முட்டாள்களின் சொர்க்கம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7003
அணிலை வளர்ப்பவன் சொன்னான்:
“யாராக இருக்கும் அது?”
அவர்கள் பேச்சில் கொஞ்சமும் அவன் கலந்து கொள்ளாமல் இருந்தான். சாயங்காலம் ஆவதற்கு முன்பே அவன் வெளியே புறப்பட்டான். அவன் கால்கள் ஏதோ பழக்கப்பட்ட மாதிரி வழக்கமான இடத்தை நோக்கி நடந்தன. பாக்கெட்டில் பதினைந்து ரூபாய் இருந்தது. அதில் ஒன்பது ரூபாயை சாப்பிடும் இடத்திற்கு பாக்கி என்ற முறையில் அவன் கொடுக்க வேண்டும். அவன் நடந்தான். குளிர் காற்று சுகமாக வீசிக்கொண்டிருந்தது. ஆகாயத்தில் கார்மேகங்கள் சூழ்ந்திருந்தன. பூமி அவனைப்போலவே வறண்டு போய் எவ்வளவோ காலமாகிவிட்டது! மழை வருமா? அது பெய்தால் என்ன, பெய்யாவிட்டால் என்ன? அவன் அந்த பெஞ்ச்சிற்குப் பக்கத்தில் போய் எட்டிப் பார்த்தான். இல்லை... எங்கே போயிருப்பாள்? ஒருவேளை வீட்டிற்குள் இருப்பாளோ?
அவனைக் கண்டதும் அவளின் முகம் மலர்ந்தது. எங்கே அவள் தன் பக்கத்தில் வந்து நின்றுவிடப் போகிறாளோ என்று பயந்த அவன், ஒரு மாதிரி கண்களை மூடி மூடிக் காண்பித்தான். என்ன இருந்தாலும் பகல் நேரமாயிற்றே! யாராவது பார்த்துவிட்டால் அது பிரச்சினை ஆகிவிடுமே! அவன் பேசாமல் அமர்ந்திருந்தான்.
மாலை முடிந்ததும், அவள் வந்தாள்.
“என்ன, கொஞ்ச நாளா உங்களை ஆளையே காணோம்!” அவள் வருத்தம் கலந்த குரலில் கேட்டாள்.
அவன் சொன்னான்:
“ஆமா...”
அவள் சொன்னாள்:
“நான் ஆஸ்பத்திரிக்குப் போற வழியில உங்களோட வீட்டைப் பார்த்தேன். அங்கே இருக்குறவங்கள்லாம் யாரு?”
“என்னோட நண்பர்கள்.”
அவள் லேசாகச் சிரித்தாள்.
அவன் கேட்டான்:
“ஏன் சிரிக்கிறே?”
அவள் சொன்னாள்:
“நாம போகலாம்.”
“எங்கே?”
“என்னோட வீட்டுக்கு...”
அவனுக்கு இப்போது பயம் வந்துவிட்டது. ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துவிட்டால்...? நண்பர்களுக்குத் தெரிந்தால் என்ன ஆவது? இருந்தாலும் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு முன்னால் போகும் குதிரைக்காரனைப் பின்பற்றும் குதிரையைப்போல் அவள் பின்னால் அவன் நடந்தான். இருண்டு போயிருந்த மரங்களுக்கிடையே இருந்த அந்தச் சிறு குடிசை இருளோடு இருளாய்க் கலந்து போயிருந்தது. சொல்லப்போனால் குடிசையே இருளில் சரியாகத் தெரியவில்லை. அங்கு எந்தவித வெளிச்சமும் இல்லை. எந்த சத்தமும் இல்லை. ஒரே அமைதி. அவன் தயங்கியவாறு நின்றான்.
“பயப்படாதீங்க... வாங்க...” அவள் அவன் கையைப் பற்றி அழைத்தாள்.
அவன் பதற்றத்துடன் கேட்டான்:
“பக்கத்துல யாராவது?...”
அவள் தைரியமான குரலில் சொன்னாள்:
“ஓ... இது என்னோட வீடு. நான்ல இதுக்கு வாடகை கொடுத்துக்கிட்டு இருக்கேன்! என்னோட உத்தரவு இல்லாம ஒரு ஆள் கூட இங்கே வரமுடியாது. அப்படி யாராவது வந்தா, கண்ணைத் தோண்டி எடுத்திடுவேன்...”
உண்மையிலேயே அவள் தைரியசாலிதான்.
அவன் அவளுடனே நடந்து சென்று வராந்தாவை அடைந்ததும் தீக்குச்சியை உரசினான். அடுத்த நிமிடம் அதிர்ச்சியடைந்தான். அந்த மங்கலான வெளிச்சத்தில் ஒரு பெண் கூனிக்குறுகிப்போய் வாசலில் உட்கார்ந்திருப்பதை அவன் பார்த்தான்.
“அம்மா...” அவள் சொன்னாள். “இங்கே வாங்க...”
அவ்வளவுதான்- அவனின் உணர்ச்சிகள் அடங்கத் தொடங்கின. அவளின் தாயைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. பேசாமல் திரும்பிப் போய்விடலாமா என்று நினைத்தான்.
அவள் வாசல் கதவைத் திறந்தாள். அப்போது கதவு எழுப்பிய சத்தத்தைக் கேட்டு உலகமே எழுந்து வந்துவிடும் போலிருந்தது.
அவன் உள்ளே வந்தான். பழைய துணிகளின் தாங்க முடியாத நாற்றம்.
அவள் சொன்னாள்:
"ஒரு தீக்குச்சியை உரசுங்க.”
அவன் உரசினான்.
அடுத்த நிமிடம்- ஒரு மண்ணெண்ணெய் விளக்கு அங்கு ஒளி கொடுக்க ஆரம்பித்தது. அவள் இன்னொரு கதவைத் திறந்தாள். அவனின் உணர்ச்சிகள் அத்தனையும் மரணித்துவிட்டன என்றுகூடச் சொல்லலாம். செத்துப்போன பிணத்தைப் போல வெளிறிப்போன இரண்டு குழந்தைகள்! எந்தவித அசைவும் இல்லாமல் வாசல் பக்கத்தில் மல்லாக்கப் படுத்திருக்கின்றனர். வீங்கிப்போன வயிறுகள்! மெலிந்துபோன குச்சியான கை, கால்கள்! அவர்களுக்கு அருகில் ஒரு கிழவன்-
“என்னோட அப்பா...” அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “இவருக்கு கண் தெரியாது!”
அவன் கிசுகிசுப்பான குரலில் கேட்டான்:
“குழந்தைங்க...”
அவள் அதைக் கேட்காதது மாதிரி, தன்னுடைய ஆடைகளை நீக்கினாள். அவற்றை அவிழ்த்துக் கீழே போட்டாள். இப்போது அவள் முழு நிர்வாணமாக அவன் முன் நின்றிருந்தாள். ஒரு பெண்ணை நிர்வாணமாக அவன் வாழ்க்கையில் பார்ப்பது இதுவே முதன்முறை. அவள் விளக்கை அணைத்தாள். அவனுக்கு என்னவோபோல் இருந்தது. மனம் மிகவும் கனத்தது. வாய்விட்டு உரத்த குரலில் அழவேண்டும் போலிருந்தது. அவன் உணர்ச்சிகள் செத்துப்போய்க் கிடந்தன. என்ன வாழ்க்கை இது!
அவள் அவனின் கையை எடுத்து முத்தமிட்டு, அதை அவளின் மார்பகத்தின்மேல் வைத்தாள். கல்லாலான பழமைவாய்ந்த ஒரு பெண் சிலையின் மார்பகத்தைத் தொட்டதைவிட அப்படியொன்றும் எந்தவித வேறுபாட்டையும் அவனால் அப்போது உணரமுடியவில்லை. அவளின் வயிறு ஒட்டிப் போய்க் காணப்பட்டது. என்ன காரணமாக இருக்கும்?
அவன் கேட்டான்:
“சாப்பிடலியா?”
“இல்ல...” அவள் சொன்னாள்: “காலையில கொஞ்சம் அவிச்ச பயறைச் சாப்பிட்டேன்.”
அவன் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து, ஒரு நோட்டை எடுத்தான். பத்து ரூபாயா? ஐந்து ரூபாயா?
“இந்தா... இதை வச்சுக்கோ...” அவன் சொன்னான்: “மற்ற எதையும் நினைக்காதே...”
அவள் அந்த நோட்டை வாங்கி வாசல் கதவைத் திறந்து தாயிடம் என்னவோ சொல்லிக் கொடுத்துவிட்டு, திரும்பி வந்தாள். மழை பலமாகப் பெய்து கொண்டிருந்தது. கடைசியில் எப்படியோ மழை வந்துவிட்டது!
அவன் சொன்னான்:
“நான் போறேன்...”
அவள் அவனை இறுகக் கட்டிப்பிடித்தாள்:
“நான் போக விடமாட்டேன்.”
அவன் சொன்னான்:
“எனக்கு மனசு என்னவோ போலிருக்கு!”
அவள் கேட்டாள்:
“என்ன காரணம்?”
அவன் பதில் பேசவில்லை.
மேலே வேயப்பட்டிருந்த ஓலைகளை ஊடுருவி குளிர்ந்த காற்று வீசியது. சிறிய கற்களை எடுத்து எறிவதைப்போல, மழைத் துளிகள் வீட்டின் கூரைமேல் விழுந்தன. மழை கொஞ்சம் பெரிய மழைதான். மழையால் பூமி குளிர்ந்தது. அவன் உன்மனம் உணர்ச்சியே இல்லாமல் செயலற்று இருந்தது. மூச்சு முட்டுவதுபோல் உணர்ந்தான் அவன். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? பசியால் வாடிப் போயிருக்கும் ஒருவன் முன்னால் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி செத்துக்கிடந்தால் எப்படி இருக்கும்? அப்படி உணர்ந்தான் அவன். அவனால் இனிமேலும் அங்கிருக்க முடியாது. உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும்போல் உணர்ந்தான் அவன். இதயத்தைப் பிளந்து ஓங்கி அழவேண்டும்போல் இருந்தது அவனுக்கு.
அவன் சொன்னான்:
“நான் போறேன்...”
அவள் கேட்டாள்:
“ஏன், என்னைப் பிடிக்கலியா?”
அவன் ஒன்றுமே பேசாமல் மீதியிருந்த ரூபாய் நோட்டையும் எடுத்து அவள் கையில் தந்துவிட்டு வெளியே வந்தான். எதையோ உடலில் சுற்றிவிட்டுக் கொண்ட அவளும் வெளியே வந்தாள். மழையில் நனைந்தவாறு அவளும் அவனுடன் சாலை வரை வந்தாள். அவன் திரும்பிப் பார்க்காமல் மழையில் நனைந்தவாறு நடந்து போனான். லேசாக அவன் அழவும் செய்தான். வினோதமான வாழ்க்கை... அவள்... தாய்... தந்தை... பிணத்தையொத்த குழந்தைகள்... அந்த நாற்றம்... நடந்தவாறே அவன் சிந்தித்தான். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இதற்குத்தான் இதயத்தையே பிடுங்கி எடுப்பது மாதிரி என்னையே அவள் பார்த்தாளா?
மங்களம்
சுபம்.