ஒரு மனிதர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6829
உங்களுக்கு என்று சொல்லிக்கொள்கிற மாதிரி வேலை எதுவும் கிடையாது. எங்கெங்கோ தெரியாத தூர இடங்களில் எல்லாம் அலைந்து கொண்டிருக்கிறீர்கள். கையில் காசு எதுவும் இல்லை. அங்கு பேசக் கூடிய மொழிகூட தெரியாது. உங்களுக்கு ஆங்கிலமும் இந்துஸ்தானியும் பேசத் தெரியும். ஆனால், இந்த இரு மொழிகளையும் பேசினால் புரிந்து கொள்ளக்கூடிய நபர்கள் அங்கு மிகமிகக் குறைவு. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் பலவிதப்பட்ட ஆபத்துகளைச் சந்திக்க வேண்டி நேரிடும். பல துணிச்சலான காரியங்களில் கூடப் பயமே இல்லாமல் கால் வைப்பீர்கள்.
அந்த மாதிரியான ஒரு ஆபத்தில் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள். அந்த ஆபத்திலிருந்து இதற்கு முன் அறிமுகமே இல்லாத ஒரு மனிதர் உங்களைக் காப்பாற்றுகிறார்... காலம் எவ்வளவு கடந்து போனாலும் சில தவிர்க்க முடியாத நேரங்களில் நீங்கள் அந்த மனிதரை நினைத்துப் பார்க்கவே செய்வீர்கள்... அந்த மனிதர் எப்படி அந்த உதவியைச் செய்தார்?
நீங்கள்தான் நான் என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் இப்போது கூறப் போவது என்னுடைய சொந்த அனுபவத்தைத்தான். என்னையும் சேர்த்துள்ள மனித வர்க்கத்தைப் பற்றிய ஓரளவு அறிவு எனக்கு உண்டு. என்னைச் சுற்றி உள்ளவர்களில் நல்லவர்கள் இருக்கிறார்கள். பயங்கர மோசமானவர்கள் இருக்கிறார்கள். திருடர்கள் இருக்கிறார்கள். கொடூரமான நோய் உள்ளவர்கள் இருக்கிறார்கள். பைத்தியக்காரர்கள் இருக்கிறார்கள். பொதுவாக நாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த உலகத்தில் தீமைகள் தான் அதிகம். ஆனால், அதை நாம் பல நேரங்களில் மறந்து விடுகிறோம். ஆபத்தில் சிக்கிக்கொள்ள நேர்கிற நேரத்தில்தான் நமக்கு அதைப்பற்றிய ஞாபகமே வரும்.
நான் எப்போதோ நடந்த அந்த சுவாரசியமான சம்பவத்தை இப்போது கூறுகிறேன்.
இங்கே இருந்து சுமார் ஆயிரத்து ஐநூறோ இரண்டாயிரத்து ஐநூறோ மைல் தூரத்தில் மலைச்சிகரங்களின் தாழ்வாரத்தில் அமைந்திருக்கிற ஒரு பெரிய நகரம். அங்கே வசிப்பவர்கள் பழங்காலம் தொட்டே ஈவு, இரக்கம் என்றால் என்ன விலை என்று கேட்பார்கள். கொடூர மனம் படைத்தவர்கள். கொலை, கூட்டுக்கொள்ளை, பிக்பாக்கெட் - அவர்களுக்கு இவை சர்வசாதாரணம். பரம்பரை பரம்பரையாகவே அங்குள்ளவர்கள் பட்டாளக்காரர்கள். எஞ்சி இருப்பவர்கள் தூர இடங்களில் - வேறு மாநிலங்களில் வட்டிக்குப் பணம் தருபவர்களாகவும் மில்கள், அலுவலகங்கள், வங்கிகள் ஆகியவற்றின் காவலாளிகளாகவும் இருக்கிறார்கள்.
பணம் அங்கே பெரிய பிரச்னையாக இருக்கிறது, அதற்காக என்ன செய்யவும் அவர்கள் தயங்க மாட்டார்கள், பணம் வருகிறது என்றால் யாரை வேண்டுமானாலும் கொலை செய்வார்கள்.
நான் அங்கு ஒரு அசுத்தம் நிறைந்த தெருவில், சுத்தமே இல்லாத மிகச் சிறிய ஒரு அறையில் தங்கி என் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். வேலை இருக்கிறது. இரவு ஒன்பதரை மணி முதல் பதினொரு மணி வரை வெளிமாநிலங்களில் இருந்து வந்து வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு ஆங்கிலம் சொல்லித்தர வேண்டும். முகவரி எழுத மட்டும். முகவரி எழுதப் படிப்பது என்பது அங்கு ஒரு பெரிய படிப்பு.
தபால் நிலையங்களில் இந்த முகவரி எழுதக்கூடியவர்களைப் பார்க்கலாம். அவர்களுக்கு ஒரு முகவரி எழுதிக் கொடுக்க கால் ரூபாய் முதல் அரை ரூபாய் வரை கிடைக்கும்.
எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முகவரி எழுதச் சொல்லிக் கொடுக்கும் கல்வியை என் தொழிலாகக் கொண்டேன்.
அந்த நேரங்களில் நான் பகல் நான்கு மணிக்குத்தான் படுக்கையை விட்டே எழுவேன். இதனால் வேறு சில லாபங்களும் இருக்கின்றன.
காலையில் குடிக்க வேண்டிய தேநீர், மதிய உணவு எல்லாமே மிச்சமாகிவிடுகிறதே!
எல்லா நாட்களிலும் போல அன்றும் பகல் நான்கு மணிக்கு நான் உறக்கம் நீங்கி எழுந்தேன். முக்கிய கடன்கள் எல்லாம் முடிந்து உணவும், தேநீரும் தேடி நான் வெளியே புறப்பட்டேன். சூட்டும் கோட்டும் நான் அணிந்திருந்தேன். என் கோட் பையில் ஒரு பர்ஸ் வைத்திருந்தேன். அதில் பதினான்கு ரூபாய் இருந்தது. அதுதான் எனக்கென்று இருக்கும் ஒரே சொத்து.
நான் ஜனக்கூட்டத்துக்கு மத்தியில் கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தேன். உணவு - அதாவது... வயிறு நிறைய சப்பாத்தியும், இறைச்சியும் சாப்பிட்டேன். தேநீர் அருந்தினேன். எல்லாவற்றுக்கும் சேர்த்து பில் முக்கால் ரூபாய் வந்தது. அது அந்தக் காலம்... இதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நான் அந்த காசைக் கொடுப்பதற்காக கோட்பாக்கெட்டில் கையை விட்டேன். அவ்வளவுதான்... உண்மையிலேயே அதிர்ந்து போனேன். வயிற்றுக்குள் போனதெல்லாம் அந்தக் கணத்திலேயே ஜீரணமாகி விட்டது. என்னவென்றால் கோட் பாக்கெட்டில் பர்ஸ் இல்லை.
நான் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வருத்தம் கலந்த குரலில் கூறினேன்:
"என் பர்ஸை யாரோ திருடிட்டாங்க..."
ஏகப்பட்ட கூட்டம் உள்ள ஓட்டல் அது. ஓட்டல்காரன் கூட்டமே அதிர்கிற மாதிரி ஒரு பெரிய சிரிப்பு சிரித்தான். தொடர்ந்து என் கோட்டில்... நெஞ்சுப் பகுதியில் இறுகப் பிடித்து அழுத்தமாக என்னை உலுக்கினான். அவன் சொன்னான்:
"இந்த வேலை எல்லாம் வேற எங்காவது வச்சுக்கோ. பணத்தை ஒழுங்கா வை... இல்லைன்னா உன்னோட கண்ணைத் தோண்டி எடுத்திடுவேன்..."
நான் சுற்றிக் கூடியிருந்த மனிதர்களைப் பார்த்தேன். இரக்கம் தெரிகிற மாதிரி ஒரு முகம்கூட என் கண்ணில் படவில்லை. வெறிபிடித்த செந்நாய்களைப் போல என்னையே வெறித்துப் பார்த்தார்கள்.
கண்களைத் தோண்டி எடுக்கிறேன் என்றால் நிச்சயம் கண்களைத் தோண்டியே எடுத்து விடுவான்.
நான் சொன்னேன்:
"என் கோட் இங்கே இருக்கட்டும். நான் போய் பணம் கொண்டு வர்றேன்."
ஓட்டல்காரன் மீண்டும் சிரித்தான். என்னைக் கோட்டை அவிழ்க்கும்படி கூறினான். நான் கோட்டைக் கழற்றினேன்.
சட்டையைக் கழற்றும்படி சொன்னான். அதையும் செய்தேன்.
காலணிகள் இரண்டையும் நீக்கும்படி சொன்னான். நான் காலணிகளைக் கழற்றினேன்.
கடைசியில் ட்ரவுசரை அவிழ்க்கும்படி கூறினான். நிற்க வைத்து கண்களைத் தோண்டி எடுப்பதுதான் அவனின் திட்டம்.
நான் சொன்னேன்:
"கீழே ஒண்ணும் போடல..."
எல்லோரும் சிரித்தார்கள்.
ஓட்டல்காரன் சொன்னான்:
"எனக்குச் சந்தேகமா இருக்கு. உள்ளே ஏதாவது போட்டிருப்பே...!"
சுற்றிலும் இருந்த சுமார் ஐம்பது பேர்களும் அதைக் கேட்டு பயங்கரமாகச் சிரித்தார்கள் – “கீழே ஏதாவது இருக்கும்!"
என் கைகள் அசையவில்லை. நான் எண்ணிப் பார்த்தேன் - இரண்டு கண்களும் இல்லாத ஒருவன் நிர்வாண கோலத்தில் தெருவில் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் நிற்கிறான்.