
அதைக் கேட்டு சுதீரின் கண்களில் கண்ணீர் நிறைந்து விட்டது. அவன் கிழவியின் கால்களில் விழுந்து வணங்கினான் : 'அம்மா, உங்களைப் பார்க்காம போயிருந்தா வாழ்க்கையில ஒரு மிகப் பெரிய பகுதியை நான் இழந்தது மாதிரி ஆகியிருக்கும். நான் மீண்டும் வருவேன். இது என்னோட வீடு. நீங்க என்னோட தாய். இப்போ எனக்குப் போக அனுமதி தாங்கம்மா...'
மிஸஸ் தலத் அவனின் தலையில் கையை வைத்து ஆசிர்வதித்தாள் : 'உனக்கு நல்லது நடக்கட்டும், சுதீர்! மிஸ்டர் தலத் அடிக்கடி சொல்லுவாரு தன்னோட வாரிசா வரப் போறவன் இந்தப் பையன்தான்னு. அவர் சொன்னது பலிக்கட்டும்.'
அவள் தான் சொல்லிக் கொண்டிருந்ததைச் சிறிது நிறுத்தினாள். பின்னர் தொடர்ந்தாள் : 'ஆனா, ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கோ. உனக்கு வரப்போற மனைவிக்கிட்ட சொல்லு... குழந்தைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் போர்டிங்கிற்கு அனுப்பக் கூடாதுன்னு... பெத்த தாய்தான் தன் பிள்ளைகளை வளர்க்கணும். அவங்களைக் கொஞ்சுறதோ தாலாட்டுறதோ எதுன்னாலும் அவதான் செய்யணும். அப்படின்னாத்தான் தாய் குழந்தைகளோட ஒரு பாகமாகவும், குழந்தைகள் தாயோட ஒரு பாகமாகவும் ஆக முடியும். புதுசா வரப்போற உன் மனைவிக்கிட்ட இதைத் தவறாம சொல்லு. அப்படின்னாத்தான் அவ சுகமா இருக்க முடியும்.'
சுதீர் இப்போதுதான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தான். அவன் கிழவியையே வைத்த கண் எடுக்காது பார்த்தான். அவள் தொடர்ந்தாள் :
'ஒண்ணுமே இல்லைன்னாக்கூட எல்லாம் போக சுகமான சில நினைவுகளாவது நம்ம கூட இருக்குமே! நினைவுகள்... வயசான காலத்துல அவை மட்டுமே நமக்கு ஆறுதலா இருக்கும். சுதீர்... நீ இன்னொரு தடவை வர்றப்போ, நான் உயிரோட இருப்பேனான்னு சொல்ல முடியாது. ஆனா, உன் மனசுலயாவது நான் வாழணும்...'
சுதீர் படிகளை விட்டு இறங்கிய பிறகு பின்னால் திரும்பிப் பார்த்தான். வாசலில் நின்று கொண்டிருக்கும் அந்த வயதான கிழவி... அவளின் உண்மைத் தோற்றத்தை அவன் இன்றுதான் பார்த்திருக்கிறான். அவன் பார்த்தது மேடம் தலத்தை அல்ல... லேடியை அல்ல... சமூக சேவகியை அல்ல... ஒரு தாயை... வெறும் ஒரு தாயை!
எந்த அளவிற்கு வயது காரணமாக தளர்ந்து போய் விட்டாள் அந்தத் தாய்! எப்படி மிடுக்காக ஒரு காலத்தில் இருந்த உருவம் அது! அம்மா! ஒரு வகையில் பார்க்கப் போனால் அவள் கொடுத்து வைத்தவள்தான். கடைசி காலத்திலாவது பெண்ணின் பெருமையை அந்தத் தாயால் உணர முடிந்ததே!
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook