க்ரேன் ஷாட் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7002
எனக்கு தலையைச் சுற்றுவதைப் போல் இருந்தது. வெறும் தோணல் மட்டுமே. ஃபா! சுற்றுவதைப் போல் நடிக்கிற இந்த ஒரு தலை அல்ல எனக்கு இருப்பது. நான்தான் நண்பர்களே தசாநனன். இதற்கு மேலும் எனக்கு ஒன்பது அல்ல. தொன்னூற்றொன்பது முகங்கள் இருக்கின்றன. போடா! நான் ஒரு அழகான ஒரு கெட்ட வார்த்தையை ஆகாயத்தில் வீசியெறிந்தேன். வெள்ளைத் தூவாலையால் முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்து, கண்களை மூடி, திறந்து நான் என் பார்வையை காதல் மேலோங்க மின்னல் கொடி மீது படரவிட்டேன்.
ஓ, மின்னல்கொடி!
இருண்ட கனவுகளை அழகான விரல்களையும் வியர்வை அரும்பிய உணர்ச்சி நிறைந்த இடங்களையும் அவளின் உடம்பை நான் வெறித்து பார்த்தேன். என்னுடைய முரட்டுத்தனமான இதயம் ஆவேசத்துடன் பறந்து உயர்ந்து ஆகாயத்திலிருந்தவாறு ஆரவாரம் செய்தது. என் இதயக் காதல் படைக் குதிரையைப் போல காற்றில் வேகமாக பாய்ந்து கொண்டிருந்தது.
ஆனால்.. என் சுந்தரி! நான் தலையை சுந்தரி இருந்த பக்கம் மீண்டும் திருப்பினேன். ஓ, ஓ... சுந்தரியின் கண்கள் எனக்கு நேராக கறுத்த வெயிலினூடே பார்த்தன.
ஹோ!
நான் மீண்டும் என்னுடைய நான்கு விரல்களையும் குறுக்காக வைத்து அப்போது உண்டான சதுரத்தை உயர தூக்கி என் கண்களை அதற்குப் பின்னால் வைத்தேன். ஹா! ஹா! ஹா!... என்னவொரு அழகான லாங் ஷாட்! அந்த விளக்குக் கம்பம் சற்று இடது பக்கம் நகர்ந்து இருக்க வேண்டும்... அந்த மஞ்சள் தூணின் நிழல் முன்னோக்கி விழ வேண்டும்... அந்த மாட்டு வண்டிச் சக்கரத்தின் நிறத்தை யார் நீலத்தாக்கியது? எனக்கு தேவை பச்சை நிறம். பச்சை! தெரியுதா? கன்னிவனங்களின் காமம் புரண்டோடிய பச்சை. என்றும் இளமையாக இருக்கும் நாயகிகளின் பசுமைப் பச்சை.
இதோ என்னுடைய விரல் சட்டத்தின் வாசலில் சுந்தரியின் கண்கள் வந்து படுகின்றன. பிச்சையெடுக்கும் ஒருவன் என்னைத் தொட்டு என்னவோ கெஞ்சினான். நான் அந்தக் கையைத் தள்ளிவிட்டு, என் கறுப்பு கண்ணாடியை மீண்டும் அணிந்தேன். மக்கள் கூட்டத்திற்குள் நான் இரண்டடி வைத்தேன். அந்தக் கூட்டம் என்னை ஆர்வத்துடன் வரவேற்றது. இப்போது சுந்தரி மின்னல்கொடியைப் பார்க்கிறாள். மின்னல்கொடி இதோ சுந்தரியைப் பார்க்கிறாள். அவர்களுக்கிடையில் எதுவுமில்லை. பரவாயில்லை! பரவாயில்லை! நான் கண்ணாடித் துண்டுக்குப் பின்னாலிருந்து சுந்தரியை உற்று பார்த்தேன். அவளின் பிரகாசமான கண்களிலிருந்து என்னைத் தேடி அலைகள் புறப்படுகின்றனவோ, ஹோ!
பிரச்சினையில்லை. பிரச்சினை இல்லை என்கிறேன். நான் மாரீசன்தான். மனதை அறியம் இயந்திரம் நான். எல்லா ஒருவித கட்டுப்பாட்டில்தான். நான் மக்கள் கூட்டத்திற்குள் மீண்டும் இரண்டடிகள் நுழைந்தேன். என்னுடைய அன்புக்குரிய மக்களின் மூச்சுக்காற்றுகள் என்னைப் பழைய நண்பர்களைப் போல தொடுகின்றன. என்னுடைய கண்ணாடியில் சூரியனின் இருண்ட வட்டம் எனக்கு அசாதாரணமான வாக்குறுதிகளைத் தருகின்றன. மக்களின் பார்வைகள்! என் கால் முதல் தலைவரை படர்கின்றன. பாருங்கள்! பாருங்கள்! இந்தப் பாதையின் திருப்பத்தில் நின்று கொண்டிருக்கும் உங்களின் அன்பிற்குரிய கலைஞனைத் தேற்றுங்கள். கள்ளங்கபடமில்லாதது இந்த கலை இதயம். எனக்கு தைரியம் தாருங்கள். ரசிகர்களே! மனிதப் பறவைகளே, உங்களுக்கு என்னுடைய நன்றியும் அன்பும், ஹா, என்ன சுகம்! எனக்கு இந்த மறைவிடத்திலிருந்து வெளியே வர தோன்றவில்லை. ஆனால், அதோ வானத்தின் விளிம்பில் பெரிய கார்மேகங்களிலிருந்து எனக்கு நேராக மின்னுகின்ற அடையாளங்கள் புறப்படுகின்றன. பிரபஞ்சமே சாட்சி! இதோ நான் வருகிறேன்.
மக்கள் கூட்டத்திலிருந்து நான் பலமாக அடியெடுத்து வைத்து இறங்கி வெயிலுக்குக் கீழே தனி மனிதனாக, கம்பீரமாக நின்றேன். என்னுடைய முதல் உதவியாளர் ஓடி வந்தார். அவரின் கண்கள் நிறைய கேள்விகள்.
நான் சொன்னேன்: ‘கவனமாகக் கேள். இந்தப் புதிய காட்சி, கேமராமேனையும் கூப்பிடு.’
கேமராமேன் ஓடி வந்தான்.
நான் கண்களை மூடிக் கொண்டு சொன்னேன்: ‘இது ஒரு புதிய காட்சி, க்ரேன் ஷாட் சூரியனிலிருந்து மெதுவாக கீழே இறங்கி வரட்டும். அந்த மேகங்களினூடே ஒருமுறை ‘பேன்’ செய். பிறகு அதோ தெரிகிற மலையையும் மரங்களையும் அவற்றுக்கு நடுவில் இருக்கும் தேவாலயத்தையும் கவர் செய்து கீழே இறங்கட்டும். தொடர்ந்து அந்த ஆள் இல்லாத பாதையை ஸும் அவுட் செய். அப்போது, அதோ அந்தப் பாதையோரத்திலிருக்கும் அந்த மரத்தின் நிழலில் கிடக்கும் என்னுடைய காருக்கு நேராக நடந்து போகும் நாங்கள் இருவரும் ஃப்ரேமில் வருவோம். கேமரா எங்களைப் பின் தொடர வேண்டும். நாங்கள் காருக்குள் ஏறி கார் முன்னோக்கி நகரும் போது க்ரேனை மேல் நோக்கி தூக்க வேண்டும். கார் அதோ தூரத்தில் - அந்த வளைவில் திரும்பி காணாமல் போகும்போது இந்த வெயிலும் வானமும் பூமிப்பரப்பும் வானத்தின் விளிம்பும் இருப்பது மாதிரி சிறிது நேரம் ‘ஹோல்ட்’ செய்ய வேண்டும். கட். பிறகு பேக் அப்.’
‘சார்...’ கேமராமேனும் உதவியாளரும் சொன்னார்கள்.
‘ரிஹேர்ஸல் இல்ல...’’ - நான் சொன்னேன்.
‘சார்...’ - அவர்கள் சொன்னார்கள்.
‘ஹோஸானா! ஹோஸானா!’ - நான் மீண்டும் மெதுவான குரலில் சொன்னேன். மின்னல் கொடியின் கைகளை நான் என் கைகளில் ஆர்வத்துடன் எடுத்தேன். சுந்தரியைக் கடைசியாக மேலும் ஒரு முறை பார்த்தேன். சுந்தரி என்னை உற்று பார்க்கிறாளா என்ன? ஆமாம்.... ஆமாம்.... அவளுடைய கண்களில் வருத்தம் இருக்கிறதா? என்னால் பார்க்க முடியவில்லை. எதற்காக வருத்தம் சுந்தரி? என்னுடைய சுந்தரி வருத்தப்படக் கூடாது. நான் விடை பெற்றுக் கொள்கிறேன். அவ்வளவுதான். மீண்டும் பார்ப்போம்.
உயர்ந்து கொண்டிருக்கும் க்ரேனை நோக்கி நான் என் கண்களை உயர்த்தினேன். சூரியன் கேமராவின் பக்கம் பிரகாசமாகத் தெரிந்தது.
‘‘ரெடி...’’ - நான் அழைத்து சொன்னேன்.
‘‘ஆக்ஷன்!’’