கம்யூனிஸ்ட் பாசறை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8748
கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் பாசறை என்று இங்கு கூறுகின்ற இந்த வைக்கம் முஹம்மது பஷீரும் போலீஸ்காரர்களும் ஏ.எஸ்.பி.யும் டி.எஸ்.பி. யும் எல்லாரும் சேர்ந்து ரெய்டு செய்து, அங்கிருந்த பொருட்களையும் தஸ்தாவேஜி களையும் மற்ற சம்பந்தப்பட்ட ஆதாரங் களையும் கைப்பற்றிய கதையைத் தான் இங்கு நான் கூறப் போகிறேன்.
கதை என்று சொன்னால் வெறும் கதை அல்ல. இது ஒரு சரித்திரம். ஆனால் சம்பவங்கள் நடந்து நூற்றாண்டுகள் கடந்துவிட்ட மாதிரி. ஞாபக மறதி ஆங்காங்கே நடக்க வாய்ப்புண்டு. பிறகு... இடையில் மனரீதியாக எனக்கு குழப்பங்கள் உண்டாக வும் வழியுண்டு. எல்லாமே சுத்த பைத்தியக்காரத்தனம். கடந்த காலத்தில் நடைபெற்ற பல சம்பவங்களும் இருளில் யாருக்கும் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன. இருந்தாலும், ஞாபகத்தின் வெளிச்சம் இங்கு பல நேரங்களில் பல விஷயங்களிலும் விழாமல் இல்லை. இந்தக் கதையில் வரும் மிகவும் முக்கியமான கதாபாத்தி ரம் கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்த கம்யூனிஸ்ட் கட்சி அன்று ஒரு சிறு பையன். இதில் வரும் பிரதான வில்லன் சர்வஸ்ரீ மேன்மை தங்கிய சர் சி.பி. ராமஸ்வாமி அய்யர் அவர்கள். அவர் அப்போது திருவிதாங்கூர் மாநிலத்தையும் சேர்த்து ஆட்சி செய்து கொண்டிருந்தார். அங்கு ஒரு மன்னரும் இருந்தார். இந்த மன்னருக்குக் கீழே ஆட்சியில் முக்கிய பங்கு வேண்டும் என்று மாநில காங்கிரஸ் என்ற அமைப்பு போராடிக் கொண்டிருந்தது.
இந்தக் காலத்திற்குச் சற்று முன்புதான் நான் பக்கத்து மாநிலமான கொச்சியை விட்டு வந்து எர்ணாகுளத்தில் குடியேறி வசிக்க ஆரம்பிக்கிறேன். பட்டினியும் எழுத்துமாக என் நாட்கள் நீங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு... என் பெயரில் வாரண்டும் இருந்தது. திருவிதாங்கூரைத் தாண்டினால் கைது செய்து என்னை ஒரு வழி பண்ணி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். நான் ராஜ துரோகம் செய்யக்கூடிய விதத்தில் பல கட்டுரைகளையும் எழுதிய ஐந்தாறு பத்திரிகைகள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு விட்டிருந்தன. திருவிதாங்கூரில் இருந்த கூலிப் பட்டாளமும், குண்டர்களும், போலீஸ்காரர்களும் சர்.சி.பி. ராமஸ்வாமி அய்யரின் மகத்தான தலைமையில் கொள்ளையான கொள்ளைகள் எல்லாம் நடத்திக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள் லாக்-அப்பில் கைதியை அடியோ அடி என்று அடித்துக் கொன்றார்கள். வெளியே கூட்டத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார்கள். இவ்வாறாக திருவிதாங்கூர் மன்னரின் ஆணையை அப்படியே பின்பற்றக்கூடிய சர் சி.பி. ராமஸ்வாமி அய்யர் அவர்கள் தன்னுடைய ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
“பரிதாபமான நிலையில் என் நாடு”, “பட்டத்தின் கெட்ட கனவு” என்ற என் இரண்டு கட்டுரைகளும் பிரசுரமான பத்திரிகையை அவர்கள் தேடிக் கண்டுபிடித்தார்கள். “தர்மராஜ்ஜியம்” என்ற பெயரில் முதல் கட்டுரையை ஒரு சிறிய புத்தகமாக நான் திருவிதாங்கூரில் விநியோகம் செய்தேன். அதையும் “கெட்ட கன”வையும் சர்.சி.பி. ராமஸ்வாமி அய்யர் தடை செய்தார். (இரண்டுக்கும் சேர்த்து இரண்டரை ஆண்டு கடும் தண்டனை எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.) அதற்குப் பிறகு நான் எதை எழுதினாலும் அதை அவர்கள் கட்டாயம் தடை செய்வார்கள் என்ற நிலை உண்டானது. அந்தக் காலத்தில் நான் எழுதிய படைப்புகளுக்குப் பணம் தர மாட்டார்கள். கதையோ கட்டுரையோ எழுத லாம். பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரம் செய்யும். காசு மட்டும் அதற்குக் கேட்கக் கூடாது. இலக்கிய தேவியை வணங்கி நிற்க வேண்டும். அர்ச்சனை செய்ய வேண்டும். இவற்றை நான் சரியாகச் செய்தேன். ஆனால், தளர்ந்துபோய், “அய்யோ... பசிக்குதே!” என்று என்னையும் அறியாமல் நான் இடையில் கத்தி விடுவேன்.
