இரண்டு சிறுமிகள்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by sura
- Hits: 4843
ஈஸ்டரின் ஆரம்ப காலம் அது. எங்கு பார்த்தாலும் கடுமையான குளிர் நிலவி கொண்டிருந்தது. எல்லா இடங்களிலும் பனி போர்த்தியிருந்தது. கிராமத்து தெருக்களில் நீர் ஆறென ஓடிக் கொண்டிருந்தது.
இருவேறு வீடுகளைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சந்து ஒன்றில் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் சந்தித்துக் கொண்டார்கள். அவர்கள் சந்தித்த இடத்தில் அழுக்கு நீர் தோட்டங்கள் வழியே பாய்ந்து வந்து குளமென தேங்கிக் கிடந்தது. இரு சிறுமிகளில் ஒரு சிறுமி மிகவும் சிறியவளா இருந்தாள். அவர்களின் தாய்மார்கள் அவர்கள் இருவரையும் புதிய ஆடைகளால் அலங்கரித்திருந்தார்கள். வயது குறைவாக இருந்த சிறுமி நீல நிறத்தில் உடை அணிந்திருந்தாள். இன்னொரு சிறுமியின் ஆடை மஞ்சள் வண்ணத்தில் இருந்தது. இருவரும் தங்கள் தலையில் சிவப்பு நிறத் துணிகளைக் கட்டியிருந்தார்கள். அவர்கள் தேவாலயத்தில் இருந்து அப்போது தான் திரும்பியிருந்தார்கள். தாங்கள் அணிந்திருந்த புத்தாடைகளை அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முதலில் காட்டிக் கொண்டார்கள். பின்னர் இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார்கள். நீரில் இறங்கி விளையாட வேண்டும் என்ற ஆசை அவர்கள் மனதில் உண்டானது. வயது குறைவான சிறுமி தேங்கியிருந்த நீருக்குள் தன்னுடைய கால்களை எடுத்து வைத்தாள். அவள் தன் காலணிகளுடன் நீருக்குள் இறங்கினாள். வயதில் மூத்த அந்தச் சிறுமி அவளைத் தடுத்து நிறுத்தினாள். ‘‘உள்ளே போகாதே, மலாஷா’’- அவள் சொன்னாள்: ‘‘உன் அம்மா உன்னைத் திட்டப்போறாங்க. நான் என் காலணிகளையும் கழட்டிர்றேன். நீயும் உன் காலணிகளைக் கழட்டிரு...’’ அவர்கள் இருவரும் தங்கள் காலணிகளைக் கழற்றினார்கள். பிறகு அவர்கள் தங்கள் ஆடைகளைச் சற்று மேலே தூக்கியவாறு தேங்கியிருந்த நீருக்கள் இறங்கினார்கள். நீர் மலாஷாவின் முழங்கால் வரை இருந்தது. அவள் சொன்னாள் : ‘‘ரொம்பவும் ஆழமா இருக்கு, அகுல்யா. எனக்கு பயமா இருக்கு !’’ ‘‘நீ வா...’’ - வயதில் மூத்த சிறுமி சொன்னாள் : ‘‘பயப்படாதே. இதுக்குமேல ஆழமா இருக்காது.’’ அவர்கள் இருவரும் அருகருகே நிற்கும்போது, அகுல்யா சொன்னாள் : ‘‘இங்கே பாரு, மலாஷா, தண்ணீர் தெறிக்கும்படி நடக்காதே. மெதுவா பார்த்து நட.’’ அவள் அப்படிச் சொல்லி முடிப்பதற்குள் மலாஷா நீருக்குள் தன் கால்களை ஆழமாக வைத்துவிட்டாள். அதன் விளைவாக நீர் தெறித்து அகுல்யாவின் ஆடைகளை அது முழுமையாக நனைத்தது. ஆடை நனைந்ததுடன் நிற்காமல், அகுல்யாவின் கண்களும் மூக்கும் கூட நீரில் நன்கு நனைந்துவிட்டன. தன்னுடைய ஆடைகள் அழுக்கு நீரில்பட்டு கறைபடிந்தவுடன், பயங்கர கோபத்திற்கு ஆளாகி விட்டாள் அகுல்யா. அவள் மலாஷாவை அடிப்பதறகாக விரட்டிக் கொண்டு ஓடினாள். தேவையில்லாமல் வம்பில் மாட்டிக்கொண்டு விட்டோமே என்று நினைத்த மலாஷா தேங்கியிருந்த குட்டையை விட்டு வெளியேறி, வேகமாக வீட்டை நோக்கி ஓட முயற்சித்தாள். அந்த நேரத்தில் அகுல்யாவின் தாய் அந்தப்பக்கமாக கடந்து போனாள். தன் மகளின் ஆடைகளில் அழுக்கு நீர் பட்டிருப்பதையும் அவளின் மேற்சட்டை அழுக்காக இருப்பதையும் அவள் பார்த்து விட்டாள். அவள் கேட்டாள் : ‘‘ஏய், பெண்ணே... இங்கே என்னடி பண்றே ?’’ ‘‘மலாஷா வேணும்னே என்னை இப்படி அழுக்காக்கிட்டா !’’ - அகுல்யா சொன்னாள். அவ்வளவுதான் - கடுப்பாகிவிட்ட அகுல்யாவின் தாய் மலாஷாவைப் பிடித்து அவளின் கழுத்தின் பின்பகுதியில் ஓங்கி ஒரு அடி கொடுத்தாள். மலாஷா அந்தத் தெரு முழுக்க கேட்கும் வண்ணம் உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள். அவளின் அழுகைச் சத்தத்தைக் கேட்டு அவளுடைய தாய் அங்கே வந்து விட்டாள். ‘‘என் மகளை நீ ஏன் அடிச்சே ?’’ என்று கேட்டு, அகுல்யாவின் தாயைப் பற்றி கன்னாபின்னாவென்று திட்ட ஆரம்பித்து விட்டாள். வார்த்தைகள் பலமாக முற்றின. அது நேரம் செல்லச் செல்ல அவர்களுக்கிடையே பெரிய சண்டையாக உருவெடுத்தது. சிறுமிகளின் தந்தைமார்கள் வெளியே வந்தார்கள். அதற்குள் அங்கு ஒரு கூட்டமே கூடிவிட்டது. கூடியிருந்த ஒவ்வொருவரும் உரத்த குரலில் கத்தினார்கள் தவிர, யாரும் காதுகொடுத்து எதையும் கேட்பதாக இல்லை. அவர்கள் தங்கள் இஷ்டப்படி சண்டை போட்டார்கள். இறுதியில் ஒவ்வொருவரும் கீழே கோபத்துடன் தள்ளி விட்டார்கள். கடைசியில் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். அப்போது அகுல்யாவின் வயதான பாட்டி வேகமாக வந்து தலையிட்டு, அங்கு அமைதியான சூழ்நிலையை உண்டாக்க முயற்சித்தாள். ‘‘ஏன் எல்லாரும் இப்படி நடக்கறீங்க ? இப்படி நடந்துக்குறது சரியா ? அதுவும் இப்படிப்பட்ட ஒரு நல்ல நாள்ல... நல்லா மகிழ்ச்சியோட இருக்க வேண்டிய நாள்ல இந்த மாதிரியா மோசமா நடந்துக்குவாங்க.’’ அந்த வயதான கிழவி சொன்னதை அங்கிருந்த யாரும் பொருட்படுத்தவேயில்லை. அதற்கு மாறாக அவளை அவர்கள் கீழே தள்ளி விட்டார்கள். அவர்களைச் சிறிதுகூட அமைதிப்படுத்த அந்தக் கிழவியால் முடியவில்லை. அகுல்யாவுக்கும் மலாஷாவுக்கும் கூட இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. பெண்கள் ஒருவரையொருவர் வாய்க்கு வந்தபடி திட்டி சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, அகுல்யா தன்னுடைய ஆடைகளில் இருந்த சேற்றைக் கையால் வழித்தபடி மீண்டும் நீர் தேங்கியிருந்த குட்டையை நோக்கி நடந்தாள். அவள் அருகிலிருந்த ஒரு கல்லை எடுத்து பூமியைத் தோண்ட ஆரம்பித்தாள். ஒரு சிறு வாய்க்கால் தோண்டி அதன் வழியே முயற்சி செய்தாள். இப்போது மலாஷாவும் அவளுடன் சேர்ந்து கொண்டாள். அவள் ஒரு மரத்துண்டால் வாய்க்கால் தோண்ட உதவினாள். ஆண்கள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, சிறுமிகள் தோண்டிய வாய்க்கால் வழியே நீர் பாய்ந்தோடி தெருவுக்குள் நுழைந்து வயதான கிழவிகள் ஆண்களைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. சிறுமிகள் அந்த நீர் போக்கைத் தொடர்ந்து ஓடினார்கள். ஒரு சிறுமி நீர் போக்கின் அந்தப்பக்கமும் இன்னொரு சிறுமி நீர் போக்கின் இந்தப் பக்கமுமாக ஓடினார்கள். ‘‘பிடி மலாஷா... பிடி...’’ அகுல்யா கத்தினாள். மலாஷா சிரித்துக் கொண்டிருந்ததால் அவளால் பேசமுடியவில்லை. மிகவும் உற்சாகத்திலிருந்த அந்தச் சிறுமிகள் நீரில் மிதந்து போய்க் கொண்டிருந்த மரத்துண்டைப் பார்த்தவாறு ஆண்கள் கூடியிருந்த இடத்தை நோக்கி தங்களை மறந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த வயதான கிழவிகள் அவர்களைப் பார்த்தவாறு அங்கிருந்த ஆண்களிடம் கூறினார்கள். ‘‘உங்களுக்கு வெட்கமா இல்லையா ? இந்தச் சிறுமிகளுக்காக நீங்க சண்டை போடலாமா ? அவங்க ரெண்டு பேரும் எல்லா விஷயங்களையும் மறந்துட்டு எப்படி சந்தோஷமா விளையாடிக்கிட்டு இருக்காங்க பார்த்தீங்களா ------? மகிழ்ச்சியான இரண்டு இனிய இதயங்கள் ! எந்த விதத்துல பார்த்தாலும் இந்தச் சிறுமிகள் ரெண்டு பேரும் உங்க எல்லாரையும்விட அறிவாளிகள்ன்னுதான் சொல்லணும்.’’ அங்கு கூடியிருந்த ஆண்கள் அந்தச் சிறுமிகளைப் பார்த்தார்கள். அவர்களுக்கு அவமானமாக இருந்தது. தங்கள் செயலுக்கு வெட்கப்பட்டபடி அவர்கள் தத்தம் வீடுநோக்கி நடந்தார்கள். ‘‘குழந்தைகளைப் போல நீ மாறாமல் இருக்கும் காலம்வரை உன்னால் சொர்க்கத்தின் வாசலுக்குள் நுழையவே முடியாது.’’