முட்டாள்களின் சொர்க்கம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7003
நண்பர்களை அவன் எப்போதும் குற்றம் சொல்லுவான். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பெண்களை விரும்புவது மாதிரி அவர்கள் வேறு பலவற்றையும்கூட விரும்புகிறார்கள். ஒருவன் கிளியை விரும்புகிறான். இன்னொருவன் நாய்மீது அன்பு செலுத்துகிறான். வேறொருவனுக்குப் பூனையைப் பிடிக்கிறது. இன்னொருவன் ஒரு அணிலைப் பிடித்து வளர்த்துக் கொண்டிருக்கிறான். கொஞ்சம்கூட நாகரீகமே இல்லாதவர்கள்- அவன் அவர்களைத் திட்டுவான். அவன் முகத்திற்குப் பவுடர் இட்டான். தலைமுடியை நன்றாக வாரினான். ஒரு திருடனைப்போல வெளியே இறங்கி நடந்தான். நாகரீகம் பார்க்கும்- கௌரவம் பார்க்கும் அவன் எங்குதான் போகிறான்? சில நிமிடங்களில் அவன் வழக்கமாக உட்காரும் அந்த பெஞ்ச்சில் ஒரு காலை வைத்தவாறு, சாலைக்கு எதிர்ப்புறத்தில் இருந்த பாதையைத் தாண்டி இருந்த இறக்கத்தைப் பார்த்தான். மரங்களுக்கு மத்தியில் இருந்த ஒரு சிறு குடிசை வாசலில் அந்தப் பெண் நின்றிருந்தாள். அவள் கூந்தலில் காட்டுப் பூக்களைச் சூடியிருந்தாள். மார்பகத்தின் வனப்பை அவள் உள்ளே அணிந்திருந்த வெள்ளை நிற பாடி மேலும் கூட்டியது. மெல்லிய புடவைக்குள் பாவாடை தெரிந்தது. அதற்குள்... ஓ... மனம்தான் எத்தனை வேகமாக இயங்குகிறது! கடைசியில்... அவனை அவள் பார்த்துவிட்டாள்.
வேறு யாராவது அவனை கவனிக்கிறார்களா என்ன?
வாய் வறண்டு போய்விட்டது. உடம்பில் ரத்தமே இல்லாதது போல் உணர்ந்தான் அவன். எதுவுமே செய்யாமல் மவுனமாக பெஞ்ச்சில் போய் உட்கார்ந்தான். மைதானத்திற்குச் சற்று தூரத்தில் காக்கி ட்ரவுசர் அணிந்த கருத்த மனிதர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்த பெஞ்ச்சுகளில் ஆண்களும் பெண்களும் உட்கார்ந்திருந்தனர். பெரும்பாலும் ஆண்கள்தான் இருந்தார்கள். அவனுக்கு ஒருவிதத்தில் பொறாமையும் கவலையும் உண்டானது. வேறு யாரும் அவளைப் பார்த்துவிடக் கூடாது! இப்போது என்ன செய்வது? மனதிற்குள் கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டியதுதான். மற்ற யாரும் அந்த அற்புத ரத்தினத்தைப் பார்த்துவிடக்கூடாது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவன் மீண்டும் எழுந்தான்.
அவள் அதே இடத்தில்தான் நின்றிருந்தாள்.
அவன் இதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. என்ன காரணம்? சாலைகளிலும் தெருக்களிலும் நூற்றுக்கணக்கான பெண்களை அவன் தினமும் பார்க்கத்தானே செய்கிறான்! மற்றவர்களிடமிருந்து இவள் மட்டும் என்ன வித்தியாசம்? பெண் என்ற அந்த உருவத்தை ஆண் என்ற இந்த உருவம் ஏன் இப்படி அடக்கமுடியாத ஆவலுடன் வெறித்துப் பார்க்க வேண்டும்?
அதில் என்னவோ மகத்துவம் இருக்கிறது. அது மட்டும் உண்மை.காதல் என்ற மொட்டு விரிந்து காயாக மாறுவதற்குப் பெயர்தான் காமமா? பெண் இந்த மண் என்று வைத்துக்கொண்டால், வித்து என்று ஆணின் சக்தியைத்தான் சொல்ல வேண்டும். சிந்தனைக்கு ஒரு முடிவே இல்லாமல் அவன் சிந்தித்துக் கொண்டே இருந்தான். விளைவு- அவனே தளர்ந்துபோய்விட்டான். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்- அவன் மனம் முழுக்க அவள் இருந்தான்.
சில நிமிடங்களில் சூரியன் மறைந்து போனான். மின்விளக்குகள் எரிய ஆரம்பித்தன. இப்போதும் அந்தப் பாதையில் அவள் நின்று கொண்டிருந்தாள்.
அவன் உடல் நெருப்பென எரிந்து கொண்டிருந்தது. மற்றவர்கள் எல்லாரும் போய் விட்டிருந்தார்கள். அவன் மட்டும் தனியே இருந்தான்.
அவள் அவனுக்கு அருகில் வந்தாள்.
எழுந்து அவளைக் கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்தால் என்ன? வந்து நின்றவுடன், அவள் மெதுவான குரலில் கேட்டாள்:
“ஒரு அஞ்சு பைசா எனக்குத் தர முடியுமா?”
ஐந்து காசு! ஓ... அவள் தன்னை இவ்வளவு விலை குறைந்தவளாகவே எண்ணிக் கொண்டிருக்கிறாள்!
அவனால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை. அவள் இந்த அளவுக்குத் தாழ்ந்தவள் இல்லை. அவன் பாக்கெட்டிற்குள் கையை விட்டு பர்சை எடுத்தான். அதில் இருந்து ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவள் கையில் தந்தான். பிறகு மெதுவான குரலில் சொன்னான்:
“சில்லரையில்லை...”
அவள் கேட்டாள்:
“நான் மாத்திக்கிட்டு வரட்டா?”
அவன் சொன்னான்:
“வேண்டாம்...”
அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள். அவனுக்கு மிகமிக சமீபத்தில். அவளிடம் பவுடர் வாசனை எதுவும் வரவில்லை. வியர்வை நாற்றம் லேசாக வந்தது. பெண்ணின் உடம்புக்கென்றே இருக்கும் அற்புதமான அந்த மணம் அவளின் உடலில் இருந்து வந்தது. அந்த மணம் நாசித்துவாரத்திற்குள் நுழைந்ததுதான் தாமதம், அவன் மேலும் அதிக உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருந்தான்.
அவளின் கையைத் தன் கையில் எடுத்து வைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தால் என்ன என்று நினைத்தான்.
அவள் சொன்னாள்:
“உங்களைப் பார்த்தப்போ இந்த ஊர் ஆள் இல்லைன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன். எங்களோட மொழியைச் சரியா பேசத் தெரியாதா?”
“தெரியாது...”
“இங்க என்ன வேலை பாக்குறீங்க?”
அவன் தான் பார்க்கும் வேலையைச் சொன்னான். அவளுக்கு அது புரிந்ததோ என்னவோ? அவள் கேட்டாள்:
“உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?”
“இல்ல...”
“எங்கே தங்கி இருக்கீங்க?”
அவன் தெருப் பெயரையும், வீட்டு எண்ணையும் சொன்னான்.
அப்போது அவள் சொன்னாள்:
“அப்ப ரொம்ப பக்கத்துலதான் இருக்கீங்க...”
அவன் கேட்டான்:
“உன்னோட பேர் என்ன?”
அவள் தன் பெயரைச் சொன்னாள். தாழ்ந்த குரலில் சில நிமிடங்கள் தன்னைப் பற்றிய சில தகவல்களை அவள் சொன்னாள். அவளுக்குத் தந்தையும், தாயும் இருக்கிறார்கள். கணவனும் இருக்கிறான். ஆனால், கணவன் வீட்டிற்கு வருவதில்லை. அவன் பக்கத்தில் இருக்கிற நகரத்தில் ஒரு சிறு ஹோட்டலை நடத்திக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அங்கே ஒரு வைப்பாட்டி இருக்கிறாள். அவன் அப்படிச் செய்வது நல்லதா என்ன?
அவன் கேட்டான்:
“உனக்கு குழந்தைகள் இருக்கா?”
அவள் சொன்னாள்:
“எங்களுக்குக் கல்யாணமாகி ஒரு வாரம் ஆகுறதுக்குள்ளேயே நாங்க பிரிஞ்சிட்டோம். இது நடந்து மூணு வருஷமாச்சு...”
அதற்குப் பிறகு ஒரே அமைதி. மூன்று வருடங்கள்! அவளைத் தனக்குப் பக்கத்தில் பெஞ்ச்சில் அமரச் சொன்னால் என்ன என்று அவன் நினைத்தான்.
நாட்கள் கடந்துபோயின. எத்தனையோ நாட்கள்! இப்படித்தான் ஒருநாள் மதிய நேரத்தில் அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு முன்னால் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அவளின் பார்வையிலிருந்து அவன் தன்னை மறைத்துக் கொண்டான். ஆனால், அவனின் நண்பர்கள் அவளைப் பார்த்து விட்டார்கள். “அடடா... என்ன சரக்கு!” அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்: “அவள் இங்கேயே உற்றுப் பார்த்தாளே!”
அவர்கள் பேச்சில் அவன் கலந்து கொள்ளவில்லை. நாகரீகம் கருதி அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தான்.
கிளியின் சொந்தக்காரன் சொன்னான்:
“அவள் இங்கேயிருக்கிற யாரையோ குறிப்பா பாக்குற மாதிரியில்ல தெரிஞ்சது!”