
அவன் வாழ்க்கை அதோடு முடிகிறது. முடியட்டும்... நான் இப்படியொரு சம்பவத்தில்... சரி... நடப்பது நடக்கட்டும். உலகத்தைப் படைத்த கடவுளே! என் தெய்வமே...! நான் ஒன்றும் கூறுவதாக இல்லை. நடப்பது நல்லதாக நடக்கட்டும்.
நான் டிரவுசர் பொத்தான்களை ஒவ்வொன்றாக அவிழ்க்க ஆரம்பித்தேன். அப்போது ஒரு கனமான குரல்-
"நிறுத்து... நான் பணம் தர்றேன்."
எல்லோரும் குரல் வந்த பக்கத்தைப் பார்த்தார்கள். சிவப்பு வர்ண தலைப்பாகையும் கறுப்பு கோட்டும் வெள்ளைக் கால் சட்டையும் அணிந்த ஒரு வெளுத்த ஆறடி உயர மனிதர். முறுக்கு மீசையையும் நீலக் கண்களையும் அவர் கொண்டிருந்தார்.
இந்த மாதிரி நீலக் கண்கள் அங்கு சர்வசாதாரணம். அந்த மனிதன் சற்று முன்னால் வந்து ஓட்டல்காரனிடம் கேட்டார்:
"இவன் எவ்வளவு தரணும்?"
அதை அந்த மனிதர் கொடுத்தார். பிறகு என்னிடம் சொன்னார்:
"எல்லாத்தையும் போட்டுக்கோ"
அவிழ்த்த எல்லாவற்றையும் நான் அணிந்தேன்.
"வா..." அந்த மனிதர் என்னை அழைத்தார். நான் அவருடன் சென்றேன். என் நன்றியை அந்த ஆளுக்கு எப்படி தெரிவிப்பது? வார்த்தைகள் கிடைக்காமல் தவித்தேன். நான் சொன்னேன்:
"நீங்க செய்தது மிக மிக பெரிய உதவி. இந்த அளவுக்கு ஒரு நல்ல மனிதரை நான் இதுவரை என் வாழ்க்கையில சந்திச்சதே இல்லை..."
அந்த மனிதர் சிரித்தார்.
"உன் பேர் என்ன?" - அவர் கேட்டார். நான் பெயர், ஊர் எல்லாம் சொன்னேன்.
நான் அவரின் பெயரைக் கேட்டேன். அவர் சொன்னார்: "எனக்குப் பேர் கிடையாது!"
நான் கூறினேன்:
"அப்படின்னா... இரக்கம்ன்றது உங்க பேரா இருக்கும்."
அவர் சிரிக்கவில்லை. நாங்கள் இரண்டு பேரும் சிறிது தூரம் நடந்தோம். நடந்து நடந்து ஒரு பெரிய பாலத்தை அடைந்தோம்.
அந்த ஆள் சுற்றிலும் பார்த்தார். யாரும் இல்லை. அவர் சொன்னார்:
"இங்க பாரு... திரும்பிப்பார்க்காம போகணும். என்னை யாராவது பார்த்தியான்னு கேட்டால், இல்லைன்னு சொல்லணும்."
எனக்கு விஷயம் புரிந்தது.
அந்த ஆள் இரண்டு மூன்று பாக்கெட்டுகளில் இருந்து ஐந்து பர்ஸ்களை வெளியே எடுத்தார். அவற்றில் ஒன்று என் பர்ஸ்!
"இதில் உன்னோட பர்ஸ் எது?"
என் பர்ஸை நான் தொட்டுக் காண்பித்தேன்
"திறந்து பாரு."
நான் திறந்து பார்த்தேன். நான் வைத்த பணம் பத்திரமாக அப்படியே இருந்தது. நான் பர்ஸை எடுத்து பாக்கெட்டில் வைத்தேன்.
அந்த ஆள் என்னிடம் சொன்னார்:
"போ... தெய்வம் உன்னைக் காப்பாத்தும்!"
நானும் சொன்னேன்:
"தெய்வம் உங்களையும் என்னையும் எல்லோரையும் காப்பாத்தும்."
மங்களம்.
சுபம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook