கம்யூனிஸ்ட் பாசறை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8757
அன்று அந்தச் சிறிய கட்டுரைகளை நானே சொந்தத்தில் எழுதுவேன். யூத் லீக்கிற்காகவும், சில நேரங்களில் ஸ்டேட் காங்கிரஸ்ஸுக்காகவும்கூட எழுதுவேன். காங்கிரஸ் சோஷியலிஸ்ட் பார்ட்டி கம்யூனிஸ்ட் பார்ட்டியாக மாறிக் கொண்டிருந்த காலமது என்று நினைக்கிறேன். சரியாக அது என் ஞாபகத்தில் இல்லை. நான் சொன்னேன் அல்லவா, வருடங்கள் அதிகமாகிவிட்டன. அந்தச் சிறு கட்டுரைகளை நான் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் பசியும் பட்டினியுமாக என்னுடைய வாழ்க்கை நீங்கிக் கொண்டிருந்தாலும், எனக்கொரு பட்லர் இருந்தான். அதாவது- வேலைக்காரன். அவன் எர்ணாகுளத்திற்கு அருகில் இருந்த ஒரு தீவைச் சேர்ந்தவன். படுத்துக் கிடக்கும்போது எனக்குக் கிடைத்தவன் அவன். அப்படியென்றால், ஒரு காம்பவுண்டுக்குள் இருந்த இரண்டு மூன்று கட்டடங்களில், நான் ஒரு கட்டடத்தில் தங்கிக் கொண்டிருந்தேன். எல்லா கட்டடத்திலும், ஆட்கள் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு கட்டடத்தின் வராந்தாவில் இவன் தூங்கிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் அவன் தூங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவனைத் தட்டி எழுப்பி, என்னுடன் வந்து இருக்கச் சொன்னேன். அவனுக்கு ஒரு புதிய பெயரையும் நான் வைத்தேன்.
“சாமி...”
சிறு கட்டுரைகள் வாங்க என்னிடம் வருபவர்கள் மதிய நேரம் வந்ததும், “நாம சாப்பிட வேண்டாமா?” என்று கேட்பார்கள். அப்போது நான் ஆட்களை எண்ணி விட்டு, பையனை அழைத்துச் சொல்வேன். “டேய், சாமி... நீ இந்த சார் கிட்ட ஒண்ணே கால் அணா வாங்கிட்டுப்போய், ஹோட்டல்ல எனக்கு ஒரு சாப்பாடு வேணும்னு சொல்லு. அப்படியே அஞ்சு இலை வேணும்னு சொல்லி வாங்கிட்டு வாடா!”
சிறு கட்டுரைகள் வாங்க வந்தவர்கள் ஒன்றே கால் அணா தருவார்கள். பையன் ஒரு கூடையுடன் ஹோட்டலுக்குள் நுழைந்து “பஷீர் சார் சோறு வாங்கிட்டு வரச் சொன்னார். அஞ்சு இலை வேணும்னு சொன்னார்” என்பான்.
சோறு தருபவன் என்னுடைய ரசிகன்! ஐந்து ஆட்கள் சாப்பிடக்கூடிய அளவுக்கு சோறு கொடுத்து அனுப்புவான்.
இந்த காலகட்டத்தில்தான் கெ.ஸி. ஜார்ஜ் (இவர் எம்.ஏ., எல்.எல்.பி. படித்தவர். கம்யூனிஸ்ட் மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர்) என்னுடைய கார்டியனாக வந்து சேர்கிறார். அவர் நான் இருக்கும் கட்டடத்திற்குப் பக்கத்துக் கட்டடத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டிருந்தார். எல்லா விஷயங் களும் சுத்தமாகவும், தெளிவாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய மனிதர் அவர். தன்னுடைய அறையை அவரே பெருக்கி சுத்தப்படுத்துவார். தான் அணியும் சட்டையையும் வேஷ்டியையும் அவரே துவைப்பார். கொஞ்சம் உடலில் ஊனமிருந்தாலும், ஆள் நல்லவரே. அந்த நல்ல மனிதரின் அறையில் இருந்து பி. கிருஷ்ணபிள்ளை, கெ. தாமோதரன், பி.டி. புன்னூஸ், எம்.என். கோவிந்தன் நாயர், என். ஸ்ரீகண்டன் நாயர், பி. கங்காதரன், ஆர். சுகதன், உண்ணிராஜா, ஈ.எம். சங்கரன் நம்பூதிரிப் பாடு, குளத்துங்கல் போத்தன், சர்தார் சந்த்ரோத், வர்கீஸ் வைத்யன், டி.வி. தாமஸ் ஆகியோர் வெளியே வந்ததைப் பார்த்ததாக சி.ஐ.டி. ரிப்போர்ட் இருந்தது. எது எப்படியோ... நான் சொன்ன இந்த முக்கிய நபர்கள் எல்லாரையும் எனக்கு நன்றாகத் தெரியும். இவர்களில் சிலருடன் நான் சேர்ந்து தங்கியிருக்கிறேன். ஒன்றாக சிறையில் சிலருடன் இருந்த அனுபவமும் உண்டு. சாயங்காலம் ஆகிவிட்டால் நான் அறையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தீர்மான மான குரலில் கூறியிருந்தார் ஜார்ஜ். மாலை நேரம் வந்துவிட்டால், தட்டுத் தடுமாறி என்னுடைய அறைக்கு அவர் வருவார்.
