புதிய மனிதன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7355
சோட்டா நாகப்பூரிலிருக்கும் முஸாபணி செம்பு சுரங்கத்துக்கு சமீபத்திலுள்ள ஒரு வீட்டு வாசலில் சங்குண்ணிநாயர் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு உட்கார்ந்திருந்தார். சுரங்கத்திலிருந்து ஐந்து மைல் தூரத்திலிருக்கும் இயந்திரசாலைக்கு தாமிரத் தாதுக்களை ஏற்றிக் கொண்டு செல்லும் பெரிய இரும்புத் தொட்டிகள் மின்கம்பிகள் வழியே மேலே போய்க் கொண்டிருக்கும் சத்தம் அந்த மாலை நேரத்தின் அமைதியான சூழ்நிலையை நிரந்தரமாகத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
மேகங்கள் மறைத்திருந்ததால் பிரகாசம் குறைவாகத் தெரிந்த சூரியன் மேற்குப் பக்கமிருந்த மலைக்குப் பின்னால் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருந்தது. சுற்றிலுமிருந்த வயல்களிலும், மலைப்பள்ளத் தாக்குகளிலும் பனிப்போர்வை போர்த்தியிருந்தது. ஒரு கடுமையான குளிர் எங்கும் பரவியிருந்தது.
சங்குண்ணி நாயர் கால்களிரண்டையும் மடக்கி வைத்து உட்கார்ந்தவாறு தாடையில் கையை வைத்து என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அவர் மனதில் அசை போட்டுக் கொண்டிருப்பது தன்னுடைய சொந்த ஊரைப் பற்றித்தான். அவர் கேரளத்தில் தன் சொந்த மண்ணை கடைசியாக மிதித்து இருபத்தொரு வருடங்களாகி விட்டன. இந்த இருபத்தொரு வருடங்களில் இன்றுபோல ஒருநாளும் கேரளத்தைப் பற்றிய நினைவுகள் இந்த அளவிற்கு அவர் மனதில் வலம் வந்ததில்லை. சங்குண்ணி நாயர் தன் கையை நீட்டி வெற்றிலைப் பெட்டியை அருகில் இழுத்து வைத்துக்கொண்டு அதிலிருந்து சிறிது வெற்றிலையையும் பாக்கையும் எடுத்து சுண்ணாம்பு தடவாமல் அதைச்சுருட்டி ஒரு சிறிய உரலுக்குள் போட்டு மெதுவாக இடிக்க ஆரம்பித்தார். வெற்றிலையையும் பாக்கையும் இடித்துக் கொண்டிருக்கும் பொழுதும் அவர் தனக்கு முன்னால் எல்லையற்று பரந்து கிடந்த ஆள் அரவமில்லாத வெட்டவெளியையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அந்த நரை விழுந்த கண்கள் பார்த்துக் கொண்டிருந்ததென்னவோ ஆயிரத்து நானூறு மைல்களுக்கப்பால் இருக்கும் காட்சிகளைத்தான். கதிர்களை நீட்டி சாய்ந்தாடிக் கொண்டிருக்கும் நெல் வயல்கள், கதிர்களைக் கொத்தித் தின்பதற்காகக் கூட்டமாகப் பறந்து வரும் கிளிகள், அவற்றைத் துரத்தும் காவல் காக்கும் சிறுவர்களின் 'ஊயோ' என்ற குரல், மலைச்சரிவில் பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கும் புற்கள்... அடர்த்தியாக இருக்கும் தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் மறைந்து கிடக்கும் ஒரு வீடு.
புற்றுக்குள் இருந்து கூட்டமாகப் புறப்பட்டுவரும் கரையான்களைப் போல சுரங்கத்திற்குள்ளிருந்து உடம்பெல்லாம் மண் ஒட்டியிருக்கும் பணியாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் 'கார்பைட்' விளக்குகள் இருந்தன. பூமிக்குக் கீழே இரண்டாயிரம் அடி தூரத்தில் உள்ள நரகத்தனமான இருட்டுக்குள்ளிருந்தும், மூச்சு விடவே சிரமப்படக்கூடிய வாசனையிலிருந்தும் தூசுப் படலத்திலிருந்தும் விடுபட்ட அந்த அப்பிராணி மனிதர்கள்- மனித இனத்தின் கறுத்த நிழல் வடிவங்கள்- வெளியே இருக்கும் நல்ல காற்றை ஆவேசத்துடன் உள்ளுக்குள் இழுத்து தங்களிடமிருக்கும் சோர்வைப் போக்கியவாறு தங்களின் வீடுகளை நோக்கி அமைதியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
மேலே இருக்கும் மின் கம்பிகள் கட்டப்பட்டிருக்கும் தூண்களில் இருந்த மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஒருவித ஓசையை உண்டாக்கியவாறு நகர்ந்து கொண்டிருந்த இரும்புத் தொட்டிகளின் நிழல்கள் சங்குண்ணி நாயரின் வீட்டு வாசலில் வளைந்து வளைந்து தெரிந்தன. அவர் அந்த நிழலையே வெறித்துப் பார்த்தார். தொடர்ந்து அவர் மனம் அவருடைய ஊரைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியது.