இப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஸ்டேட் காங்கிரஸ்ஸுக்கு எர்ணாகுளத்தில் ஒரு முகாம் இருந்தது. தலைவர்கள் எல்லாம் எங்கே தங்களைக் கைது பண்ணி விடுவார்களோ என்றெண்ணி அங்கேயே தங்கி இருந்தார்கள். இந்த நிலையில் வயது குறைந்த “யூத் லீக்” அணியினர் எங்கே தாங்கள் இருப்பது என்றே தெரியாமல் எர்ணாகுளத்தில் இங்குமங்குமாய் கண்டபடி அலைந்து கொண்டிருந்தார்கள். சிலர் என்னுடன் தங்கலாம் என்று இரவு நேரங்களில் என்னுடைய அறையைத் தேடி வருவார்கள். நான் தங்கியிருந்த அறை ஒரு சிறிய சமையலறைதான். அதற்கு மாத வாடகை கால் பிரிட்டிஷ் ரூபாய். (அப்போது பிரிட்டிஷ் ரூபாயுடன், திருவிதாங்கூர் ரூபாயும் இருந்தது). இதை ஒழுங்காக நான் தருவதே பெரிய பாடாக இருந்தது. ஆனால், நான் அன்று ஒரு முரட்டு மனிதனாக இருந்தேன். இரண்டு மிலிட்டரி காலணிகள், ஒரு பேண்ட், ஒரு ஜிப்பா- இவற்றை அணிந்து, பகத்சிங் மாடல் மீசையை வைத்துக் கொண்டு, இரும்புக் கம்பியை தொண்டை வழியே விழுங்கியது மாதிரி விறைப்பாக உடலை வைத்துக்கொண்டு கம்பீரமாக நடப்பேன். எதன் முன்னாலும் தலைகுனிந்து நிற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றிவிட்டுத் தான் நான் எர்ணாகுளத்திற்கு வந்து தாவளமடித்திருந்தேன். அதற்கு முன்பு ஒன்றிரண்டு முறை சிறையில் இருந்திருக்கிறேன். இரண்டாவது முறை சிறையை விட்டு வெளியே வந்தபோது சர்தார் பகத்சிங் என் தலைவராகிவிட்டார். சிறையில் வைத்துத்தான் பி. கிருஷ்ண பிள்ளையின் அறிமுகம் எனக்குக் கிடைத்ததோ? சரியாக ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் எர்ணாகுளத்தில்தான் அவர் எனக்கு நன்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனோம். இருவரும் சேர்ந்து போய் காபி குடிப்போம். ஒரே அறையில் உறங்கியிருக்கிறோம். ஒன்றாக அமர்ந்து பலவித விஷயங்களைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம்.
கிருஷ்ண பிள்ளை யாரையும் ஒரு பொருட்டாக நினைக்கக் கூடிய மனிதர் இல்லை. அவரிடம் நல்ல அறிவும் திறமையும் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் நான் பெரும்பாலும் அரசியலை விட்டு விலகி நின்றிருந்தேன். முழுக்க முழுக்க எழுத்தாளன் என்ற அங்கியை மட்டும் எனக்கு நான் அணிவித்துக் கொண்டிருந்தேன். எழுத்தாளன் என்றால் கதைகள் எழுதக்கூடிய ஆளாக நான் இருந்தேன். எனக்கு எத்தனையோ வகைப்பட்ட ஏராளமான அனுபவங்கள் இருந்தன. அந்த அனுபவங்களை வைத்து கதைகள் எழுதாமல் வேறு என்னதான் எழுதுவது? அதற்காக, கதைகளை மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்கவில்லை. சின்னச்சின்ன கட்டுரைகள் எல்லாம்கூட எழுதுவேன். அந்தக் கட்டுரைகளில் தீப்பொறி பறப்பதாக பொதுவாக படிக்கும் எல்லாருமே கூறுவார்கள். அந்த வகையான எழுத்தை என்னிடமிருந்து விரட்டு வதற்குப் படாதபாடு பட்டுத்தான் இந்த வகையான எழுத்திற்கு நான் வந்தேன்.