அம்மாளுக்குட்டியின் கணவன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5086
நான் சொந்த ஊருக்கு வந்த மறுநாள் அம்மாளுக்குட்டி என்னைப் பார்ப்பதற்காக வந்திருந்தாள். அவளுடைய உறுப்புகளுக்கு பாதிப்பு உண்டாகி இருப்பதை ஒரே பார்வையில் நான் தெரிந்து கொண்டேன். இருண்ட நிறத்திற்கு ஒரு அசாதாரண வெளிறிப் போன தன்மை உண்டாகியிருந்தது. தங்க நகைகள் எதையும் அவள் அணிந்திருக்கவில்லை. கணவன் அவளை கைகழுவி விட்டிருப்பான் என்று நான் நினைத்தேன்.
“உன் கணவன் எங்கே?'' நான் அவளிடம் கேட்டேன்.
“எனக்குத் தெரியாது.'' அவள் சொன்னாள்.
“உனக்கு உன்னுடைய கணவன் எங்கே இருக்கிறான் என்று தெரியாதா?'' நான் கேட்டேன்.
அவளுடைய அறிவில்லாத தன்மை என்னை கோபம் கொள்ளச் செய்தது.
“என்னை தேவையில்லை என்று...'' அம்மாளுக்குட்டி முணுமுணுத்தாள்.
“போன வருடம்தானே நீ அந்த ஆளை திருமணம் செய்து கொண்டாய்? உனக்கு தாலிச் சங்கிலி வாங்கி அனுப்பி வைத்ததுநானல்லவா? கடந்த சிங்க மாதத்தில்தான் உன் திருமணம் நடந்தது. இவ்வளவு சீக்கிரம் அது வேண்டாம் என்று ஆகிவிட்டதா?'' நான் கேட்டேன்.
அம்மாளுக்குட்டி புன்னகைத்தாள்.
“துலாம் மாதம் சங்கிலியைப் பணயம் வைத்தார். வங்கியில்தான். முந்நூறு ரூபாய் வட்டி கட்ட வேண்டும். தனு மாதம் என் கம்மலையும் வாங்கிக் கொண்டு போனார். கம்மலை விற்றுவிட்டார். மகர மாதம் என்னுடைய மோதிரத்தையும் வாங்கிக் கொண்டு போனார். அதற்குப் பிறகு ஆளையே பார்க்க முடியவில்லை.'' அவள் சொன்னாள்.
“உன்னை உதறிவிட்டுப் போய்விட்டான் என்பதை நீ எப்படித் தெரிந்து கொண்டாய்?'' நான் கேட்டேன்.
“மீன மாதம் லட்சுமியம்மா குருவாயூருக்குப் போனப்போ பார்த்திருக்காங்க. தாடியும் முடியும் வளர்த்துக் கொண்டு ஒரு துறவியைப்போல இருந்திருக்கிறார். அம்மாளுக்குட்டியைப் பார்க்க வரவில்லையான்னு லட்சுமியம்மா கேட்டிருக்காங்க. அப்போ "எனக்கு இனிமேல் திருமண வாழ்க்கை வேண்டாம். நான் கடவுளுக்குச் சேவை செய்து கொண்டு இங்கேயே இருக்கப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.'' அம்மாளுக்குட்டி மூக்கைச் சிந்திக் கொண்டே சொன்னாள்.
“சரியான போக்கிரி.'' நான் சொன்னேன்.
“போக்கிரி இல்லை... பிடிவாதமானவர்... என்னை அடிச்சது இல்லை. உண்மையைச் சொல்லணும்ல! என்னை அடிச்சதே இல்லை. துறவியாகணும்னு போயிட்டார்ல! நான் என்ன செய்றது? குருவாயூரப்பன் செய்த காரியம்- நான் என்ன செய்றது?'' அம்மாளுக்குட்டி தேம்பினாள்.
“அழாதே. உன் சங்கிலி போயிடுச்சா?'' நான் கேட்டேன்.
