க்ரேன் ஷாட்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7000
கீழே அவளைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்த கூட்டத்திற்கு நடுவிலிருந்த வெற்றிடத்தில் நின்றிருந்த அந்த சுந்தரியின் பிரகாசமான கண்கள் எனக்கு நேராக உயர்ந்தன.
‘‘ஆக்ஷன்!’’ - நான் சொன்னேன்.
சுந்தரி காமவயப்பட்ட புறாவைப் போல நடனமாடினாள். அவளின் அற்புதங்கள் கலந்த மார்பகங்கள் க்ரேனில் கீழே இறங்கிக் கொண்டிருந்த என்னுடைய கேமரா கண்ணுக்கு நேராக வியர்வை கலந்த பவுடருடன் எம்பி எம்பி குதித்துக் கொண்டிருந்தன.
‘ஓ...’ - நான் சொன்னேன்: ‘ஓ.... ஓ...’
அவற்றிற்கு நேராக ஒரு இரும்பு பட்டாம்பூச்சியைப் போல பறந்து தாழ்ந்தவாறு நான் மெதுவான குரலில் சொன்னேன்: ‘ஓ சுந்தரியே, நான் உன்னைக் காதலிக்கிறேன்! விரும்புகிறேன்!’
என் சுந்தரி! வெண்ணெய்யைப் போல் அவள் என்னை மூடுகிறாள். பஞ்சைப் போல அவள் என்னைக் கிளுகிளுப்பூட்டுகிறாள். குளிர்ச்சியும் கனவுகளும் நிறைந்த பெண் அவள். எனக்கு சுந்தரியைத் தவிர வேறு யாருடன் காதல் இருக்கிறது? என்னுடைய கேமராவால் வெளிச்சத்தில் நான் அவளைப் படம் பிடிக்கிறேன். என் கைகளால் இருட்டில் அவளை நான் வாரி தூக்குகிறேன்... ஒ... என் சுந்தரி!
எனக்கு மேலே மின்னிக் கொண்டிருக்கும் வானத்தில் இடி, மின்னல்கள் ஒளிந்து கொண்டிருக்கும் கார்மேகங்கள் திரண்டு நிற்கின்றன. அவற்றை தலையை உயர்த்திப் பார்த்த நான் அற்புதமான ஒரு வார்த்தையைச் சொன்னேன். போடா! இந்தப் பகலின் சொந்தக்காரன் நான்தான். உன்னுடைய கறுப்பு முகத்துடனும் வெளிறிப் போன மின்னல்களுடனும் மேற்கு கடலில் போய் குதி. ஃப! என்னுடைய கலைக்கு உன்னுடைய கறுப்பு வேண்டாம். நான் வெளிச்சத்தின் மகன். லூஸிஃபர்! ஹா! ஹா! ஹா!
இப்போது சந்தரியின் துள்ளி குதித்துக் கொண்டிருக்கும் தொப்புள் குழியில் இருக்கிறது என்னுடைய கேமரா கண்கள். கேமரா மேன்! கேமராமேன்1 பறந்து கீழே இறங்கும்போது நான் முணுமுணுத்தேன் - ‘‘அந்த இடையின் அற்புதத்தை முழுமையாக நீ கேமராவால் முத்தம் கொடு...’’
ஓ!
இரக்கமற்ற கரங்களால் வ்யூ ஃபைன்டரில் கேமராமேனின் கண்களை நான் தள்ளிவிட்டேன். என்னுடைய ஆர்வம் பொங்கும் இடது கண்ணை வ்யூ ஃபைன்டரில் ஒட்டினேன். ஹாய்!
சபாஷ்!
ஆகாயத்திலிருந்து வெயிலில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு அற்புத இயந்திரத்துடன் கீழே இறங்கும் ஒரு வேற்று கிரக உயிரினத்தைப் போல நான் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டே கீழே இறங்கினேன். ஹா, சுந்தரியின் அருகில்! என்னுடைய கையிலிருந்த திரைக்தை தாள்கள் காற்றில் தலையை உயர்த்திக் கொண்டு சுந்தரியை எட்டிப் பார்த்தன. நில்லுங்கள். நில்லுங்கள். இந்த சுந்தரியை வர்ணிக்க உங்களால் முடியாது. உங்களை கிழித்தெறிந்து விட்டு நானொரு புதிய அலையடித்து உயரும் திரைக்கதை எழுதுவேன்... ஃபா!
ஓ! சுந்தரி!
க்ரேன் தரைக்கு வந்தது. சிவப்பு சரளைக் கற்கள் சத்தம் உண்டாக்கின.
‘கட்!’ - நான் சொன்னேன். போதும். போதும். இதுவரை செய்ததெல்லாம் வீண். என் பேனாவில் மை ஊற்றச் சொல்லு... தூய வெள்ளைத் தாள்களைக் கொண்டு வந்து என்னுடைய மேஜை மீது அடுக்கக் கூறு. நான் காமமும் குரோதமும் கவிதையும் கொண்ட இதயத்தில் இடம் பிடிக்கிற ஒரு கதையை சுந்தரிக்காக உருவாக்குகிறேன்.
