பெண்ணின் பெருமை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6954
நகரத்தைத் தாண்டி அமைதியாக இருக்கும் ஒரு பகுதியில் ஒரு சிறு பாதையில் நடந்து போன பிறகு இருக்கிறது அந்தச் சிறுவீடு. முற்றத்தில் துளசிச் செடிகள் வளர்ந்திருக்கின்றன. செத்திப் பூவும் மஞ்சள் மந்தாரமும் அங்கு நிறையவே இருக்கின்றன. முன் பக்க் கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறு ஓசை கூட இல்லை. வீடு பயங்கர அமைதியில் ஆழ்ந்திருக்கிறது.
ஒரு வேளை பாதை தவறி வந்து விட்டோமா? அவன் ஒரு நிமிடம் மனதிற்குள் எண்ணிப் பார்த்தான். அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. அந்த வீட்டுக்கு எப்படிப் போவது என்பதைச் சொல்லிக் கொடுத்த ஆள் குறித்துக் கொடுத்த பேப்பரைப் பாக்கெட்டிற்குள்ளிருந்து எடுத்து அவன் பார்த்தான். பிரதான சாலையில் இருந்து கீழே இறங்கிச் செல்லும் சிறு பாதை வழியாக நேராக நடந்து சென்றால் ஒரு சந்திப்பு வரும். அந்த இடத்தில் இரண்டு பக்கங்களாக பாதை பிரியும். இடது பக்கம் போகும் பாதையில் நடந்து சென்றால் மூன்றாவதாக இருக்கிறது அந்த வீடு. கேட்டில் வெள்ளை தான் பூ செடி அடர்த்தியாக படர்ந்து கிடந்தது. வீட்டின் முகப்பில் 'ஓம்' என்ற வாசகம் செதுக்கப்பட்டிருக்கிறது. நாம் தேடி வந்த வீடு இதுதான் - சந்தேகமே இல்லை என்று அவன் மனதிற்குள் முடிவு செய்தான். அவன் தயங்கித் தயங்கி வாசல் கதவைத் தட்டினான். உள்ளேயிருந்து எந்தவித சலனமும் தெரியவில்லை. ஒருவேளை உள்ளே யாருமே இல்லையோ?
இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்து விட்டு ஆளைப் பார்க்காமலே போவதா என்பதை நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மனதில் மிகவும் வருத்தமாக இருந்தது. இப்போது விட்டு விட்டால் பிறகு எப்போதுதான் பார்ப்பது? பார்க்கத்தான் முடியுமா? நாளை காலையில் ஒன்பது மணிக்கு விமானத்தில் போக பயணச் சீட்டு வாங்கியாகி விட்டது. பூமியின் இன்னொரு எல்லையில் இருக்கும் ஒரு இடத்திற்கு அவன் போகப் போகிறான். மறுபடியும் அவன் எப்போது திரும்பி வருவான் என்பது அவனுக்கே தெரியாது. அப்படியே திரும்பி வந்தாலும் அப்போது மிஸஸ் தலத் இருப்பாளோ என்னவோ? இப்போதே அவளுக்கு வயது எழுபத்தைந்தைத் தாண்டியிருக்குமே!
காலிங் பெல் இருக்கிறதா என்று அவன் தேடிப் பார்த்தான். இல்லை. இப்போது என்ன செய்வது? ஒன்றுமே புரியாத குழப்ப நிலையில் அவன் கையைச் சுருட்டி வைத்துக் கொண்டு கதவை மேலும் பலமாக தட்டினான். அழைத்தான்:
'இங்கே யாரும் இல்லியா?'
உள்ளே கட்டில் இலேசாக நகரும் சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் சத்தமும் மெதுவாகக் கேட்டது. கதவின் தாழ்ப்பாள் மெதுவாக நீங்கியது. நரைத்த ஒரு தலை தெரிந்தது. தளர்ந்து போன ஒரு உருவம். நெற்றியில் விபூதி. கழுத்தில் ருத்திராட்ச மாலை.
அவன் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்து நின்று விட்டான்.
