Lekha Books

A+ A A-

முட்டாள்களின் சொர்க்கம்

muttalkalin sorgam

வள் ஏன் அவனை அப்படி வெறித்துப் பார்க்க வேண்டும்? இதயத்தையே வெளியே பிடுங்கி எடுப்பதைப்போல பார்க்கிறாளே! ஒருவித குழப்பத்துடன் புத்தகத்தை மீண்டும் புரட்டினான் அவன். சிறிது நேரம் கழித்து மைதானத்தின் பக்கம் தன் கண்களை ஓட்டினான். கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. சூரியன் வானத்தில்”சுள்”என்று காய்ந்து கொண்டிருந்தது. லேசான தயக்கத்துடன் அவன் மீண்டும் திரும்பிப் பார்த்தான்.

அவள் அந்த இடத்தை விட்டுப் போகவேயில்லை.

அவனையே பார்த்தவாறு அப்போதும் நின்றிருந்தாள். பாதையின் ஒரு ஓரத்தில்தான் அவள் நின்றிருந்தது. நல்ல சதைப்பிடிப்பான உடம்பு. பார்க்க அழகாகவே இருந்தாள். ரோஸ் வண்ணத்தில் இருந்த புடவைக்குள் வெள்ளை பாடி அணிந்திருந்தாள். பாடி வெள்ளை நிறமா கருப்பா? அவனால் இந்த விஷயத்தில் சரியான முடிவுக்கு வரமுடியவில்லை. முகம் வட்டமாக இருந்தது. நெற்றியின் அகலம் சற்று குறைவானதே. கண்கள் ஏற்கெனவே நன்றாக அழுதவை போலிருந்தன. சிறிய பொன்னாலான மூக்குத்தி ஒரு பக்கத்தில் அழகாக மின்னியது. அவ்வப்போது தலைமுடியை அவிழ்ப்பதும் தூக்கிக் கட்டுவதுமாக இருந்தாள் அவள். அதனால் கையைத் தூக்கும்போது அவள் கை இருக்கும் பகுதியை அவனால் அடிக்கொரு தரம் பார்க்க முடிந்தது. இளமையின் மதர்ப்பு அவளின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டது. அவளின் பெரிய மார்பகங்களும் தடிமனான பின்பகுதியும் அவன் மனதை என்னவோ செய்தன. அதைப் பார்த்த கணத்தில் அவனின் நாடி நரம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்ததுபோல முறுக்கேறி நின்றன.

அவன் மனதில் என்னென்னவோ எண்ணங்கள் உதயமாயின.அவள் ஒரு அழகு தேவதையாக அவனுக்குப் பட்டாள். அவளை அப்படியே வாரி எடுத்து மார்போடு சேர்த்து வைத்து இறுகக் கட்டிப்பிடித்து மூச்சு முட்ட அணைக்க வேண்டும்;அவளின் அதரங்களில் தன் உதடுகளைப் பதித்து முத்தம் தரவேண்டும் என்று அவன் மனம் வேட்கை கொண்டது. யாரென்றே தெரியாத ஒரு ஆண், இதற்குமுன் பார்த்தே இராத ஒரு பெண்ணைப் பற்றி இப்படி எண்ணிப் பார்ப்பது என்பது... தப்பான ஒன்றுதானே இது! அவன் எழுந்து கால்போன போக்கில் நடந்து போனான். திரும்பிப் பார்த்தால்  ஒருவேளை மீண்டும் அந்தப் பெண் அவன் கண்களில் படலாம்- மீண்டும் அந்த ஆசைகள் அவன் மனதின் அடித்தளத்தில் எழுந்து பூதாகார வடிவம் எடுக்கலாம்...!

மறுநாள் அவன் அதே இடத்திற்குப் போனான். அவள் அங்கு இல்லை. போகும் பாதையில் மைதானத்தை அடுத்து இருந்த பெஞ்ச்சுகளில் ஒன்றில் போய் அவன் அமர்ந்தான். அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கக்கூடாது என்று அவன் மனம் முடிவெடுத்திருந்தாலும், அதை எல்லாம்மீறி அவனுடைய கண்கள் அந்தப் பக்கம் போகத்தான் செய்தன.

அவள் அங்கு இல்லை.

அவன் தங்கியிருந்த இடத்திற்கு வந்தான். இனிமேல் அங்கு போகக்கூடாது என்று முடிவெடுத்த அவன் தன் வேலையில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தான். இருந்தாலும், மனதில் ஒரு நிறைவு கிடைக்கவில்லை. அவனுக்கு இதற்கு முன்பு பழக்கமே இல்லாத நகரம். பழக்கமே இல்லாத மொழி. எல்லாமே அவனுக்கு அறிமுகமே இல்லாதவை. அதனாலென்ன? ஆணும் பெண்ணும் இதற்கு முன்பு அவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்திராதவர்களாக இருந்தால்தான் என்ன? அவர்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவது இயற்கையான ஒரு விஷயம்தானே? இந்த உலகத்தில் அவன் வாழ ஆரம்பித்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன! அவன் உடம்புக்குள்ளும் ரத்தமும், உணர்ச்சியும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.