“நீ எங்கே போயிருந்தே?” ஜார்ஜ் கேட்பார். குரலில் ஒரு அதிகார தோரணை தொனிக்கும்.
“இங்கேதான் இருந்தேன். ஜார்ஜ்.”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தப்போ, உன்னைக் காணலியே!”
ஜார்ஜ் என் இதயத் துடிப்பைப் பரிசோதிப்பார். நான் வேலியைத் தாண்டி வேறு எங்காவது போனேனா இல்லையா என்று.
அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து உணவு உண்ணப் போவோம். இல்லாவிட்டால் சினிமா பார்க்கப் போவோம். சொல்லப் போனால் நாங்கள் இருவரும் படு சுதந்திரமான மனிதர்களாக இருந்தோம். அந்தக் காலத்தில் போக்கு ஸாஹிப் என்ற பெயரைக் கொண்ட ஒரு தலைச்சேரிக்காரன், படகுத்துறைப் பக்கத்தில் ஒரு உணவு விடுதி நடத்திக் கொண்டிருந்தான். ஒரு சாப்பாட்டின் விலை ஒன்றே கால் அணா. தேநீருக்கும் பலகாரத்திற்கும் அரையணா விலை.
அன்று ஜார்ஜ், டபுள் ரேஷன் அனுமதித்திருந்த ஒரே மனிதர் ஸ்ரீமான் என். ஸ்ரீகண்டன் நாயர். பொதுவாக எல்லாருக்கும் காலையில் இரண்டு காசுக்குப் புட்டு, ஒரு காசுக்கு கடலை, காலணாவுக்கு ஒரு சிங்கிள் தேநீர்- இவ்வளவு இருந்தாலே போதும். ஆனால் யாருக்கும் தெரியாமல் ஸ்ரீகண்டன் நாயருக்கு மட்டும் ஜார்ஜ் ஒரு அணா அனுமதிப்பார். ஓஹோ... ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். நம்முடைய சர் சி.பி. ராமஸ்வாமி அய்யர் அவர்கள் அப்போது ஒரு பெரிய அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார். அறிக்கை வெளிவந்தது- திருவனந்தபுரம் பக்தி விலாசத்தில் இருந்து. அறிக்கை என்னவென்றால்- எர்ணாகுளத்தில் எங்கோ ஒரு கம்யூனிஸ்ட் பாசறை இருக்கிறதாம்! சுருக்கமாகச் சொல்லப் போனால் அவரின் பார்வையில் ஸ்டேட் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பயங்கரமான கம்யூனிஸ்ட்டுகள்!
சர். சி.பி. ராமஸ்வாமி அய்யரின் இந்த அறிக்கை டெல்லியிருந்த வெள்ளைக்காரன், இங்க்லாண்ட் மன்னரின் பிரதிநிதியான வைஸ்ராய் வரை போய்ச் சேர்ந்தது. வைஸ்ராய்க்கும் மிகவும் வேண்டப்பட்டவரே சர்.சி.பி. ராமஸ்வாமி அய்யர்! இப்படிப்பட்ட ஒரு முக்கியமான மனிதர் முன் கொச்சியைப் போன்ற ஒரு சிறிய மாநிலத்தால் என்ன செய்துவிட முடியும்?
சம்பவம் என்னவென்றால் ஸ்டேட் காங்கிரஸைச் சேர்ந்த தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் கொச்சி மாநிலத்தில்தான் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் படு சுதந்திரமாக கொச்சி சமஸ்தானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். கொச்சி ராஜா இந்த அறிக்கையைப் பார்த்து ஒரு மாதிரி ஆகட்டும் என்ற எண்ணம்தான் அவர் மனதில். தேவைப்பட்டால் வெள்ளைப் பட்டாளத்தையே இங்கு கொண்டு வந்தால் போயிற்று என்ற எண்ணம் சர்.சி.பி. ராமஸ்வாமி அய்யருக்கு. (இங்க்லாண்ட் மன்னரின் வெள்ளைக்காரப் பட்டாளம்தான் இந்தியாவில் இருந்தது. இங்க்லாண்ட் மன்னர் இந்தியாவின் சக்கரவர்த்தி). அதனால் எர்ணாகுளம் போலீஸ் மிகவும் உஷாராகிவிட்டது. எங்கேடா இருக்கிறது இந்த கம்யூனிஸ்ட் பாசறை?
சில சி.ஐ.டிக்கள் ஸ்டேட் காங்கிரஸ் முகாமைப் போய்ப் பார்த்தார்கள். மகாத்மா காந்திக்கு ஜே! அங்கே அகிம்சையும் கதரும்தான் தெரிந்தன. அப்போது நம்முடைய சி.பி. ராமஸ்வாமி அய்யர் சொன்ன கம்யூனிஸ்ட் பாசறை எங்கே?