ஜானு சொன்ன கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 10387
கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு நாள் மத்தியான நேரத்துல நான் சொன்னேன்- என் கதையை எழுதுங்க; படிக்கிறவங்க படிச்சாங்கன்னா அழாம இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு என் கதையில துக்கம் இருக்குன்னு. அப்போ மாதவிக்குட்டி அம்மா சொன்னாங்க, “ஜானு, உன் கதையை நீயே எழுது. அதை பேப்பர் நடத்துறவங்க வாங்கிக்கிட்டாங்கன்னா அதுக்குக் கிடைக்கிற பணத்தை உனக்கு நான் தர்றேன்”னு. எனக்கு கதை எழுதத் தெரியுமா என்ன?
நான் பள்ளிக்கூடத்துக்கே போனது இல்ல. எனக்கு யாரும் இங்கிலீஷும் கற்றுத் தந்தது இல்ல. என் மாமா வேலுட்யாரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? கேள்விப்படாம இருக்க முடியாது. பொன்னானி தாலுக்காவுல மாமாவைத் தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க. தென்னந் தோப்புக்காரர் வேல்வார் வேலுட்யார்னும் அவரைச் சொல்லுவாங்க. மாமா தான் போட்ட கோட்டுக்குள்ளே இருக்குற மாதிரி என்னை வளர்த்தாரு. வாசலை விட்டு வெளியே போறதா இருந்தா மாமாக்கிட்ட அனுமதி வாங்கிட்டுத்தான் போகணும். எங்க வீட்டுப் பொண்ணுங்க சாயங்கால நேரத்துல காத்து வாங்குறதுக்காக போறப்போ ஆம்பளைங்களைப் பார்த்தா பேசவே மாட்டாங்க. வேலை இருந்தா செய்யிறது. இல்லாட்டி ஒரு மூலையில போய் அமைதியா உட்கார்ந்துக்கிட்டு இருக்குறது... குருவாயூர்ல ஏகாதசி பார்க்குறதுக் காக ஒரு முறை போனேன். என்கூட மாமாவும் இருந்தாரு. அந்தச் சமயத்துல என் தம்பி தாமோதரன் சின்னப் பையனா இருந்தான். அவனை இடுப்புல தூக்கி வச்சிக்கிட்டு நடந்து நடந்து நான் வில்லு மாதிரி வளைஞ்சிட்டேன். அப்போ அவன் எந்த அளவுக்கு தடியா இருந்தான் தெரியுமா? இப்போ வயநாட்டுல அவன் வேலையில இருக்கான். இப்போ அவனைப் பார்க்கணுமே! இப்பவும் அவனைப் பற்றி நினைக்கிறப்போ... அம்மா எட்டு பிள்ளைகளைப் பெத்தாங்க. இப்போ நானும் தாமோதரனும் மட்டும்தான் எஞ்சி இருக்கோம். பாக்கி இருந்தவங்க எல்லாரும் போயிட்டாங்க! ம்... என்னைவிட மூத்தது காய்ச்சல் வந்து மூணு நாட்கள் கிடந்துச்சு... ஜுரமும் வாந்தியும்... என்ன செய்றது! கொடுப்பினை இருக்கணுமே! எது நடக்கணும்னு விதிச்சிருக்கோ அதுதான் நடக்கும். என் மாதவிக் குட்டி அம்மா, காசு இருந்தும் பிரயோஜனம் இல்ல... அறிவு இருந்தும் பயன் இல்ல... குருவாயூரப்பன் என்ன தரணும்னு நினைக்கிறாரோ, அதைத்தான் தருவாரு.
ஆ!... கதை! நான் அதை மறந்துட்டேன். என் பேரு தெரியும்ல! ஜானுன்றதுதான் என் பேரு. நான் நாயர் ஜாதியைச் சேர்ந்தவ. பள்ளிக்கூடம்... (சரி... சரி... நான் சொல்றேன். ஆரம்பத்துல இருந்து சொல்லாம எப்படி மாதவிக்குட்டி அம்மா, ஒரு கதை சொல்ல முடியும்?)
நேத்து வெளுத்தேடத்து நாணி என்கிட்ட கேட்டா, “ஜானு, நீ குருவாயூருக்கு வர்றியா”ன்னு. வர்ற வெள்ளிக்கிழமை ஏகாதசி ஆச்சே! கடவுள்கிட்ட வேண்டிக்க போக வேண்டாமா? அவளும் நெய்த்து வேலை செய்யிற பாருவும் எல்லா வருடமும் சாமி கும்பிடப் போவாங்க. “கூட்டத்துல சிக்கித் திணறிப் போறதுக்கு தயார் இல்லை”ன்னு நான் சொன்னேன். அதுக்கு நாணி சொன்னா- “நான் கூட்டத்துல சிக்கிக்காம பத்திரமா உன்னை அழைச்சிட்டுப் போறேன்”னு. “அது எப்படி முடியும் நாணி”ன்னு நான் கேட்டேன். அப்போ அவள் சொன்னா- “அதுக்கு வழி இருக்கு”ன்னு. “என்ன வழி? பெரு வழியா?” நான் கேட்டேன். அதைக் கேட்டு அவள் சிரிச்சுக்கிட்டே உருண்டா. “ஜானுகூட இருந்தா சிரிக்கிறதுக்கு வேற எதுவுமே வேண்டாம்”னு சொன்னா அவ. எது வேணும்னாலும் இருக்கட்டும்னு நான் புறப்பட்டுட்டேன். ஏகாதசி ஆச்சே! அப்படி பெருசா ஏதாவது புண்ணியம் கிடைக்கிறதா இருந்தா கிடைக்கட்டும். சரிதானே மாதவிக்குட்டி அம்மா!
அப்போ யார் யார் போனது தெரியுமா? நான், வெளுத்தேடத்து நாணி, நெய்த்துக்காரி பாரு, நரை முடி விழுந்த லட்சுமி அம்மா, பிறகு அந்த துருத்தின பல்லுக்காரி கமலாக்ஷி, லட்சுமி அம்மா வோட ரெண்டாவது மகள்... மூத்தவ கோயம்புத்தூர்ல இருக்கா. அவ ஒரு பணிக்கரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. எண்பது ரூபா சம்பளம். அதுனால என்ன? மோசமான ஜாதி. எனக்கு எப்படி அது தெரியும்னு கேக்குறீங்களா? ஊர்க்காரங்க சொல்லித்தான் எனக்கே அது தெரியும். அது உண்மைதான். ஜாதி, மானம் எதுவுமே இப்போ பெருசு இல்ல பணம் உள்ளவங்களுக்கு. ஆனா எங்க யாருக்கும் பணம், படிப்பு எதுவும் கிடையாது. அதனால எங்களுக்கு கொஞ்சம் ஜாதி இருந்தது. ஒரு துலுக்கனைக் கல்யாணம் பண்ண என்னால முடியாது...
ஆ... சொல்லிச் சொல்லி கதை விஷயத்தை மறந்தே போனேன். சரியான கூத்து! நாங்க படகுல ஏறி உட்கார்ந்த உடனே லட்சுமி அம்மா கேட்டா- எனக்கு எப்படி பக்தி வந்திச்சுன்னு. அந்த அம்மாவோட நாக்கு எதையாவது பேசாம இருக்காது. நான் அப்போ சூடா ஒரு பதில் சொன்னேன். இப்போ எனக்கு அது ஞாபகத்துல இல்ல. அதைக் கேட்டு லட்சுமி அம்மா ஒரு மாதிரி ஆயிட்டா. வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும். அதுதானே சரி மாதவிக்குட்டி அம்மா? எனக்கு கோபம் வந்திருச்சா என்ன? ஏய்... ஏய்... கோபமும் இல்ல... ஒண்ணுமில்ல. அந்த அம்மாவுக்கு கர்வம் அதிகம். மகள் கோயம்புத்தூர்ல இருக்காள்ல! மருமகனைப் பார்த்தா போதும், ஒரு வாரத்துக்கு சோறு உள்ளே போகாது. ஒரு காக்காவைப் போல இருப்பான் அந்த ஆளு... அவனுக்கு மாறுகண்ணு... எனக்கு எப்படி அது தெரியும்ன்றீங்களா? நான் அந்த ஆளைப் பார்த்தது இல்ல. நான் பார்க்கவும் வேண்டாம். மத்தவங்க சொல்லிக் கேட்டதுதான்.
ஆ... சொல்ல வந்துட்டு இப்போ லட்சுமி அம்மா மகளோட புருஷனைப் பற்றி நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! என் புத்தி எப்படிப் போகுதுன்னு பாருங்க. படகுல போறப்போ படகு ஓட்டுற ஆளு அப்போ என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கான். பார்வைன்னா அப்படியொரு பார்வை. என் உடம்பையே துளைக்கிற மாதிரி. கொஞ்ச நேரம் நான் பொறுமையா இருந்தேன். பிறகு நான் எல்லாரும் கேக்குற மாதிரி லட்சுமி அம்மாக்கிட்ட சொன்னேன்:
“தெரிஞ்சிக்கணும்னு கேக்குறேன் லட்சுமி அம்மா. படகைச் செலுத்துறப்போ பார்வை பொம்பளைங்க முகத்து மேல இருக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?” நான் சொன்னதைக் கேட்டு லட்சுமி அம்மா சிரிச்சு சிரிச்சு ஒரு மாதிரி ஆயிட்டா. லட்சுமி அம்மா திரும்பி உட்கார்ந்தா.