கம்யூனிஸ்ட் பாசறை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8757
சில நேரங்களில் அதில்கூட ஏதாவது கிடந்தாலும் கிடக்கும். எல்லா வற்றையும் கட்டி மேற்குப் பக்கத்தில் இருந்த படியில் வைத்தேன். பிறகு... வேறு என்ன இருக்கிறது என்று பார்த்தேன். ஜார்ஜின் ஒரு பழைய கிழிந்து போயிருக்கும் சட்டை, ஒரு வேஷ்டி, “நியூ ஏஜ்” பேப்பரின் ஒரு பிரதி (அனேகமாக ஞாபக மறதி காரணமாக இதில் தவறு இருக்கலாம். அப்போது நியூ ஏஜ் இல்லை. “நேஷனல் ஃப்ரண்ட்” என்பதுதான் சரியாக இருக்கும். இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 40-ஆம் ஆண்டு 1966-ல் வந்தது. அதையொட்டி மலர் வெளியிடப்பட்டது. அதற்கு ஆசிரியராக இருந்தவர் ஸி. அச்சுதமேனன். அவர் கேரளத்தில் முதல் அமைச்சராக இருந்தார். அப்போது ஒரு மிகப்பெரிய பரிவாரத்துடன் என்னுடைய வீட்டுக்கு அவர் வந்திருக்கிறார்). இவைதாம் அந்த அறையில் இருந்த பொருட்கள். அறையைப் பூட்டினேன். முன்பு இருந்த மாதிரியே அறையைப் பூட்டுவதற்கு ரொம்பவும் கஷ்டப்பட வேண்டி வந்தது. எப்படியோ அதைப் பூட்டி விட்டேன். அடுத்த சில விநாடிகளில் இடையில் இருந்த சுவர்மேல் ஏறி குதித்து எல்லா பொருட்களையும் என்னுடைய அறைக்குக் கொண்டு வந்து சேர்த்தேன். என்னுடைய அறையில் ஒரு பெரிய பெட்டி இருந்தது. அது முழுக்க புத்தகங்கள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்துப் போட்டு, ஜார்ஜின் பொருட்களை அதில் போட்டு, மூடி ஆணியடித்து சரிப்படுத்தி னேன். எல்லாம் ஒழுங்காக திட்டமிட்டபடி நடந்தது. நான் வெளியில் இறங்கி அங்கே நின்றிருந்த பையனிடம் சொன்னேன்: “போதும்டா... எனக்கு ஏதோ தோணுச்சு. உன்னை நிக்கச் சொன்னேன். அவ்வளவுதான்!”
அவன் வந்து அறைக்கு வெளியே இருந்த திண்ணையில் உட்கார்ந்தான். நான் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பீடி புகைக்க ஆரம்பித்தேன். திடீரென்று என்ன தோன்றியதோ- எழுந்து, அந்தப் பெட்டியை எடுத்து அவன் தலையில் வைத்து நடந்து போகும்படி சொன்னேன். அடுத்த நிமிடம் வாசல் கதவைப் பூட்டினேன். அவனுடன் நானும் சேர்ந்து நடந்தேன். ஸ்க்ரூ ட்ரைவரை போவதற்கு முன்பு எடுத்த இடத்திலேயே வைத்தேன். ஒற்றையடிப் பாதை வழியே நடந்து நாங்கள் ஜார்ஜின் ஒரு நண்பனின் வீட்டை அடைந்தோம்.
“இதுல என்னோட சில புத்தகங்கள் இருக்கு. இது ஏற்கெனவே தடை செய்யப்பட்டது. போலீஸ்...” என்று கூறிய நான் பையனிடம் இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு சொன்னேன்: “டேய் சாமி... நீ உன் வீட்டுக்குப் போ. நாலு நாட்கள் கழிச்சு நீ வந்தா போதும்!”
பையன் அந்த இடத்தை விட்டு நீங்கியதும், ஜார்ஜின் நண்பனிடம் எல்லா விவரங்களையும் விளக்கிச் சொன்னேன். பெட்டியை நாங்கள் மேலே இருந்த பரணில் வைத்தோம்.
நான் சாப்பிட்டு முடித்து அறையில் வந்து படுத்துறங்கினேன். எல்லாமே நல்ல முறையில் நடந்து முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், போலீஸ் வராமல் நல்ல முறையில் நடந்து முடிந்ததாகச் சொல்ல முடியுமா?
மறுநாள் பகல் பத்து மணி இருக்கும். டி.எஸ்.பி., ஏ.எஸ்.பி. எல்லாரும் போலீஸ்காரர்கள் சகிதமாக வந்து ஜார்ஜின் அறையை வளைத்தார்கள். வீட்டுச் சொந்தக்காரரின் உதவியுடன் அறையைத் திறந்து அங்கிருந்த பொருட்களையும் ரகசிய தடயங்களையும் சீல் வைத்து எடுத்துக்கொண்டு போனார்கள். அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் சென்றபின், என்னுடைய சில நண்பர்களின் பத்திரிகைகளில் இப்படியொரு செய்தி பிரசுரமாகி இருந்தது. வெண்டைக்காய் செய்திதான்!
“எர்ணாகுளத்தில் இருந்த கம்யூனிஸ்ட் பாசறையை போலீஸ் சுற்றி வளைத்து, பல ரகசிய ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். இங்குதான் திரு. கெ.ஸி. ஜார்ஜ் வசித்தார்.”
இந்தச் செய்தியைப் படித்து சர்.சி.பி. ராமஸ்வாமி, திருவனந்தபுரம் பக்தி விலாசத்தில் இருந்தவாறு சிரித்துக்கொண்டி ருப்பார்: “ஹ...ஹ... ஹ...ஹ...ஹ...”
பின்குறிப்பு: சி.பி.ராமஸ்வாமி அய்யர் சமீபத்தில் மரணத்தைத் தழுவினார். அவரின் ஆத்மாவிற்கு கடவுள் நிரந்தர சாந்தியைத் தரட்டும்.