கட்! கட்!
ஆட்களுக்கு மத்தியில் என்னுடைய கண்கள் சுந்தரியைத் தேடி ஓடின. அதோ காற்சலங்கைகள் சத்தம் உண்டாக்க சுந்தரி டச் அப் செய்ய போய்க் கொண்டிருக்கிறாள். சலங்கைகளுக்கு கீழேயிருக்கும் அவளின் பாதங்களில் வரையப்பட்டிருக்கும் மருதாணி கோடுகள் என்னைப் பார்த்தன. தைரியமாக அவை புன்னகை செய்கின்றன! ஓ! நான் சொன்னேன்: ‘நன்றாக புன்னகை செய். இன்று இரவு என்னுடைய உதடுகள் உங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கும். இரவின் உள்ளறைகளில் உங்களைத் தள்ளி விடுகிறேன். அப்போது...?
நான் என்னுடைய இருக்கையைத் தேடினேன்.
எங்கே என்னுடைய நாற்காலி? எங்கே இந்த நோய்வாய்ப்பட்ட கலைஞனின் இருக்கை? யார் என்னுடைய பார்வையிலிருந்து அதை மறைத்தது! எங்கே இந்த காதலனின் ஓய்வெடுக்கும் சிம்மாசனம்? நான் மக்கள் கூட்டத்திற்குள் ஆவேசத்துடன் கால் வைத்தேன் மக்கள் கூட்டம் எனக்காக பிரிந்தது. நீல குடைக்குக் கீழே இருக்கும் வெள்ளை நிற நாற்காலிக்கு நேராக நான் நடந்தேன்.
ஹா! என்னுடைய பிரியத்திற்குரிய நாற்காலி!
நாற்காலியில் சாய்ந்து, கால்களை நீட்டிக் கொண்டு, கண்களை மூடியவாறு, இரண்டு கைப் பாதங்களையும் முகத்தில் வைத்துக் கொண்டு நான் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டேன். நீலக்குடையின் நிழல் என்னைச் சுற்றிலும் ஒரு இருண்ட வட்டத்தை உண்டாக்கியது. அதற்குள் இருந்தவாறு நான் சூரியனிடம் சொன்னேன்: ‘ஹே சூரியா, உனக்கு நன்றி. நீ இல்லாமலிருந்தால் இந்த நிழல் இருக்கப் போவதில்லையே! நானில்லாமலிருந்தால் உனக்கு நன்றி சொல்ல யார் இருக்கிறார்கள்? உண்மையைச் சொல். சுந்தரி உனக்கும் காதலிதானே?’’
என்னுடைய உதவியாளர்களின் கூட்டம் என்னைச் சுற்றிலும் அமைதி பூண்டு நின்றிருக்கிறது.
என்னுடைய மூடப்பட்ட கண்களுக்கு முன்னால் வெளிச்சம் பரவியிருக்கும் இருட்டினூடே நான் சுந்தரி டச் ப் செய்து கொண்டிருக்கும் இடத்தை நோக்கி நடந்தேன். ஒ, சுந்தரி! சுந்தரி இப்போது உடை மாற்றிக் கொண்டிருக்கிறாள். மஞ்சள், பொன் நிற ஆடைகளை மாற்றி அவள் வெள்ளை, சிவப்பு நிற ஆடைகளை அணிகிறாள்.
ஓ என் சுந்தரி! உன்னை நான் வணங்குகிறேன்.
‘ஷாட் ரெடி, சார்’ - உதவியாளர் மெதுவான குரலில் சொன்னான்.
நான் கண்களைத் திறக்கவில்லை.
நான் சுந்தரியின் கன்னங்களையும், கழுத்தையும், நாடியையும், மூக்கின் நுனியையும், உதடுகளின் ஓரத்தையும், நெற்றியையும் காது மடலையும் டச் அப் செய்கிறேன். அவளின் கண்களிலிருந்து என்னுடைய நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளில் கனவுகள் கழன்று விழுகின்றன. அவை என்னுடைய விரல்களை நனைக்கின்றன. ஓ!
‘சார்’ - உதவியாளர் மீண்டும் மெதுவான குரலில் சொன்னார்.
‘‘ஷாட்... விலகி நில்லுங்கள்’’ - நான் கட்டளையிட்டேன். என்னுடைய உணர்ச்சிபூர்வமான காதல் பார்வைக்கு இடைஞ்சலாக இருப்பது யார்? நான் கண்களை இலேசாக திறந்து என்னுடைய உதவியாளர்களை நெருப்பு பறக்கும் ஒரு பார்வை பார்த்தேன். அவ்வளவுதான் - அவர்கள் வெயிலில் பனி மறைவதைப் போல மறைந்து போனார்கள்.