புதிய மனிதன் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7358
"நான்... வர்றதா? பல இடங்களுக்கும் போனேன். கொஞ்சம் தண்ணி..."
சங்குண்ணி சிறிது நேரம் தயங்கியவாறு நின்றார். பிறகு உள்ளே போய் ஒரு மண் பானையிலிருந்து கொஞ்சம் தண்ணீரை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்து அங்கு உட்கார்ந்திருந்த இளைஞனிடம் கொடுத்தார். அவன் ஒரே மூச்சில் அந்தத் தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்தான். மீண்டும் தண்ணீர் வேண்டுமென்று பாத்திரத்தை நீட்டிக் கேட்டான்.
சங்குண்ணி நாயர் மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அவன் அது முழுவதையும் குடித்தான். பாத்திரத்தைக் கீழே வைத்தான்.
"என்ன, உடம்புக்கு சரியில்லையா?"- சங்குண்ணி நாயர் கேட்டார்.
"காய்ச்சல்... குளிர் காய்ச்சல்... ஹும்... ஹும்... ஹும்..."
அவன் துணியை விரித்து வெறும் தரையில் படுக்க முயற்சித்தான்.
"இங்கே குளிர்ல படுக்க வேண்டாம். உள்ளே வா..."
சங்குண்ணி நாயர் அவனைக் கையைப்பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டு போனார். உள்ளே இருந்த ஒரு கட்டிலில் ஒரு பழைய போர்வையை விரித்துப்போட்டு அவனை அதில் படுக்கச் சொன்னார். ஒரு கம்பளியால் அவனை மூடிவிட்ட சங்குண்ணிநாயர் இரக்கத்துடனும் ஒருவித சந்தேகத்துடனும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"ஆமாம்... அதே கண்கள்தான்... அதே முகம்... கடவுள் என்னைச் சோதிச்சுப் பார்க்கிறாரோ?"- வெளியே வந்த சங்குண்ணி நாயர் தனக்குத்தானே கூறிக்கொண்டார்.
பின் என்ன நினைத்தாரோ அவர் மீண்டும் அந்த இளைஞன் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் போய் அமைதியாக நின்றார்.
அந்த இளைஞன் கண்களைத் திறந்தான்.
"என்ன வேணும்?"- சங்குண்ணி நாயர் குனிந்தவாறு கேட்டார்.
"எனக்கு இன்னும் தாகமா இருக்கு. தண்ணி... சுடுதண்ணி கிடைச்சா நல்லா இருக்கும்..."
சங்குண்ணி நாயர் வெளியே வந்து இருட்டுக்கு மத்தியில் தேநீர் கடையை நோக்கி நடந்தார். அங்கிருந்து ஒரு பாத்திரத்தில் தேநீரும், இரண்டு மூன்று ரொட்டிகளும் வாங்கிக்கொண்டு அவர் திரும்பினார்.
அந்த இளைஞன் சிறிது தேநீரை அருந்தி, ஒரு சிறு ரொட்டித் துண்டைத் தின்றான். மீதி இருந்ததை சங்குண்ணி நாயர் சாப்பிட்டார்.
"எந்த ஊரு?"- சங்குண்ணி நாயர் ஆர்வம் மேலோங்கக் கேட்டார்.
"கண்ணூர் தாலுகாவுல இருக்கு."
சங்குண்ணி நாயரின் இதயம் 'படபட'வென அடித்தது. அவரின் ஊர் கூட அந்த தாலுகாவில்தான் இருக்கிறது.
"இங்கே எப்படி வந்தே?"
"பல இடங்களுக்கும் போனேன். கடைசியில் இந்த ஊருக்கு வந்திருக்கேன்."
"இந்த வீட்டை யாரு காட்டினது?"
"யாரும் காட்டல. நானேதான் இங்கே வந்தேன்."
"உன் பேரு என்ன?"
"குட்டப்பன் நாயர்."
"ஊர்ல இருந்து புறப்பட்டு எவ்வளவு நாட்களாச்சு?"
"ஒரு மாசம் முடிஞ்சது."
"ஊர்ல யார் யாரெல்லாம் இருக்காங்க?"
"யாருமில்ல..."
அந்த இளைஞன் மிகவும் களைத்துப்போய் காணப்பட்டான். அவன் படுக்கையில் படுத்தவாறு நடுங்கிக் கொண்டிருந்தான்.
"அதிகம் பேச வேண்டாம். பேசாம தூங்கு-..."
சங்குண்ணி நாயர் அவனுக்கு நன்றாகப் போர்த்தி விட்டார். பிறகு கட்டிலுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு பாயை விரித்து அதில் அவர் படுத்தார்.
"நான் இதோ... இங்கேதான் படுத்திருக்கேன். ஏதாவது தேவைன்னா என்னைக் கூப்பிடு..."
சங்குண்ணி நாயருக்கு ஒரு பொட்டுகூட தூக்கம் வரவில்லை. ஆனால், அவரின் பல சந்தேகங்கள் அடங்கிய சிந்தனைகளுக்கும், ஞாபகத்தில் வந்த பழைய நினைவுகளுக்கும் கீழே, முன்பு அவர் எப்போதும் அனுபவித்து அறிந்திராத ஒரு ஆனந்தம் கலந்திருந்ததென்னவோ உண்மை. நீண்ட காலமாக அவர் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரும் நிதி இப்போது சிறிதும் எதிர்பார்க்காமலேயே தனக்குக் கிடைத்துவிட்டதைப் போல அவர் உணர்ந்தார்.
மறுநாள் சங்குண்ணிநாயர் வேலைக்குப் போகவில்லை. அதிகாலை நான்கு மணிக்கு அவர் சுரங்கத்திற்குப் பணிக்குப் போகவேண்டும்.
"மகனே... எப்படி இருக்கு? உனக்கு என்ன வேணும்?"- அந்த இளைஞன் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு பரிவுடன் கேட்டார் சங்குண்ணி நாயர்.
அதைக் கேட்டதும் அந்த இளைஞனின் கண்களில் நீர் அரும்பிவிட்டது. அவன் கேட்டான்: "என்கிட்ட இந்த அளவுக்கு கனிவா நடக்குற நீங்க யார்னு தெரிஞ்சுக்கலாமா?"
சங்குண்ணி நாயர் காட்டாறைப்போல அடக்க முடியாமல் அழுதார். அந்த இளைஞனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்றார்.
சிறிது நேரம் சென்றதும் சங்குண்ணிநாயர் தன்னுடைய பணப்பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு அவருடைய நண்பர் உண்ணிக்கிருஷ்ண மேனனைத் தேடிப்போனார்.
"நீங்க இப்பவே ஜாம்ஷெட்பூருக்குப் போயி ஒரு நல்ல டாக்டரை அழைச்சிட்டு வரணும். தனியா ஒரு கார் ஏற்பாடு செஞ்சிக்கோங்க. பணம் செலவாகுறதைப் பற்றி கவலைப்படவேண்டாம்"- சங்குண்ணி நாயர் உண்ணிக்கிருஷ்ண மேனனின் கையில் ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களைத் தந்தார்.
சாயங்காலம் டாக்டர் வந்து சிகிச்சையை ஆரம்பித்தார். சங்குண்ணிநாயர் அந்த இளைஞனையே பார்த்தவாறு அருகிலேயே நின்றிருந்தார்.
அன்று இரவு அவர் அந்த இளைஞனிடம் கேட்டார்:
"அம்மா இல்லையா?"
"இல்ல..."
சிறிது நேரம் அவன் சங்குண்ணி நாயரின் முகத்தையே ஒருவித உணர்ச்சி மேலோங்கப் பார்த்தான். பிறகு தழுதழுத்த குரலில் அவன் சொன்னான்:
"என் கதையை நான் யார்கிட்டேயும் இதுவரை சொன்னது இல்ல. ஆனால், உங்களுக்குத் தெரியாம அதை மறைச்சு வைக்கணும்னு நான் நினைக்கல. என்னுடைய அப்பா யார்னு எனக்கு இதுவரை தெரியாது. என்னுடைய தாய் என்னை ஒரு மருத்துவமனையில பெத்தாங்க. என்னை ஒரு டாக்டர் தத்து எடுத்தாரு. பதினாறு வருடங்கள் என்னை வளர்த்தது அவர்தான். டாக்டர் வீட்டுல ஒரு வேலைக்காரி இருந்தா. நான் அவளைக் காதலிக்க ஆரம்பிச்சேன். கடைசியில அவ வயித்துல ஒரு குழந்தை உருவாகி இருக்குன்னு எனக்குத் தெரிய ஆரம்பிச்சவுடனே, என் நடவடிக்கை மாற ஆரம்பிச்சிடுச்சு. டாக்டர் தன்னோட சொந்த மகனைப்போல என்னை வளர்த்தாரு. அவமானம் வரப்போறது உறுதின்னு தெரிஞ்சவுடனே நான் ஒரு மனிதன்றதையே முழுசா மறந்துட்டேன். ஒரு மிருகத்தைப்போல நான் மாறிட்டேன். அவளை கொலை செய்ய திட்டம் போட்டேன். ஆனால், நான் செய்த முயற்சி பலிக்கல. அவள் சாகல. கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்திற்காக எனக்கு அஞ்சு வருட சிறைத்தண்டனை கிடைச்சது. தண்டனை முழுசா முடிஞ்சதும் நான் அந்த ஊரை விட்டு வெளியேறிட்டேன். பல இடங்கள்லயும் அலைஞ்சு திரிஞ்சு கடைசியில உடம்புக்கு முடியாத நிலையில நான் உங்க காலடியில வந்து சேர்ந்திருக்கேன்."
அவன் சொன்னதை சங்குண்ணி நாயர் மிகவும் கவனமாகக் கேட்டார்.