இளமைக்கால நண்பன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6684
பச்சு வேகமாக படிகளில் ஏறி வந்து காரின் சாவியை மேல் நோக்கி தூக்கி எறிந்து பிடித்தவாறு என்னிடம் சொன்னான்:
"வா மாதவி... தடிச்சி பெண்ணே... என் கூடவா. இந்த வீடு எல்லாத்தையும் விட்டுட்டு என் கூட வந்திரு. இப்போ இந்த நிமிடமே...."
"என்ன நீ சொல்றே?" நான் கேட்டேன்: "நீ நல்லா குடிச்சிருக்க போலிருக்கே! வீட்டை விட்டு உன் கூட வர்றதா? எனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? உன்னைப் போல எனக்கு முழு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு நினைச்சியா? வங்காளப் பையா... நீ தண்ணியைப் போட்டுட்டா இங்கே வர்ற?"
"நான் குடிக்கவும் இல்ல... ஒண்ணும் இல்ல..." அவன் சொன்னான்: "நான் நல்ல சுய நினைவோடதான் இருக்கேன். சுய உணர்வோட தான் பேசுறேன். நீ இங்கே இருக்க வேண்டியவளே இல்ல. என் தடிச்சி பெண்ணே... நீ என் வீட்ல இருக்க வேண்டியவ...."
அவன் அறைக்குள் எந்தவித நோக்கமும் இல்லாமல் இப்படியும் அப்படியுமாய் உலாத்தினான். அவனின் கால் பட்டு, மேஜை மேல் வைத்திருந்த மாத இதழ்களில் ஒன்று கீழே விழுந்தது. அதை எடுத்து மேஜை மேல் மீண்டும் வைத்த அவன் சொன்னான்:
"மாதவி... எனக்கு இந்த வாழ்க்கையே வெறுத்துப் போச்சு. நான் ஒரு சிகரெட் பிடிக்கட்டுமா?"
அவன் ஒரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்துப் புகைத்தான்.
"எனக்கு வாழ்க்கையில ஒரு மகிழ்ச்சியும் கிடைக்கல" அவன் சொன்னான்.
"நீ இப்போ என்ன விடுமுறையிலயா இருக்கே?" நான் கேட்டேன்.
"ம்.... நாலு நாட்கள் விடுமுறை" என்று அவன் சொன்னான்: "நான் அவளை வீட்ல கொண்டு போய் விட்டுட்டேன். இப்போ அவ கர்ப்பமாக இருக்கா!"
"அப்படியா? எனக்கு அதைக் கேக்குறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?"
"சந்தோஷமா? இதுல சந்தோஷப்படுறதுக்கு என்ன இருக்கு? உனக்குக் குழந்தை பிறந்திருக்குன்னு கேட்டப்போ எனக்குக் கொல்லணும் போல இருந்துச்சு. வெட்கமில்லாதவ..."
அவனின் முகம் இறுகின மாதிரி இருந்தது. இருப்பினும் அவனே தொடர்ந்தான்.
"எனக்கு அவளைப் பிடிக்கல... பெரிய பொறாமைக்காரியா இருக்கா. எதற்கெடுத்தாலும் அவளுக்கு சந்தேகம் வேற. எப்போ பார்த்தாலும் என்னைப் பாடா படுத்துறா. அவ மனசுல அமைதின்றது கொஞ்சமும் கிடையாது. இப்போ அவ கால்ல சொறி வேற வந்திருக்கு..."
அதை சொன்னபோது அவன் முகம் அஷ்ட கோணலாக மாறியது. முகத்தை ஒரு மாதிரி வைத்திருந்தான்.
"டாக்டர்கிட்ட காட்டினப்போ அவர் என்ன சொன்னார் தெரியுமா? மனசைத் தேவையில்லாம அலட்டிக்கக் கூடாது. பொதுவா இது மனசைப் பொறுத்த விஷயம்னு சொன்னாரு. நான் எதையும் கண்டுக்கிறது இல்ல... என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பேன்... இருந்தாலும்..."
அவன் சொல்ல வந்ததைக் கொஞ்சம் நிறுத்தினான். சில நிமிடங்களுக்குப் பிறகு அவனே தொடர்ந்தான்:
"உனக்குத்தான் என் கத்திகளைப் பற்றி தெரியும்ல? நான் சேகரிச்சு வச்சிருந்த பழைய கத்திகள்... நேப்பாளி கத்திகள்... அழகான வேலைப்பாடுகள் உள்ள அந்த வெட்டுக் கத்திகள்... அவை எல்லாவற்றையும் ஒரு நாள் எனக்குத் தெரியாம அவ வித்துட்டா. எல்லாத்தையும் விற்று கிடைச்ச காசுல ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சீனாச்சட்டி வாங்கியிருக்கா. சீனாச்சட்டி! அவளுக்கெப்படித்தான் இந்த மாதிரியெல்லாம் நடக்கத் தோணுதோ தெரியல..."