இப்படியொரு உருவத்தைப் பார்ப்பதற்காகவா நாம் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்தோம் என்று மனதிற்குள் நினைத்தான். இந்த கிழவி... இந்த சாமியார் கோலத்தில் இருக்கும் வயதான பெண்...? மரியாதைக் குறைவு என்று தோன்றுகிற விதத்தில் அவன் அந்த வயதான கிழவியையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.
கிழவியும் ஒன்றுமே புரியாமல் நின்றிருந்தாள். கொஞ்சமும் சம்பந்தமே இல்லாமல் இங்கு வந்து நின்றிருக்கும் இந்த மனிதன் யார் என்று அவள் மனம் அசை போட்டுப் பார்த்தது.
தோற்றத்தைப் பார்க்கும்போது வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு இளைஞனைப் போல் தெரிகிறது... தான் மறந்து போன யாராவது ஒரு ஆளாக இருக்குமோ என்ற எண்ணத்துடன் அவள் ஞாபகப்படுத்திப் பார்ப்பது மாதிரி நெற்றியைத் தடவினாள்.
அவன் தயக்கத்துடன் சொன்னான் :
"அம்மா... மன்னிக்கணும். மிஸஸ் தலத்தோட வீடு இதுன்னு ஒருத்தர் சொன்னாரு. அவுங்க இங்க இல்லியா? இல்லாட்டி மன்னிக்கணும்...'
அடுத்த நிமிடம் கிழவியின் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து ஒரு ஆச்சரியக்குரல் புறப்பட்டு வந்தது.
'சுதீர் நீயா? நீ... நீ... இங்கே... இப்போ...'
கண்களில் நீர் அரும்ப கிழவி முன்னோக்கி நடந்து வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள். உருவத்தைப் பார்த்து அடையாளம் தெரியாவிட்டாலும், குரலை வைத்து அடையாளம் கண்டு கொண்ட அவனும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான்.
கிழவியின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அவள் இறுக கட்டிப் பிடித்ததில் அவனால் மூச்சு விடவே முடியவில்லை. எங்கே கையை எடுத்து விட்டால் இங்கிருந்து ஓடிப் போய் விடுவானோ என்பது மாதிரி அவள் அவனைப் பலமாகப் பிடித்திருந்தாள். அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவனின் தலை மேல் விழுந்து கொண்டிருந்தது. அவன் கண்களிலிருந்து வழிந்த நீர் கிழவியின் தோளில் விழுந்தது. தங்கள் இரண்டு பேரின் அன்புக்கும் பாத்திரமானவரும், தங்களைப் பிணைத்திருந்தவருமான ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகம் அந்த கண்ணீரில் கலந்து வழிந்தது.
அவர் உயிரோடு இருந்த அந்த நல்ல காலத்தில் இந்த அளவிற்குக் கிழவியுடன் நெருக்கம் உண்டாகாமற் போனதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று அவன் மனம் எண்ணிப் பார்த்தது.
'நான் முன்கூட்டியே வந்திருக்கணும், மேடம்... " - அவன் மனதில் குற்றவுணர்வு உண்டாக சொன்னான். 'ஆனா, நான் வரணும்னு நினைச்சிருந்தாலும் முடியாது. அவருக்குப் பின்னாடி எனக்கும் இடம் மாற்றம் உண்டாயிருச்சு. முதல்ல சிட்னிக்கு மாத்தினாங்க. பிறகு ஐப்பானுக்கு... பிறகு ஜெர்மனி... எட்டு வருடம் கழிச்சு இப்பத்தான் சொந்த ஊருக்கே என்னால வர முடியாது...'
கீழுதடு நடுங்க கிழவி மெதுவான குரலில் சொன்னாள் : 'என் கணவர் என்னை விட்டுட்டு கண் காணாத இடத்துக்குப் போயிட்டாரு. ஆனா, போறப்போ என்னைக் கூட்டிட்டுப் போகல. யாரும் என்னை அழைச்சிட்டுப் போகல. இப்பவும் நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். நீதான் பார்க்குறியே!'