இப்படியே வெறுமனே எந்தவித மாற்றமும் இல்லாமல் இயந்திரகதியாய் எத்தனை ஆண்டுகள்தான் வாழ்ந்து கொண்டிருப்பது? அவன் மனதில் சொல்லப்போனால் ஒருவித எரிச்சலே உண்டானது. இப்படி தனியாகவே வாழ்ந்து கொண்டிருப்பது நல்லதா? இரவு வந்ததும் வெளியே புறப்பட்டு நடந்தான். வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே ஆரவாரமும், மகிழ்ச்சியின் வெளிப்பாடுமாய் இருந்தன. கூக்குரல்களும், பேச்சு சத்தமும், சிரிப்பொலிகளும்... மக்கள் சாலைகளிலும், தெருக்களிலும் நடந்துபோய்க் கொண்டிருந்தனர். வாகனங்கள் ஒலி எழுப்பியவாறு ஏராளமாக ஓடிக் கொண்டிருந்தன. மைதானத்தை அவன் அடைந்தான். மரநிழலில் இருந்த பெஞ்ச்சில் போய் அமர்ந்தான். அவனது சூடாகிப் போயிருந்த உடல்மேல் மென்மையான காற்று பட்டு சுகமான அனுபவத்தைத் தந்தது. காற்று மேனியை வருடியதும், புத்துணர்ச்சி பெற்றதுபோல் உணர்ந்தான் அவன். ஆகாயத்தில் பூக்களென நட்சத்திரங்கள் நிறைந்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஆனால், பாதையைப் பார்த்தான்- யாருமில்லை.

அவள் எங்கே போனாள்?

அதற்குப்பின் ஒவ்வொரு நாளும் அவளை அவன் பார்ப்பான். அவளும் அவனைப் பார்ப்பாள். கண்களாலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டார்கள். அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். ஆணான அவனும் ஏன் பதிலுக்கு அவளை நோக்கி புன்னகை புரியக்கூடாது? ஏன் ஒரு ஆணால் புன்னகைக்க முடியவில்லை? கௌரவம் என்ற போலிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு மனதைக் குறுக்கியவாறு இருப்பதற்குப் பெயர்தான் ஆண்மை என்பதா? அவனாலும் சிரிக்க முடியும். ஆனால், அந்தச் சிரிப்பு அழகானதாக இல்லாமல், பார்க்கச் சகிக்க முடியாதது மாதிரி இருந்துவிட்டால்...? அவன் எழுந்து தான் தங்கியிருக்கும் இடத்திற்குத் திரும்பினான்.

அவனைப்போல திருமணமாகாத அவனது நண்பர்கள் பெண்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். பெண்களைப் பற்றிய உஷ்ணமான சிந்தனை எல்லா இடங்களிலும் வியாபித்து இருக்கத்தான் செய்கின்றன. அவனைப் பார்த்ததும் அவர்கள் பேச்சை வேறு விஷயங்களுக்கு மாற்றினார்கள். எல்லாருமே காம விஷயத்தில் பயங்கரமான தாகத்துடன் இருந்தார்கள். இப்படியே வருடக்கணக்கில் மனதில் காம எண்ணங்களுடன் அவர்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்ததுதான் விந்தையிலும் விந்தை. அவர்களில் யாருக்குமே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, அவளைக் காப்பாற்றும் அளவிற்கு வருமானம் இல்லை என்பதே உண்மை. நகரத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் அவர்களின் செலவுக்கே சரியாக இல்லை. இருந்தாலும், சாலையில் பெண்கள் யாராவது நடந்துபோனால் அவர்களை வெறித்துப் பார்ப்பதை மட்டும் அவர்களால் நிறுத்தவே முடிவதில்லை. ஆரம்பத்தில் அவனைப்போல் அவர்களும் கௌரவம்  பார்க்கத்தான் செய்தார்கள். ஆனால், காலப்போக்கில் அந்த மாதிரியான குணமெல்லாம் அவர்களை விட்டுப் போயே போய்விட்டது. பெண்களைப் பற்றிப் பேசுகிறபோது, அவன் மட்டும் கூறுவான்:

“சே... சே... என்ன பேச்சு பேசுறீங்க? நாம நாகரீகம் உள்ள மனிதர்களாச்சே!”

அவன் சொல்வதை அவர்கள் யாரும் மறுப்பதில்லை. நாகரீகம் இல்லாமல் யாராவது இருக்கிறார்களா என்ன? மேடைப் பேச்சுக்களில், பத்திரிகைகளில்... பகல் நேரங்களில்... எல்லாரும் நாகரீகமாகத் தான் நடந்து கொள்கிறார்கள்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

விரக்தி

விரக்தி

October 18, 2012

பழம்

பழம்

July 25, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel