இளமைக்கால நண்பன் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6686
"சொல்லு... எதை வச்சு என்னால எழுத முடியாதுன்னு சொல்ற? நீ என்னோட கவிதைகள் எதையும் இதுவரை படிச்சது இல்லன்னு நினைக்கிறேன். பிறகு உனக்கு எப்படித் தெரியும், என்னால எழுத முடியுமா இல்லையான்னு?"
"ஓ... நீ சொல்றது ஒரு விதத்துல சரிதான்" ஒரு நிமிடம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்த அவன் சொன்னான். அவனே தொடர்ந்தான்:
"சரிதான்... நீ எழுதிய கவிதைகள் எதையும் நான் இதுவரை படிச்சது இல்ல... இந்தப் பொம்பளைங்க எழுதுற கவிதைகளையெல்லாம் படிக்கிறதுக்கு எனக்கு எங்கே நேரம் இருக்கு? உனக்குத் தெரியுமா? காலையில இருந்து ராத்திரி வரைக்கும் நான் கஷ்டப்பட்டு வேலை செய்யிறேன். ராத்திரி ஆயிட்டா பயங்கரமா களைச்சுப் போயி தூங்க ஆரம்பிச்சிடுறேன். பொம்பளைங்க எழுதுற கவிதைகளைப் படிக்கிறதுக்கு எனக்கு எங்கே நேரம் இருக்கு?"
நான் எதுவும் பேசவில்லை. அவன் கையில் இருந்த சிகரெட்டை ஒரு தட்டில் வைத்து அணைத்தான். பிறகு சொன்னான்:
"மாதவி! என் கூட கொஞ்சம் ட்ரைவிங்காவது வா. உன்கிட்ட கொஞ்சம் நான் பேசணும்..."
"இப்போ ட்ரைவிங்கிற்கெல்லாம் என்னால வர முடியாது. நான் உடனடியா குளிக்கணும். இங்க பார்... என் தலைமுடி எப்படி இருக்குன்னு!"
"நீயும் உன் குளியலும்!" அவன் உரத்த குரலில் சொன்னான்:
"நீ உடனடியா குளிக்கணுமா? நான் அஸ்ஸாம்ல இருந்து வந்திருக்கேன். உன்னைப் பார்க்கணும்ன்ற ஒரே ஆசையில... உன்னைப் பார்த்து ஆறு மாசமாச்சு. இனி ஒரு நிமிடம் கூட உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாதுன்னு மனசுல பட்டவுடனே உன்னைத் தேடி ஓடி வந்துவிட்டேன். ஆனா இங்கே வந்தா... ம்... நீ குளிக்கப் போறேன்ற மாதவி... தடிச்சிப் பெண்ணே! நீ என் கூட வா. இந்த நிமிடமே வா. நாம ட்ரைவிங் போகலாம்..."
"பச்சு! நீ நல்லா குடிச்சிருக்கே. அப்படித்தானே? காலையிலயே தண்ணிய போட்டுட்ட... இல்ல....?"
"நீ வர்றியா இல்லியா மாதவி?"
அவனின் குரல் முன்பைவிட சத்தமாக வந்தது.
"நீ ஒரு ட்ரைவிங் என்கூட வர்றியா இல்லியா? இல்லாட்டி குளிக்கப் போறியா?"
"சரி... சரி..." நான் சொன்னேன்: "நான் வர்றேன். ஒரேயடியா ஆர்ப்பாட்டம் பண்ணாதே. பக்கத்துல இருக்குறவங்க என்ன நினைப்பாங்க? ஆனா... ஒரு நிமிடம் காத்திரு. நான் முகத்தைக் கழுவிட்டு வர்றேன். இப்போ நடக்குறது எதுவுமே சரியானதா தெரியல..."
"எது சரியானதா தெரியல?" பச்சு உரத்த குரலில் கேட்டான்.
நான் முகத்தைக் கழுவி துடைத்தேன். குளியலறையை விட்டு நான் வெளியே வந்தபோது, அவன் வராந்தாவில் பொறுமை இல்லாமல் இப்படியும் அப்படியுமாய் நடந்து கொண்டிருந்தான்.
என்னைப் பார்த்ததும் அவன் மீண்டும் கேட்டான்:
"எது சரியானதா தெரியலைன்னு சொன்னே?"
"உன்கூட நான் வர்றதும்... நீ இங்கே வந்ததும்... உன் மனைவியைப் பற்றி என்கிட்ட சொன்னதும்... இது எல்லாம்தான் சரியில்லைன்னு சொல்றேன். ஆனா... நான் இவ்வளவு சொல்லி என்ன பிரயோஜனம்? உன்னால எதையுமே புரிஞ்சிக்க முடியல... என்னைப் புரிஞ்சிக்க நீ முயற்சியே பண்ணல..."
அவன் அதற்கு பதிலே சொல்லவில்லை. நேராக நடந்து சென்று காரில் ஏறினான். காரின் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு என் முகத்தையே பார்த்தான். "சீக்கிரம் ஏறு" என்ற அர்த்தம் அந்தப் பார்வையில் தெரிந்தது. இல்லாவிட்டால் அந்தப் பார்வை ஒரு யோசனையாக இருந்ததோ?
மனம் முழுக்க சிந்தனை ஆக்கிரமித்து விட்டிருந்தது. விவேகம் என்ற பலம் பொருந்திய விஷயத்தில் ஏதாவது பிரச்சினை உண்டாகி இருக்கிறதா என்ன?
கடைசியில் காரில் ஏறினேன். அவனின் இடது பக்கத்தில் அமர்ந்து கொண்டு நான் கண்களை மூடினேன். பிறகு சொன்னேன்:
"நான் ஒரு முட்டாள் பச்சு! அடி முட்டாள்?"
"நீ முட்டாள் இல்லை, மாதவி! நீ மாதவி... உன்னால இன்னொண்ணா ஆக முடியாது. நீ ஒரு சாதாரண பெண் இல்லை. ஒரு ஆண்... ஒரு பெண் உடம்பால் மூடப்பட்ட ஒரு ஆண்... உன்னால மட்டுமே என்னை சரியா புரிஞ்சுக்க முடியும்... எனக்கு... எனக்கு... வாழ்க்கை வெறுத்துப் போச்சு..."
கார் ஓடிக் கொண்டிருந்தது. பெரிய ஒரு தெருவை அடைந்தவுடன் அவன் கண்களைச் சுருக்கிக் கொண்டு ஆகாயத்தைப் பார்த்தான்.
"ஹோ... என்ன வெப்பம்!" - அவன் சொன்னான்: " இவ்வளவு வெப்பமான ஒரு நாளை நான் இதுவரை பார்த்ததே இல்ல... ஓ... நாம இப்போ எங்கே போகலாம் மாதவி? லேக் பக்கம் போவோமா? இல்லாட்டி விக்டோரியா மெமோரியலுக்கா? இல்லாட்டி ஸ்ட்ரான்ட்ரோடா? சொல்லு மாதவி... நாம எங்கே போகலாம்?"
"எங்கேயாவது போ... பச்சு! உனக்கு எங்கே போகணும்னு தோணுதோ, அங்கே போ, எனக்குன்னு சொந்த கருத்து எதுவும் இல்ல..." இயந்திரத்தனமாக நான் சொன்னேன்.
அப்போது அவன் சொன்னான்:
"இவ்வளவு வெப்பமான ஒரு நாளை இதுவரை நான் பார்த்ததே இல்ல... என்ன வெப்பம்!"