பெண்ணின் பெருமை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 6958
சுதீர் பரிதாபம் மேலோங்க அந்த வயதான கிழவியைப் பற்றி நினைத்துப் பார்த்தான். கிழவியின் கணவர் இந்த உலகை விட்டு நீங்கி விட்டார். அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் நான்கு திசைகளாகப் பிரிந்து போய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் ஏற்*னவே இருந்தாலும் மிஸஸ் தலத் இப்போதும் தனக்குத் தானே எஜமானியாகத்தான் இருக்கிறாள். பிறவியிலேயே அவள் ஒரு சக்கரவர்த்தினிதான் போலிருக்கிறது. யார் முன்பும் அவள் எந்தக் காலத்திலும் தலை குனிவதில்லை.
கண்ணீரை அடக்கிக் கொண்டு முகத்தைத் துடைத்தவாறு மிஸஸ் தலத் சொன்னாள்: 'உட்காரு சுதீர்... நான் புலம்புறதுக்காக என்னை மன்னிச்சுடு. உன்னைப் பார்த்ததும் நான் அவரைப் பற்றி நினைக்க ஆரம்பிச்சிட்டேன். இனியொரு தடவை நாம பார்ப்போம்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல.'
மிஸஸ் தலத்திற்கு நேர் எதிராக பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவன் சொன்னான் : 'அப்படிச் சொல்லாதீங்க, மேடம், என்னைப் பொறுத்தவரை அவரை என் தந்தையை விட பெருசா நினைச்சேன். எனக்கு வேலை தந்தது அவர்தான். எவ்வளவு நாட்கள் அவர்கிட்ட நான் வேலை பார்த்தேன்! அவரை என்னால மறக்க முடியுமா?'
மிஸஸ் தலத் ஒன்றுமே பேசவில்லை. அவள் ஜெபம் சொல்வதைப் போல உதடுகளை இலேசாக அசைத்தவாறு விரல்களால் என்னவோ கணக்கு போட்டுக் கொண்டிருந்தாள். கடந்து வந்த வாழ்க்கையின் பக்கங்களை நோக்கி அவளின் மனம் சென்று விட்டது போலும்! அவளிடம் ஏதாவது பேச வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக அவன் கேட்டான் :
'ரமேஷ் இப்போ எங்கே இருக்குறாரு?'
'பாரிஸ்ல...'
'ரவி?'
'இந்தோனேஷியாவுல இருக்கான். ஆஷா டெல்லியிலயும் ப்ரேமா குஜராத்துலயும் இருக்காங்க. எல்லோரும் எந்தப் பிரச்னையும் இல்லாம நல்ல சுகத்தோட இருக்காங்க!'
சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை.
அவன் சொன்னான் : ' மேடம், நீங்க டெல்லியில இருப்பீங்கன்னுதான் நான் முதல்ல நினைச்சேன். அவர் இறந்து போன பிறகு நீங்க ஆஷா கூடத்தானே இருந்தீங்க! ஆனா, இடையில நான் உண்ணியைப் பார்த்தேன். அப்பத்தான் நீங்க இங்க இருக்குற விஷயமே எனக்கு தெரிய வந்துச்சு. இங்கே வந்ததுல இருந்து நான் வீட்டைத் தேடிக்கிட்டே இருக்கேன். நேத்துத்தான் இந்த முகவரியே கிடைச்சது. அப்பவே வீட்டைக் கண்டு பிடிச்சாகணும்ன்ற முடிவுக்கு வந்துட்டேன். இங்கே வந்த பிறகு கூட என் சந்தேகம் தீரல... மேடம், இப்படியொரு இடத்துல... இந்த மாதிரி...'
மிஸஸ் தலத் சிரித்தாள் : 'என்னோட அப்பாவும் அம்மாவும் இதைவிட மோசமா இருந்த வீட்டுலதான் வாழ்ந்தாங்க. அங்கேதான் நான் வளர்ந்தேன்..."
திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு அவள் எழுந்தாள் : 'ஓ... நீ ரொம்ப தூரம் நடந்து வந்திருக்கே! உனக்கு ஒண்ணுமே நான் தரலியே! இரு... இப்போ வந்திர்றேன்!'