மலையின் அடிவாரத்தில் வளைந்து ஓடிக்கொண்டிருக்கும் நதியில் சங்குண்ணி நாயரின் படகு நகரத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு திரும்பிக் கொண்டிருக்கிறது. அந்த வலியபாலா மரம் இருக்குமிடத்தை- நதியின் திருப்பத்தை அடைந்தபோது அவரின் இதயம் என்ன காரணத்தாலோ வேகமாக அடிக்க ஆரம்பிக்கிறது. கண்களில் எப்போதும் இருப்பதைவிட ஒருவித நிலையற்ற தன்மை தெரிகிறது. அவரால் படகை ஒழுங்காக ஓட்ட முடியவில்லை. உடம்பை ஒருமாதிரி ஒடுக்கியவாறு அவர் வலது பக்கம் இருக்கும் கரையை உற்று நோக்குகிறார். அவர் முகத்தில் பிரகாசம் தெரிகிறது. அவள் வாசலில் நின்றிருக்கிறாள். சங்குண்ணி நாயர் படகிலிருந்து ஒரு கட்டைக் கையிலெடுத்து பாலா மரத்திற்கருகில் வீசியெறிகிறார். படகு முன்னோக்கி நகர்கிறது. ஆனால், அவர் வைத்த கண் எடுக்காமல் பின்னால் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த பாலா மரத்தின் கிளையில் ஒரு புதிய பறவை வந்து அமர்கிறது. இனிய குரலில் அது பாட ஆரம்பிக்கிறது. 'கிழக்கே வா' என்று சொல்லியவாறு ஒரு குயில் கிழக்கு திசை நோக்கிப் பறக்கிறது. நதியின் வளைவு வரும்போது, சங்குண்ணி நாயர் தென்னை மரத்தினூடே தூரத்தில் பார்க்கிறார். அவள் பாலா மரத்திற்கருகில் வந்து அவர் வீசியெறிந்த அந்தக் கட்டைக் கையில் எடுத்துக்கொண்டு மெதுவாக நடந்து போகிறாள். அவள் தன்னுடைய பரிசை ஏற்றுக்கொண்டு எடுத்துப்போகும் காட்சியைப் பார்த்து சங்குண்ணி நாயர் மகிழ்ச்சியின் உச்சிக்குச் சென்று சிலிர்ப்படைந்து தனக்குத்தானே சிரித்துக் கொள்கிறார்... அவள் ஒரு மலர் நிலவு. அந்தப் பாலா மரத்திற்கடியில் அவர்கள் இணைகிறார்கள். காதல் உணர்வால் துடிக்கும் இரண்டு கிராம மணம் கமழும் இதயங்கள் பலவகைப்பட்ட சரஸ சல்லாபங்கள், ரகசியங்களின் வெளிப்பாடுகள், இனிய எதிர்பார்ப்புகள், வாக்குறுதிகள் என ஐந்து மாதங்கள் இப்படியே ஓடி மறைகின்றன. கடைசியில் ஒருநாள் இரவு அவள் அவரிடம் பயங்கரமான ஒரு ரகசியத்தை வாய் திறந்து கூறுகிறாள். விரைவில் தான் ஒரு தாயாகப் போகும் அறிகுறிகள் தன் உடம்பில் தெரிய ஆரம்பித்து விட்டன என்கிறாள். அவள் சொன்ன அந்த விஷயம் சங்குண்ணி நாயரின் நரம்புகளைச் செயலிழக்கச் செய்கின்றன. அவர் ஒரு முழு பயந்தாங்கொள்ளியாக மாறுகிறார். ஒழுக்கம் அவரின் திருமணம் ஆகாமல் இருக்கும் நிலையைக் கேள்வி கேட்கிறது. கடைசியில் அவளை அந்த பரிதாப நிலையில் விட்டுவிட்டு சங்குண்ணி நாயர் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்.
ஊரைவிட்டு வெளியேறிய அவர் இந்தியாவின் பல இடங்களுக்கும் போனார். பல கஷ்டங்களையும் அனுபவித்தார். பல திசைகளிலும் பணி செய்தார். இறுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு ஒருநாள் இரவு பயணச்சீட்டு இல்லாமலேயே காட்ஸ்லா புகைவண்டி நிலையத்தில் வந்து இறங்கினார். முபண்டாரில் அவர் ஒரு வருடம் வேலை செய்தார். பிறகு முஸாபணியிலிருக்கும் சுரங்கத்தில் தொழிலாளியாகச் சேர்ந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியும் விட்டார்.
இந்த நீண்ட வெளியூர் வாழ்க்கைக்கு மத்தியில் ஒருதடவை கூட அவர் தன்னுடைய ஊரைப்பற்றியோ தான் ஏமாற்றிவிட்டு வந்த இளம்பெண்ணைப் பற்றியோ விசாரித்துப் பார்ப்பதற்கான தைரியம் அவருக்கு இல்லவே இல்லை. சங்குண்ணி நாயருக்குச் சொந்தம் என்று கூற ஊரில் யாரும் இல்லை. இருந்தாலும் ஊரைப்போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பலமுறை அவர் மனதில் தோன்றியதுண்டு.