அவனின் முகத்தில் கோபமும், அதே நேரத்தில் ஆசைப்பட்டு வைத்திருந்த பொருட்கள் கையை விட்டுப் போனது குறித்த வருத்தமும் கலந்திருந்தன.
"இல்ல மாதவி... என்னால அவ கூட சேர்ந்து வாழ முடியாது. நான் செத்துடுவேன். இல்லாட்டி..."
இனம் புரியாத ஒரு கெஞ்சலான பாவனையுடன் அவன் என் முகத்தைப் பார்த்தான்.
"நீ என் கூட வந்திடு. உன் கூட மட்டுமே என்னால இனிமேல் வாழ முடியும். இன்னும் சில வருடங்கள் எனக்காக நீ காத்திருக்கக் கூடாதா? ஓ... மாதவி! என் தடிச்சிப் பெண்ணே.... நீ ஏன் கல்யாணம் பண்ணினே?"
"பச்சு... " அவன் சொன்னதையெல்லாம் கேட்டு விட்டு நான் சொன்னேன்:
"நீ வீட்டுக்குப் போ. உன் அம்மாவைப் போய்ப் பாரு. வீட்டுக்குப் போயி முகத்தைக் கழுவிட்டு, கொஞ்சம் ஓய்வு எடு. உன் முகம் ரொம்பவும் சிவந்து போயிருக்கு. தினமும் காலையிலேயே குடிக்க ஆரம்பிச்சிடுவியா என்ன?"
"கொஞ்சம் நிறுத்துறியா?" அவன் சொன்னது கட்டளை போல இருந்தது. தொடர்ந்து அவன் சொன்னான்:
"நீயும் என்னைப் பற்றி தப்பா பேச ஆரம்பிச்சிட்டியா? அவ என்னைக் கன்னா பின்னான்னு வாய்க்கு வந்தபடி பேசுறான்றதுனாலதான் நானே வெறுப்படைஞ்சு போயிருக்கேன். அவ அப்படிப் பேசுறதைக் கேட்டு பேசாம செத்துப் போயிடலாமான்னு கூட நினைச்சேன். நீயும் என்னைப் பற்றிப் பேச ஆரம்பிச்சிட்டியா?"
"சரி... கொஞ்சம் தேநீர் கொண்டு வரட்டுமா?" நான் கேட்டேன்.
"தேநீர்! காலை பத்து மணிக்கு தேநீரா? இங்க பாரு, மாதவி! எனக்குத் தேநீரும் வேண்டாம். ஒண்ணும் வேண்டாம். நீ இங்க வந்து உட்காரு. அங்கே இல்ல... இங்க...எனக்குப் பக்கத்துல... இந்த ஸோஃபா மேல... சொல்லு மாதவி... இந்த வீட்ல உனக்கு போரா இல்லியா? உண்மையைச் சொல்லு. இந்த இருண்டு போன வீட்ல எப்படி உன்னால இருக்க முடியுது? உனக்கே வெறுப்பா இல்லியா? நான் மட்டும் இப்படி ஒரு வீட்ல இருக்குறதா இருந்தா நிச்சயம் எனக்குப் பைத்தியமே பிடிச்சிடும். அது மட்டும் சத்தியம்...."
"எதுக்கு பைத்தியம் பிடிக்கும்? இங்க இருந்தா என்ன காரணத்துக்காக பைத்தியம் பிடிக்கும்?"
"இது... இது... இது ஒரு நல்ல வீடு இல்ல மாதவி. இந்த வீடு ஒரே இருட்டா இருக்கு. எனக்கு எப்படித் தெரியுமா? வீடு நல்ல வெளிச்சமா இருக்கணும். நான் ஒண்ணு கேட்கட்டுமா? பகல் முழுவதும் நீ வீட்ல இருந்து என்னதான் செய்யிறே?"
"என்ன செய்யிறேன்னு கேக்குறியா? இங்க ஏராளமான புத்தகங்கள் இருக்கு அவற்றைப் படிச்சிக்கிட்டு இருப்பேன். சில நேரங்கள்ல ஏதாவது எழுதுவேன்..."
"எழுதுறியா?" ஏதோ வெறுப்புடன் தனக்குத் தானே அவன் முணுமுணுத்தான். பிறகு மீண்டும் தொடர்ந்து சொன்னான்:
"மாதவி... தடிச்சிப் பெண்ணே... நீ என்ன பெரிய எழுத்தாளரா? அந்தக் கண்ணாடி முன்னாடி போய் நின்னு உன்னோட முகத்தைப் பாரு... உன்னைப் பார்த்தா எழுத்தாளர் மாதிரி தெரியுதா? ஹா... ஹா... எழுத்தாளர்! உன்னால எழுதவே முடியாது..."
"ஏன் எழுத முடியாது?" நானும் கேட்டேன்: