
சில சி.ஐ.டி.க்கள் பி. கிருஷ்ண பிள்ளையின் பின்னால் போய்ப் பார்த்தார்கள். பெரிதாக ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு திருவிதாங்கூர்காரன் பின்னாலும் நடந்து போய் பார்த்தார்கள். என் பின்னாலும் சி.ஐ.டி.க்கள் நடந்து வந்தார்கள் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். சி.ஐ.டி.க்களில் இரண்டு வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். திருவிதாங்கூர், கொச்சி. சர். சி.பி. ராமஸ்வாமியின் சி.ஐ.டி.க்கள் பல வேடங்களிலும் நடந்து திரிவார்கள். ஒருநாள் நாங்கள் சினிமா பார்க்கப் போனோம். சாதாரணமாக நாங்கள் தரை டிக்கெட்தான் வாங்குவோம். கட்டணம் ஒரு அணா. ஜார்ஜ் இல்லாமல் பத்து, பன்னிரண்டு ஆட்கள் இருந்தார்கள். கெ. தாமோதரனும் அந்தக் கூட்டத்தில் இருந்தார் என்று ஞாபகம். அந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவருக்கு நன்கு தெரிந்த ஒரு தொழிலாளி டிக்கெட் வாங்குவதற்காக ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு போனான். அவனை இதுவரை நாங்கள் அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. அந்த ஆள் ஒருவேளை சர்.சி.பி. ராமஸ்வாமியின் சி.ஐ.டி.யாக இருக்கலாம் என்பது எங்களின் ஊகம். அரசியல் தொண்டன் என்று வந்து எங்களுடன் உண்டு, உறங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பற்றி எங்களுக்குச் சந்தேகம் உண்டானது. நாங்கள் ஒருநாள் காலாற நடந்து வரலாம் என்று புறப்பட்டோம். எங்களுடன் ஜார்ஜ் இருந்தார். டி.வி. தாமஸ் (கம்யூனிஸ்ட் மந்திரி சபையில் இவர் அமைச்சராக இருந்தவர்) இருந்தார். வேறு சிலரும் இருந்தார்கள். நம்முடைய டி.வி. முன்பு கால்பந்து விளையாட்டு வீரராகவும், குஸ்திக்காரராகவும் இருந்தவர். எனக்கு அவர் குஸ்தி கற்றுத் தந்திருக்கிறார். அதனால் நான் “ஆசானே” என்றுதான் அவரை அழைப்பேன். நாங்கள் சிறிது தூரம் நடந்து சென்றோம். நடக்கும்போதே பல விஷயங்களைக் குறித்தும் பேசிக்கொண்டே இருந்தோம். சந்தேகம் தோன்றிய அரசியல் தொண்டனைப் பார்த்து டி.வி. என்னவோ கேட்டார். இல்லாவிட் டால் ஜார்ஜ் கேட்டாரா? எனக்கு யார் கேட்டது என்று சரியாக நினைவில் இல்லை. எது எப்படியோ... அந்த ஆள் சொன்ன பதில் எங்களுக்கு அவ்வளவு திருப்தி தரக்கூடியதாக இல்லை. அவன் பதிலில் முன்னுக்குப் பின் முரணாக பல விஷயங்கள் இருந்தன. அவ்வளவுதான். டி.வி. தாமஸ் வேகமாகப் பாய்ந்து அந்த மனிதனின் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை கொடுத்தார். அடுத்த நிமிடம் அவன் சாக்கடையில் விழுந்துகிடந்தான். “இதென்ன தாமச்சா” என்று கேட்டவாறு அந்த ஆள் எழுந்து வந்தபோது, டி.வி. சொன்னார். “டி.வி. தாமஸ் உன்னை உதைச்சார்னு உன்னோட சாமிக்கிட்ட போய் சொல்லுடா... ஓடு பக்தி விலாசத்துக்கு...”
அவன் ஓடினான்.
இப்படி பல சம்பவங்களும் ஆச்சரியப்படும் விதத்திலும், சிறிது கூட எதிர்பாராத வகையிலும் நடைபெற்று நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. எல்லா நாட்களிலும் ஜார்ஜின் அறையில் நிறைய ஆட்கள் இருந்துகொண்டு தாழ்ந்த குரலில் பலவிதப்பட்ட விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். யாருக்கும் தெரியாமல் திருவிதாங் கூருக்கு அண்டர் க்ரவுண்டில் போய் விட்டு வந்திருக்கிறார்கள். இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் போவார்கள். அவர்கள் எப்போது போனார்கள் என்று எனக்குத் தெரியாது. இப்படி நாட்கள் நீங்கிக் கொண்டிருக்கும்போது வருகிறது லேசாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம். சரியாகச் சொன்னால் இரவு எட்டரை மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் இருக்கும். நான் என்னுடைய அறையில் சாய்வு நாற்காலியில் சாய்திருக்கிறேன். அப்போது ஒரு ஆள் முற்றத்தில் வந்து நிற்கிறார்.