மிஸஸ் தலத் ஒரு குடும்பத் தலைவி என்ற எண்ணத்தை நிலை நாட்டும் வண்ணம் உள்ளே நடந்தபோது பல வருடங்களுக்கு முன்னால் லண்டனிலும் நியூயார்க்கிலும் தான் பார்த்த மிஸஸ் தலத்தை அவன் அப்போது மனதிற்குள் நினைத்துப் பார்த்தான். அவளின் வீட்டில் இருக்கும் வரவேற்பறையைப் போல் ஆடம்பரமான ஒன்றை அவன் வேறு எந்த வீட்டிலும் பார்த்ததே இல்லை. ஆடை அலங்காரங்களும், விருந்தோம்பலின் நவநாகரீகத் தன்மையும், உரையாடும் முறையும், தலையை உயர்த்திக் கொண்டு கையை ஆட்டியவாறு பேசுவதும் - ஒரு முறை பார்த்தால் மிஸஸ் தலத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உத்தியோகம் சம்பந்தமான விருந்துகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் மிஸஸ் தலத்தைப் பார்ப்பவர்கள் இந்திய பெண்மையின் சின்னம் என்றுதான் அவளைக் குறிப்பிடுவார்கள். அவளின் ஆடை அணியும் விதத்திலும் நடந்து கொள்ளும் முறையிலும் ஒரு மகாராணியின் மிடுக்கு தெரியும். தான் முதன் முதலாக அவளைச் சந்தித்த நிகழ்ச்சியை அவன் அப்போது நினைத்துப் பார்த்தான். டாக்டர் தலத்தின் செக்ரட்டரியாக அவன் சார்ஜ் எடுத்துக் கொண்ட நாளன்று மாலை நேரம். அமைதியான குணத்தைக் கொண்டவரும், நிறைய படித்த பண்டிதரும், நல்ல இதயத்துக்குச் சொந்தக்காரருமான டாக்டர்... தலத் தன்னுடைய மனைவியை அழைத்தார் :
'இங்க பாரு... நமக்கு அஞ்சாவது ஒரு பிள்ளை கிடைச்சிருக்கான். ஒரு மகன்... ஆனா, ஒரு வித்தியாசம்... இவன் கொஞ்ச நாட்கள் நம்ம கூடவே இருப்பான்.'
மிஸஸ் தலத் ஒரு எஜமானியின் இடைவெளியை வெளிப்படுத்தியவாறு புன்னகைத்துக் கொண்டே கையை நீட்டினாள். ஆனால், அவளின் அந்தக் கைகளைப் பற்றியபோது இப்போது அனுபவித்த உஷ்ணம் அப்போது அவற்றில் இல்லை என்பதை அவன் நினைத்துப் பார்த்தான்.
மிஸஸ் தலத்தின் நான்கு பிள்ளைகளும் இப்போது இருப்பதைப் போலவே அப்போதும் நாலு வெவ்வேறு இடங்களில் தான் இருந்தார்கள். மூத்தவர்கள் கல்லூரி விடுதிகளிலும், இளையவர்கள் போர்டிங்கிலும். விடுமுறை இருக்கிறபோது எப்போதாவது வருவார்கள், போவார்கள். அவ்வளவுதான்.
மிஸஸ் தலத் பிள்ளைகளைப் பெற்றார் என்பது மட்டும்தான். அவர்களுக்கு அவள் தாய்ப்பால் கொடுக்கவில்லை. தாலாட்டு பாடல் பாடவில்லை. பிடிவாதம் பிடித்து அழும்போது அவர்களைக் கொஞ்சி சமாதானப்படுத்தவோ உடல் நலம் கெடும்போது அதை குணப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபடவோ அவன் செய்யவில்லை. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளைப் போல எண்ணி அவ்வப்போது அவள் முத்தம் கொடுக்க மட்டும் வருவாள்.
வரவேற்பறையிலும் க்ளப்பிலும் நாடக அரங்குகளிலும் கம்பீரமாக நடந்து திரியும் இந்த நவநாகரீக 'லேடி' யைப் பார்த்து யாரும் பிரசவம் ஆன பெண் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். தன்னுடைய கலாச்சாரத்தையே அவள் மறந்து விட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். முன்கூட்டியே தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாமல் அவளால் சிரிக்கவோ அழவோ முடியுமா என்று கூட அவன் சந்தேகப்பட ஆரம்பித்தான். அப்படிப்பட்ட மேடம் தலத்தான் இப்போது... அந்த கம்பீரமான பெண்தான்...
ஒரு பீங்கான் டம்ளரில் ஆவி பறக்கும் காப்பியையும், ஒரு பீங்கான் தட்டில் நெய்யப்பத்தையும் எடுத்துக் கொண்டு மிஸஸ் தலத் மெதுவாக நடந்து வந்தாள். முன்பு தன் தாய் நடந்து வருவதைப் போல் அவனுக்கு அப்போது தோன்றியது. கொண்டு வந்த பலகாரத்தை அவனுடைய கைகளில் மிஸஸ் தலத் தந்தாள். காப்பியை ஆற்றியவாறு அவள் சொன்னாள் :
'சுதீர்... உனக்கு அனேகமா இதைப் பிடிக்காது. ருசி இல்லாதது மாதிரி இருக்கலாம். நான் பண்ணியது இது... நைவேத்தியத்துக்காகப் பண்ணிய நெய்யப்பம்... வேலைக்காரி வெளியே போயிருக்கா...'