பெண்ணின் பெருமை - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6958
அவன் அப்பத்தைப் பிய்த்து வாய்க்குள் போட்டவாறு சொன்னான் : 'என் தாய் எனக்கு எப்பவும் பண்ணித் தந்தது இந்த நெய்யப்பம்தான். அவுங்க தன் கைகளால இதைத் தயார் பண்ணி பக்கத்துல உட்கார்ந்து என்னைச் சாப்பிடச் சொல்லுவாங்க. எனக்கு நெய்யப்பம்னா உயிர்! மேடம், உங்க கையால எனக்கு இது கிடைச்சிருக்கே!’
மிஸஸ் தலத் பெஞ்சில் அவனுக்கு அடுத்து உட்கார்ந்து காப்பியை ஆற்றிக் கொண்டிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக காப்பியை அவன் கையில் தர, அவன் குடித்தான். இலேசாக சிரித்தவாறு அவன் சொன்னான் : 'மேடம், நீங்க உங்க கையால எனக்கு எவ்வளவோ தடவை காப்பி தந்திருக்கீங்க. ஆனா, இவ்வளவு ருசியான காப்பியை இதுக்கு முன்னாடி நீங்க தந்து நான் குடிச்சதே இல்ல. எவ்வளவு ருசியா இருக்கு!'
மிஸஸ் தலத் தலை குனிந்தவாறு சொன்னாள் : 'நானும் என் கையால தயார் பண்ணி இவ்வளவு பிரியமா இதுவரை வேற யாருக்கும் தந்தது இல்லை...'
மிஸஸ் தலத் சிறிது நேரம் என்னவோ யோசனையில் ஆழ்ந்தாள். பிறகு சொன்னாள்: 'வீட்டைப் பற்றி நினைச்சுப் பார்க்குறதுன்றது டாக்டர் தலத்துக்கு ரொம்பவும் பிடிக்கும். தன்னோட அம்மா... தன்னோட பாட்டி... அதுக்குப் பிறகு அவர் அடிக்கடி சொல்லுவாரு : 'டாலி, பாரதப் பெண்கள் எவ்வளவு கொடுத்து வச்சவங்களா இருந்திருக்காங்க! அவுங்களுக்குக் கொடுக்க மட்டும்தான் தெரிஞ்சிருக்கு. கொடுத்துக் கொடுத்து அதுனால கிடைச்ச சந்தோஷத்தை அவங்க அனுபவிச்சிருக்காங்க. அதுனாலதான் அவங்க வாழ்க்கையில முழு திருப்தியோட வாழ்ந்திருக்காங்க... உனக்குத் தெரியுமா?ன்னு. எனக்கு அப்போ அதைப் பற்றியெல்லாம் ஒண்ணும் தெரியாது. எவ்வளவோ வருடங்கள் கழிச்சு இப்பத்தான் எனக்கு அதோட அர்த்தமே புரியுது!'
சுதீர் எதுவும் பேசாமல் அந்த வயதான கிழவியின் சுருக்கங்கள் விழுந்த முகத்தையே பார்த்தவாறு அப்பத்தைத் தின்று கொண்டிருந்தான். இருவரையும் பார்த்தால் அப்பத்தின் ருசியை மிஸஸ் தலத்தான் அனுபவிப்பது போல் தோன்றும்.
மிஸஸ் தலத் பழைய ஞாபகங்களில் முழுமையாக மூழ்கி விட்டிருந்தாள். அவள் கேட்டாள் :
'நியூயார்க்ல இருந்தப்போ நம்ம வீட்டுக்கு முன்னாடி இருந்த பார்க்ல வெயில் காயுறதுக்காக வந்து உட்கார்ந்திருக்குற அந்த வயசான கிழவனை ஞாபகத்துல இருக்கா? உயரமா மெலிஞ்சு போய் இலேசா கூன் விழுந்து நடுங்கிக்கிட்டு இருக்குற கிழவன்...பாவம்...அந்த ஆளை அப்போ எனக்குப் பார்த்தாலே பிடிக்காது. எப்போ பார்த்தாலும் மூக்கை உறிஞ்சுக்கிட்டு... காது கூட அந்த ஆளுக்குக் கேட்காது. கிழிஞ்சு போன பேண்ட்டும் தொப்பியும்... ஒரு நாள் அந்த ஆளு என் பக்கத்துல வந்து கேட்டாரு : 'மேடம், உங்களைப் பார்த்து ஒண்ணு கேட்கட்டுமா? உங்க இந்தியாவுல அப்பா, அம்மாவைத் தெய்வத்தைப் போல நினைப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நான் கேள்விப்பட்டது உண்மையா?'ன்னு. நான் அப்படி மனசுக்குள் நினைச்சேனான்னு எனக்குத் தெரியாது. இருந்தாலும் 'ஆமா'ன்னு தலையை ஆட்டி வச்சேன். அப்போ அந்த ஆளு சொன்னாரு - 'மேடம், இந்தியா எவ்வளவு அருமையான நாடு!'ன்னு'.
சுதீர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. மிஸஸ் தலத் தொடர்ந்து சொன்னாள் : 'நான் இந்தியாவுல பிறந்தேன். ஆனா, வாழ்ந்தது இங்கே இல்லியே! என்னோட அப்பா, அம்மாவை நான் கடவுளா நினைக்கல. கடைசி காலத்துல அம்மா அடுத்தடுத்து எழுதியும் ஊர்ல வந்து வசிக்குறதுக்குப் பிடிக்காம இங்கே வராமலே இருந்துட்டேன். நாம என்ன கொடுத்தமோ, அதுதானே நமக்குக் கிடைக்கும்? இல்லையா சுதீர்? நான் யாருக்கும் ஒண்ணும் கொடுக்கலையே!'
அவன் உணர்ச்சி மேலோங்க சொன்னான் :
'அப்படிச் சொல்லாதீங்க மேடம். காலத்துக்கும் தேசத்துக்கும் ஏற்றபடிதான் மனிதர்கள் வாழ வேண்டியதிருக்கு. அன்னைக்கு இருந்த சூழ்நிலையே வேற. அதுல நீங்க பிரகாசமா ஒளி வீசினதை நாம மறுக்க முடியாது. டாக்டர் தலத் அடிக்கடி ஒண்ணு சொல்வாரு... அது உங்க ஞாபகத்துல இல்லியா? 'டாலி மட்டும் இல்லைன்னா நான் வெறும் நிழல்தான். பெரிய பெரிய பிரச்னைகளெல்லாம் அவளோட ஒரு சிரிப்புல மறைஞ்சு போகுது. உண்மையிலேயே பார்க்கப் போனா சூழ்நிலையைப் புரிஞ்சு நடக்குறவ அவதான்...'னு அவரு சொல்வதை நீங்க மறந்துட்டீங்களா?'
மிஸஸ் தலத் அதைக் கேட்டு தலையைக் குலுக்கினாள் : 'ஆமாம்மா... நீ சொல்றது சரிதான்.. அவருக்காக உண்டாக்கிக்கிட்டது தான் என்னோட வாழ்க்கை. வேற யாருக்குமே அந்த வாழ்க்கையில இடமில்ல. அதனாலதான் நான் தனியா வாழ பிரியப்பட்டதே. ஆஷா கூப்பிட்டா. ப்ரேமா கூப்பிட்டா. ரவியும் வரச் சொல்லி கட்டாயப்படுத்தாம இல்ல. எவ்வளவு போலித்தனமான அலங்கார வார்த்தைகள்! அவங்களுக்கு நல்லாவே தெரியும் காலப் போக்குல இந்தக் கிழவி தங்களுக்கு ஒரு சுமையா மாறிக்கிட்டு இருக்கான்னு. என்னோட வாழ்க்கை முறை அவங்களுக்குப் பிடிக்காமப் போகலாம். அவங்களோட விருப்பு வெறுப்புகளில் நான் தலையிட வேண்டியது வரலாம். சொல்லப்போனா அவங்களுக்கு உறவுன்னு சொல்லிக்கிறதுக்கு நான் மட்டும்தான் இருக்கேனா என்ன? மகளுக்கு அவளோட கணவன் சம்பந்தப்பட்ட சொந்தங்கள் இருக்கு. மகனுக்கு அவனோட மனைவி வகையில சொந்தக்காரங்க இருக்காங்க. வேண்டாம் சுதீர்... வேண்டாம்... நான் இன்னொருத்தரை நம்பி வாழ விரும்பல... எதுவுமே இல்லைன்னாக் கூட நான் நானாகவே சாகத்தான் விரும்புறேன். ஒரு சொந்தமும் எனக்கு வேண்டாம்...'
சுதீரால் அந்த வயதான கிழவியைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவளைப் பார்க்கும்போது அவனுக்குப் பெருமையாகக் கூட இருந்தது. இந்தத் தள்ளாத வயதிலும் மேடம் தலத் மேடம் தலத்தான் என்று பட்டது அவன் மனதில். அந்த சுய கவுரவம். அந்த மன உறுதி...
அவன் கடிகாரத்தைப் பார்த்தான். நேரம் அதிகமாகி விட்டிருந்தது.
எக்ஸ்பிரஸ் ட்ரெயினில் போனால்தான் உரிய நேரத்திற்கு அவன் விமான நிலையத்தை அடைய முடியும்.
அவன் எழுந்தான். விடைபெற்றுக் கொள்வதற்காக அவன் தலையைக் குனிந்தான் : 'மேடம்...'
மிஸஸ் தலத் அழுதவாறு அவனை மீண்டும் இறுக கட்டிப் பிடித்தாள்.
'மேடம் தலத் செத்துப் போயிட்டா, மகனே. டாக்டர் தலத் எப்போ செத்தாரோ, அப்பவே அவளும் போயிட்டா. நீ பார்க்குற இவ ஒரு அம்மா. தாழத்து குஞ்ஞிக்குட்டியம்மா. அப்படிச் சொன்னாத்தான் இங்க உள்ளவங்களுக்குத் தெரியும்.'