ரேடியோக்ராம் என்ற தேர்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6748
ஒரு நாள் என் மனைவியை அழைத்து நான் சொன்னேன்: “அடியே, நான் திடீர்னு செத்துப் போறேன்னு வச்சுக்கோ. உனக்கும் உன்னோட சினேகிதிகளுக்கும் ஏதாவது பாட்டு கேட்டா நல்லா இருக்கும்னு மாதிரிபடுது. அப்ப நீ என்ன செய்வே? அதனால நீ இப்ப என்ன பண்றன்னா... இந்த ரேடியோக்ராம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நல்லா தெரிஞ்சிக்கோ. ஒரே நிமிஷத்துல எல்லாத்தையும் நான் சொல்லித் தர்றேன்!''
“எனக்கு எவ்வளவோ வேலை இருக்கு.'' மனைவி சொன்னாள்: “பசுக்களுக்கு தண்ணி வைக்கல. கோழிகளுக்கு இரை போடல. அரிசி அடுப்புல கொதிச்சிக்கிட்டு இருக்கு. பக்கத்துல இருந்து தீயை எரிய வைக்கணும்!''
“அப்படியா, சரி'' என்றுதான் நான் சொல்லியாக வேண்டும். இங்கே பெரும்பாலான நாட்களில் பெண்மணிகளான இளம் பெண்கள் பலரும் வருவார்கள். நான் வீட்டுக்கு வெளியே வெளிவாசலுக்குப் பக்கத்தில் வராந்தாவில் சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கிறேன். நான்தான் இந்த வீட்டுக்கு உரிமையாளர். இருந்தாலும், வரும் பெண் பிள்ளைகள் என்னைப் பார்த்துக் கேட்பார்கள்.
“இங்கே இல்லியா?''
யாரை அவர்கள் கேட்கிறார்கள் என்பதை நான் கேட்கவும் வேண்டுமா? என் மனைவியைத்தான்! நான் சொல்வேன்: “உள்ளே உக்காருங்க, கூப்பிடுறேன்...''
நான் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து உட்காரச் சொல்வேன். ரேடியோக்ரமுக்குப் பக்கத்தில் விருந்தினர்கள் அறையில். இவர்களை நேராக உள்ளே விட முடியாது. புடவைக்குப் பொருத்தமாக இருக்கிற மாதிரியான ப்ளவுஸும், ப்ளவுஸுக்குப் பொருத்தமாக இருக்கிற மாதிரியான வண்ணத்தில் கண்மையும் இட்டு வந்திருப்பார்கள் இவர்கள். என் மனைவி சமையலறையில் மேட்ச் ஆகாத விதத்தில் ஏதாவது அணிந்து நின்றிருப்பாள். அதனால் ஒரு மணியடித்து சில சைகைகள் மூலம் என் மனைவிக்கு விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டும். ஜாக்கிரதை! மேட்ச்! மேட்ச்!
அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் மேட்ச் ஆகிற மாதிரியான ஆடைகளுடன் ஆஜர் ஆவாள் என் மனைவி. சிறிது நேரம் "குசுகுசு’’வென தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்ட பிறகு, பாட்டு ஏதாவது கேட்கலாமா என்பாள் என் மனைவி. அவள் சொன்னதைக் கேட்டதும், நான் உடனே எழுந்து வரவேண்டும். பாட்டு கேட்க வேண்டிய அவசியம் இப்போது என்ன? ஏனென்றால் அவர்கள் எதற்கு இங்கு வந்திருக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் நான் எழுந்து செல்கிறேன். எப்படி? எந்தவித மேட்சும் இல்லாமல் என் ஆடைகள் இருந்தன. ஒரு வேஷ்டி மட்டும் நான் கட்டியிருந்தேன். முட்களுக்கு மத்தியில் நடந்துபோவது மாதிரி, மிகவும் கவனமாக புடவைகள் எதிலும் படாமல் நான் நடந்து சென்று அரைமணி நேரத்தில் ரேடியோக்ராமில் எதையெல்லாம் சரி பண்ணி வைக்க வேண்டுமோ, எல்லாவற்றையும் பொருத்தி முடித்தேன். என் மனைவியையும் சேர்த்து அறையில் மொத்தம் பத்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். எல்லாரும் படு அமைதியுடன் உட்கார்ந்திருந்தனர். நான் ரேடியோக்ராமை "ஆன்’’ செய்தேன். இசை பீறிட்டுக் கிளம்பியது. பெண்கள் பல விஷயங்களையும் பேசத் தொடங்கினார்கள். வானத்தில் இடி இடித்து பயங்கரமான காற்றுடன் சேர்ந்து மழை பெய்வது மாதிரியான தொடர் பேச்சு. எனக்கு அதைப் பார்த்தபோது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. எத்தனையோ நாடுகளில் இருந்து பல முறைகளும் போய் மிகவும் கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து வாங்கிக்கொண்டு வந்த இசைத்தட்டுகள் அவை. கடவுளே! பெண் பிள்ளைகள் நான் முழங்க வைத்த இசையைச் சிறிது கூட கேட்கவில்லை. அரைமணி நேரம் சென்றது. பாட்டு தானாகவே நின்றது. பேச்சுகள் சடன் ஸ்டாப்!
என்னுடைய கவனத்தைத் திருப்புவதற்காக ஒரு பெண்மணி சொன்னாள்:
“முடிஞ்சிடுச்சு!''
நான் எழுந்து சென்று மீண்டும் அரை மணி நேரம் அவர்கள் சர்வதேச விஷயங்கள் பலவற்றையும் சர்ச்சை செய்யட்டுமே என்று அதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்தேன். எல்லாவற்றையும் தயார் பண்ணி ஆரம்பித்துவிட்டு, மீண்டும் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். அரைமணி நேரம் "சலசல’’வென்று பல விஷயங்களையும் பேசிய அந்தப் பெண்மணிகள் என் மனைவியின் தலைமையில் வீட்டுக்குள் சென்றார்கள். பயங்கர சலசலப்புடன் அங்கே தேநீர் தயாரித்தார்கள். சில "கடுமுடு’’ பொரிக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. ஆர்ப்பாட்டமும், பேச்சும், சிரிப்பும்!
நான் எழுந்து சென்று இசைத் தட்டுகளைப் பெட்டியில் போட்டு மூடினேன். ரேடியோக்ராமை "ஆஃப்’’ பண்ணினேன். (முதலிலேயே அதை நிறுத்திவிட்டேன். இருந்தாலும், சொல்கிறபோது, இப்படி வந்துவிட்டது). நான் மீண்டும் ஏற்கெனவே உட்கார்ந்திருந்த இடத்தில் வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் சென்றதும் பெண் பிள்ளைகள் சிறிய சிறிய தட்டுகளில் "கடுமுடு’’வை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். என் மனைவி தேநீரையும் கடுமுடுவையும் எனக்குத் தந்தாள். கடுமுடுவைப் பற்றி என்ன சொல்வேன் என்ற எதிர்பார்ப்புடன் அவள் இருப்பது தெரிகிறது.
அங்கு இருக்கும் ஒரே ஆண் நான்தான். அதனால் மிகவும் கவனமாகப் பார்த்துதான் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். நான் கேட்டேன்.
“இந்த கலைப் படைப்பை உண்டாக்கியது யார்?''
“நான்தான்.'' மரியாதை கலந்த குரலில் குமாரி ருக்மிணிதேவி கூறினாள்: “இது நல்லா இருக்காதுன்னு நினைக்கிறேன். பஷீர்... நீங்க பிரமாதமாக சமையல் பண்ணுவீங்கன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். ஹாங்காங்ல இருந்து வந்த என்னோட அக்கா இதை எனக்குச் சொல்லிக் கொடுத்தா. எப்படி... நல்லா இருக்கா?''
“ரொம்பவும் அருமையா இருக்கு!'' நான் அந்த ஹாங்காங் மணலை தைரியத்துடன் "கருமுரா' என்று சத்தம் கேட்கிற மாதிரி தின்றேன். சில நிமிடங்களில் பெண் பிள்ளைகள் கையில் ஏகப்பட்ட புத்தகங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். என்னைச் சுற்றிலும் இப்போது ஒரே அமைதி. இதுவரை நடந்த சம்பவத்தின் மூலம் நாம் படித்துக்கொண்ட பாடம் என்ன?
பெண் பிள்ளைகள் தங்கள் விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்க இசை என்பது பக்க மேளமாக பயன்படுகிறது. நடக்கட்டும். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ரேடியோ க்ராமை "ஆன்' பண்ணி வைத்துக்கொண்டு, விருப்பப்படி எதை வேண்டுமானாலும் பேசிக்கொண்டிருக்கட்டும். அதற்கு சாட்சியாக நம்மைக் கூப்பிட வேண்டாம் என்பதுதான் நான் சொல்ல வருவது. பால் ராப்ஸன், யஹுதிமனுஹின், பிங்க்ரோஸ்பி, உம்முல் குல்ஸு, படே குலாமலிகான், பங்கஜ் மல்லிக், சைகல், எம்.எஸ். சுப்புலட்சமி, பண்டிட் ரவிசங்கர், பிஸ்மில்லாகான் ஆகியோரை அவமானப்படுத்துவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனஉறுதி நிச்சயமாக எனக்குக் கிடையாது. மன்னிக்க வேண்டும். அதனால் என் மனைவிக்கு இதைப் பற்றி சொல்லிக்கொடுத்து- ஸாரி... நான் ஒன்றுமே கூறவில்லை. கட்டாயப்படுத்தி அவளுக்கு ரேடியோக்ராம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நான் சொல்லித் தந்தேன்.