மாருதிக்காக சாவியிடம் திட்டு வாங்கினேன்
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3023
அழியாத கோலங்கள் - சுரா (Sura)
மாருதிக்காக சாவியிடம் திட்டு வாங்கினேன்
நான் பள்ளிக் கூடத்தில் படிக்கும் காலத்திலிருந்தே ஓவியர் மாருதியின் படங்கள் என்றால் எனக்கு உயிர். அந்தக் காலத்தில் வெளிவந்த குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், இதயம் பேசுகிறது ஆகிய இதழ்களிலும், பல்வேறு மாத நாவல்களிலும் மாருதி வரையக் கூடிய படங்களை நான் மிகவும் ரசித்து பார்ப்பேன். மற்ற ஓவியர்களின் படங்களையும் எனக்கு பிடிக்குமென்றாலும், அவற்றை விட மாருதி வரைந்த படங்களை எனக்கு அதிகமாக பிடிக்கும் என்பதே உண்மை.
ஜெயராஜ், ராமு, மணியன் செல்வன், லதா, நடனம் ஆகியோரின் கைவண்ணத்தில் உருவாகும் பெண்களை விட எனக்கு மாருதியின் பெண்களைத்தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். இன்னும் சொல்ல போனால், அவர்களை நான் நேசித்தேன். மனதிற்குள் என்னை மறந்து காதலித்தேன்.
'1979'ஆம் ஆண்டில் 'சாவி' வார இதழின் உதவி ஆசிரியராக நான் பணியாற்றினேன். இதழில் பிரசுரமாகும் கதைகளுக்கு நான் எந்த ஓவியரிடம் வேண்டுமானாலும் படங்கள் போடச் சொல்லி வாங்கிக் கொள்ளலாம் என்ற ஒரு சுதந்திரத்தை திரு. சாவி அவர்கள் எனக்கு கொடுத்திருந்தார். அதன்படி நான் பல ஓவியர்களிடமிருந்தும் படங்கள் வரையச் சொல்லி வாங்குவேன். அப்போது தி. ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்' தொடர் கதையாக 'சாவி'யில் வந்து கொண்டிருந்தது. அதற்கு நடனம் படம் வரைவார். தி. நகரிலிருந்த அவரின் வீட்டிற்கு நானே நேரில் சென்று ஒவ்வொரு வாரமும் படங்களை வாங்கிக் கொண்டு வருவேன். சுனில் கவாஸ்கரைப் போல 'ட்ரிம்'மாக எப்போதும் இருக்கும் நடனத்தை நான் ரசித்துக் கொண்டே பார்ப்பேன். ஜானகிராமனின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருப்பார் நடனம்.
அப்போது சுஜாதா ஒரு தொடர் கதையை எழுதிக் கொண்டிருந்தார். 'நில்லுங்கள் ராஜாவே'வாக இருக்குமென்று நினைக்கிறேன். அதற்கு படம்?வேறு யார்?ஜெயராஜ்தான். ஒரு கதைக்கு ராமு படம் போடுவார். சேத்துப்பட்டில் ஈகா திரையரங்கத்திற்கு அருகிலிருந்த அவரின் இல்லத்திற்கு நானே நேரில் சென்று படங்களை வாங்கி வருவேன். சில நேரங்களில் சிறிது நேரம் அமருமாறு கூறிவிட்டு, வேகமாக படங்களை வரைந்து தருவார் ராமு. அவர் வரையும் படங்களில் இருக்கும் ஆணைப் போலவே இருப்பார் ராமு. அவரின் மனைவியும், மகனும் கூட அப்படித்தான். இது எப்படி என்று நான் அப்போது வியந்து நின்றிருக்கிறேன்.
மீதம் மூன்று சிறுகதைகள் இருக்கின்றன என்றால், அவை எல்லாவற்றிற்கும் எனக்கு பிடித்த மாருதியிடமிருந்தே படங்களை வாங்கி சேர்த்து விடுவேன். தொடர்ந்து இதை கவனித்துக் கொண்டிருந்த திரு. சாவி ஒருநாள் என்னிடம் 'நானும் பார்த்துக் கொண்டே வருகிறேன். ஒவ்வொரு இதழிலும் மாருதியிடமிருந்துதான் அதிகமான படங்களை வாங்கி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். காரணம் என்ன?'என்று கேட்டார். 'எனக்கு மாருதியின் படங்களை மிகவும் பிடிக்கும். நான் மாருதியின் ரசிகன்'என்றேன் நான். அதற்கு திரு. சாவி 'உங்களுக்கு ஒரு ஆளைப் பிடிக்கிறது என்றால், அவரிடமே எல்லாவற்றையும் வாங்குவீர்களா?பத்திரிகை என்றால், வெரைட்டி இருக்க வேண்டும். பலதரப்பட்ட கதைகள் இருக்க வேண்டும். அதே மாதிரிதான் கதைகளில் இடம் பெறக் கூடிய படங்களும். பல ஓவியர்களின் கைவண்ணமும் அதில் இருக்க வேண்டும். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்'என்றார். அதற்குப் பிறகு திரு. சாவி கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, அதன்படி நான் செயல்பட்டேன்.
நான்கு வருடங்களுக்கு முன்பு 'உளியின் ஓசை'திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை ஓவியமாக மாருதியை வரையச் சொல்லியிருந்தார் படத்தின் இயக்குநரான இளவேனில். அதை வாங்குவதற்காக ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் மாருதியின் வீட்டிற்கு இளவேனில் சென்றபோது, அவருடன் நானும் சென்றேன். அப்போது மாருதியிடம் பழைய சம்பவத்தை நான் ஞாபகப்படுத்தினேன். அவர் ரசித்து அதை கேட்டார். 'இப்போதும் நான் உங்களின் ரசிகன்தான். , 'என்றேன் நான். அப்போது சாதனைகள் பல புரிந்து, இன்னும் அமைதியின் சின்னமாக இருக்கும் அந்த விந்தை மனிதர் என்னையே சந்தோஷத்துடன் பார்த்தார்.