“என் சங்கிலி! அது இப்போ எங்கே இருக்கு? எனக்குத் தெரியாது. அது போயிடுச்சேன்ற கவலை எனக்கு இல்லை. எனக்குத் தேவை அன்பு. அது கிடைக்கணும்னு விதியில்லை. ஒரு குழந்தை இருந்திருந்தால், அதைக் குளிப்பாட்டி பால் கொடுத்துக் கொண்டிருப்பேன். என்கூட படுக்குறதுக்கும் அப்போ குழந்தை இருக்கும். இப்போ சாயங்காலம் ஆயிட்டா, எனக்கு பயம் வந்திடுது. சில நேரங்களில் மாஸ்டரின் மடத்தில் இருக்கும் பாம்புப் புற்றுக்கு அருகில் உட்கார்ந்து ஊவா ஊவான்னு அழுது கொண்டிருப்பேன். எனக்குத் தூக்கமே வராது.'' அம்மாளுக்குட்டி சொன்னாள்.
“நீ இனிமேலும் திருமணம் செய்து கொள்ளலாம்.'' நான்சொன்னேன்.
“இனிமேல் எதற்கு திருமணம்? என் சங்கிலி போயிடுச்சு. என் கம்மல் போயிடுச்சு. மோதிரம் போயிடுச்சு. இனிமேல் எதைப் பார்த்து ஒரு ஆண் என்னைத் திருமணம் செய்ய வரப் போகிறான்?''
அம்மாளுக்குட்டி கசப்பு நிறைந்த சிரிப்புகளை உதிர்த்துக் கொண்டிருந்தாள்.
“இப்போ நீ வீட்டு வேலைக்குப் போகிறாயா?'' நான் கேட்டேன்.
“நான் போறது இல்லை. என்னால முடியல. இனி ஒரு ஆண் என் உடம்பைத் தொடுறது என்ற விஷயத்தை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல. அந்த அளவுக்கு வெறுப்பாயிடுச்சு.'' அம்மாளுக்குட்டி சொன்னாள்.
“ஒரு ஆணா? வீட்டு வேலைக்குப் போகிறாயா என்றுதானே நான் கேட்டேன். நீ துணி சலவை செய்யலாம். சாதம் சமைக்கலாம். தரையைப் பெருக்கி சுத்தம் செய்யலாம். உனக்கு நல்ல உடல் நலம் இருக்கு.'' நான் சொன்னேன்.
“ஆண்கள் இல்லாத வீடு இந்த பகுதியில் இல்லை. இந்த பிறவியில் என்னால் ஒரு ஆணைத் தொட முடியாது. பட்டினி கிடந்து செத்தாலும் பரவாயில்லை. இனி ஆண் ஒருத்தனை என்னால தொட முடியாது.'' அம்மாளுக்குட்டி சொன்னாள்.
அதற்குப் பிறகு அவள் எதுவும் கூறாமல் மேற்குப் பக்கம் இருந்த நிலத்தை நோக்கி நடந்தாள்.
காற்றில் மாம்பழம் விழக்கூடிய காலமாக இருந்தது. அவள் மாம்பழத்தைப் பொறுக்கிக் கொண்டிருக்கலாம் என்று நான் நினைத் தேன்.
“அம்மாளுக்குட்டியை இங்கே வேலைக்கு வைத்திருக்கக் கூடாதா?'' நான் என் தாயிடம் கேட்டேன்.
“ஆய்... ஆய்... அவள் ஒரு மோசமானவள். கெட்ட நடத்தைகள் கொண்டவள். எல்லாரும் சொல்றாங்க.''
“அம்மா, எல்லாரும் சொல்றதை நீங்களும் நம்பிட்டீங்க. அப்படித் தானே?'' நான் கேட்டேன்.
“அவளுடைய கெட்ட நடவடிக்கைகள் காரணமா அந்த திருமணம் செய்தவன் துறவியா ஆயிட்டான். அந்த அளவுக்கு அவனுக்கு வெறுப்பாயிடுச்சு. அன்னை சொன்னாள்.''
அம்மாளுக்குட்டி இளம் மஞ்சள் நிறத்தில் இருந்த ஒரு மாம்பழத்தை எனக்குக் கொண்டு வந்து தந்தாள். அவளுடைய புன்சிரிப்பின் கள்ளங்கபடமற்ற தன்மை என்னை அமைதியற்றவளாக ஆக்கியது.