“ஜார்ஜ் சாரை கைது பண்ணிட்டாங்க” என்று அருகில் வந்து மெதுவான குரலில் என் காதில் அந்த ஆள் சொன்னார். சம்பவம் நடந்து அதிக நேரம் ஒன்றும் ஆகவில்லை. அந்த மனிதர் போன பிறகு, நான் ஒரு அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டி விட்டு வெளியே இறங்கினேன். எனக்கு எல்லாமே தமாஷா கத் தோன்றியது. எனக்கு அன்று நான்கு ரூபாய் கிடைத்திருந்தது. ஜார்ஜை அழைத்து தேநீர் வாங்கிக்கொடுக்க வேண்டும், ஏதாவது சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் நான் திட்டம் போட்டு வைத்திருந்தேன். சரி... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் ஜார்ஜின் அறை இருக்கும் பக்கம் போனேன். அங்கே யாருமே இல்லை. ஒரே மயான அமைதி அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இப்போது நான் என்ன செய்வது? விவரம் தெரிய வந்தால் எர்ணாகுளம் போலீஸ் ஜார்ஜின் அறையைச் சோதனை போட நிச்சயம் வருவார்கள். எதற்கு? எனக்கே தெரியாது. கட்டாயம் சோதனை பண்ணுவார்கள் என்பது மட்டும் என் மனதில் நன்றாகப்பட்டது. கம்யூனிஸ்ட் பாசறை என்பது ஜார்ஜின் அறையா? அதுவும் எனக்குத் தெரியாது. எது எப்படியோ- அந்த அறையில் ஏதாவது இருக்கும் அல்லவா? ஜார்ஜ் எல்லாவற்றையும் சரி பண்ணி வைத்துவிட்டுத்தான் போனாரா? அதுவும் எனக்குத் தெரியாது... அப்படியே ஏதாவது இருந்தாலும், அது போலீஸ் கையில் சிக்கினால் நன்றாகவா இருக்கும்?
ஆல் ரைட். நான் என்னுடைய நண்பன் ஒருவனின் அறைக்கு அருகில் சென்றேன். ஆனால், அறையில் அவன் இல்லை. அறை பூட்டிக் கிடந்தது. அந்த அறையில் ஒரு பழைய க்ராமஃபோன் இருந்தது. அதைக் கழற்றி ரிப்பேர் பண்ணுவதற்கு பயன்படும் ஒரு பெரிய ஸ்க்ரூ ட்ரைவர் அங்கு இருந்தது. நான் அதை ஜன்னல் வழியாக எட்டி எடுத்தேன். போலீஸ் எப்போது வரும்? மனதில் ஒரே பரபரப்பு. நான் பையனை அழைத்தேன்.
“டேய் சாமி!”
“என்ன சார்?” அவன் ஓடி வந்தான். நான் சொன்னேன்: “நீ போய் கேட்டுக்குப் பக்கத்துல நில்லு. போலீஸ்காரங்க இங்க வந்தாங் கன்னா, நீ உன்னோட நெஞ்சில் கையை வச்சு சயரோகம் வந்தது மாதிரி தொடர்ந்து இருமணும். நம்ம ஜார்ஜ் சாரோட நண்பர்கள் யாரையும் பார்த்தேன்னு வச்சுக்கோ. உடனே அவங்களை என்கிட்ட அனுப்பி வைக்கணும். சரி போ...”
அவன் சென்று கேட்டுக்குப் பக்கத்தில் இருட்டில் நின்றிருந்தான்.
அவனின் இருமல் சத்தத்தை ஒவ்வொரு நிமிடமும் நான் எதிர்பார்த்தேன். நான் போய் ஜார்ஜின் அறையில் தாழ்ப்பாளைப் பார்த்தேன். அதில் இருந்த மூன்று ஸ்க்ரூக்களையும் கழற்றி உள்ளே போனேன். ஜார்ஜின் பெட்டியை எடுத்தேன். என்னென்னவோ புத்தகங்களும் நோட்டுப் புத்தகங்களும் அங்கு இருந்தன. எல்லாவற்றையும் ஜார்ஜின் ஒரு வேஷ்டியில் போட்டுக் கட்டினேன். வேஸ்ட் பேப்பர் போடும் கூடையை எடுத்துப் பார்த்தேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook