தாலும் ஒண்ணும் வராத அளவுக்கு நான் பாத்துக்குறேன்.'' ஆனால் நான் சொல்வதை அவள் காதிலேயே வாங்கிக்கொள்ள மாட்டாள். தேவையில்லாமல் வாயில் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருப்பாள். "வேண்டாம்னா போ... எனக்கும் வேற வேலை இருக்கு. இந்த விஷயத்துக்காக ஒரு ஆண் தேவையில்லாம கெஞ்சிக்கிட்டு இருக்க முடியுமா?'' என்பேன் நான். அடுத்த நிமிஷம்- டெஸ்ஸி வந்து உட்கார்ந்து சாப்பிடுவாள். குழந்தைக்கு ஊட்டுவாள். குழந்தையுடன் போய் டி.வி.க்கு முன்னால் இருக்கிற பெரிய ஸோஃபாவில் உட்கார்ந்து டி.வி.பார்க்க ஆரம்பித்துவிடுவாள். நான் சிறிது நேரம் அவளுக்கு அருகிலேயே நின்றிருப்பேன். ஸோஃபாவில் உட்கார்ந்து மருத்துவமனையில் ஏதாவது விசேஷங்கள் உண்டா என்று கேட்பேன். சாப்பிட்டு முடித்து ஒரு பிராந்தியை உள்ளே தள்ளினால் நல்லது என்று நினைத்த நான், நெப்போலியன் வி.எஸ்.ஓ.பியை எடுத்து ஒரு லார்ஜ் ஊற்றிக் குடிப்பேன். இரவு நேரத்தில் பிராந்தி குடிப்பதுதான் நல்லது என்பாள் டெஸ்ஸி. ஓ... இரவிலும் பகலிலும் இருப்பது ஒரே ஆள்தானே! இவை எல்லாம் உள்ளே நுழைவது ஒரே வயிற்றுக்குள்தானே! எனக்கு நெப்போலியன் என்றால் அப்படி ஒரு பிரியம்.