ஜானு சொன்ன கதை - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 10388
அதுக்குப் பிறகு என்னைப் பார்த்தபடி கேட்டா: “கேட்டியா சங்குண்ணி, ஜானு என்ன கேக்குறான்னு? அதுக்கு பதில் சொல்ல வேண்டியது நீதான்.” அந்த ஆளோட பேருதான் சங்குண்ணி. அப்போத்தான் அந்த ஆளோட பேரே எனக்குத் தெரியும். படகோட்டி தாமனுக்கு அந்த ஆளு சொந்தக்காரனா இருப்பான்னு நான் நினைச்சேன். தாமன் காய்ச்சல் வந்து வீட்டுல படுத்திருக்காப்ல... அதுக்கு பதிலா இந்த சங்குண்ணி வேலைக்கு வந்திருக்கான். லட்சுமி அம்மாவோட ஜாதிக்கார ஆளு. மடம்பில்ன்றது அந்த ஆளோட வீட்டுப் பேரு. நான் அந்த ஆளை முதல் தடவையா அப்போத்தான் பார்க்குறேன். அந்த ஆளைப் பற்றி நான் என்ன சொல்றது? அந்த ஆளு கறுப்புன்னு சொல்ல முடியாது. வெள்ளைன்னும் சொல்ல முடியாது. மாநிறம்... பருமனான உடல்வாகு... நல்ல உயரம்... விரிஞ்ச நெஞ்சு... காதுல சிவப்பு நிறத்துல கல் வச்ச கடுக்கன்... பல் அவ்வளவு நல்லா இல்ல... வெற்றிலை போடுற ஆளுன்னு பார்க்குறப்பவே தெரிஞ்சது. அந்த அளவுக்கு பல்லுல கறை. இருந்தாலும் சிரிக்கிறப்போ அப்படியொண்ணும் வெறுப்பு தோணல. எது எப்படி இருந்தாலும் லட்சுமி அம்மாவோட வார்த்தைகளைக் கேட்டதும் அந்த சங்குண்ணி அப்படி நான் பார்க்கவே இல்லைன்னு சொல்றான். “நான் யாரையும் பார்க்கல.” அந்த ஆளு சொல்றான். நான் சொன்னேன், “பார்த்தான்”னு. என்கூட சேர்ந்து வேற யாராவது அப்படிச் சொன்னாங்களா? நான் சொன்னது எவ்வளவு பெரிய விஷயம்? நான் கேட்டேன்: “பார்க்கணும்னு சட்டம் எதுவும் இருக்கான்னு நான் கேட்டேன்ல?”
“சட்டம் எதுவும் இல்லைன்னாலும் சில நேரங்கள்ல அப்படி பார்க்கணும்னு தோணும்”னு அந்த ஆளு சொன்னான். “பார்க்கட்டும்.... நல்லா பார்க்கட்டும்... ஆனா, என்னைப் பார்க்க வேண்டாம்.” “பார்த்தா என்ன செய்வே?” அந்த ஆளு கேக்குறான்: “பார்த்தா என்மேல வழக்கு போடுவியா?” சரியான ஆள்தான்! வெட்கம் கொஞ்சம்கூட இல்ல.. எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். சாவக்காட்டை அடையிறது வரை பல விஷயங்களையும் பேசி, சிரிச்சு சிரிச்சு நேரம் போனதே தெரியாமப் போச்சு. படகுல இருந்து எல்லாரும் இறங்கினப்போ சங்குண்ணி என் கையைப் பிடிச்சு இறக்கிவிட்டான். “நானே படகை விட்டு இறங்க முடியும். எனக்கு பயமொண்ணும் இல்ல”ன்னு நான் சொன்னேன். “நீ பயப்படுற...” அந்த ஆளு சொல்றான். நான் அந்த ஆளைப் பார்த்து, “அப்படியெல்லாம் இல்ல”ன்னு சொன்னேன். ஆனா, யார் காதுலயும் அது விழலன்னு நினைக்கிறேன். கமலாக்ஷி இருக்குறாள்ல... அந்த துருத்தின பல்லுக்காரி... அவளுக்கு ஒரே பொறாமை. சங்குண்ணி நாயர் என் கையைப் பிடிக்கிறதையும் என்னோடு ஏதாவது பேசுவதையும் அவள் பார்த்துக்கிட்டே இருந்தா. எது எப்படியோ, நாங்க நடந்து நடந்து சுமை தாங்கிக் கல்லை அடைஞ்சப்போ லட்சுமி அம்மா சொன்னா, “இதுக்கு மேல என்னால நடக்க முடியாது. ஒரு மடக்கு தேநீர் குடிக்காம என்னால ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது”ன்னு. அதுக்கு சங்குண்ணி சொன்னான். “எல்லாரும் வாங்க. இந்த தேநீர் கடைக்குள்ளே போவோம்”னு. தேநீர் கடைன்னா அழுக்கு படிஞ்ச ஒரு தேநீர் கடை. அங்கே போட்டிருந்த பெஞ்சுல அஞ்செட்டு ஆம்பளைங்க உட்கார்ந்து தேநீர் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஒரு அலமாரியில வடைகளும் புட்டும் இருந்துச்சு. சங்குண்ணி முதல்ல கடைக்குள்ளே நுழைஞ்சான். “இங்க வாங்க”ன்னு கடைக்காரன் சொன்னான்.
முதல்ல எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. இருந்தாலும் அதிகாலை நேரத்துல ஒரு மடக்கு காப்பிகூட குடிக்காம வீட்டை விட்டுப் புறப்பட்டேன்ல! தலை கத்துறது மாதிரி இருந்துச்சு. நாங்க எல்லாரும் ஒரு பக்கமா போய் உட்கார்ந்தோம். அப்போ நம்ம துருத்தின பல்லுக்காரி கமலாக்ஷி சங்குண்ணிக்குப் பக்கத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு அந்த ஆளோட முகத்தைப் பார்த்து சிரிச்சா. ச்சே...! கொஞ்சம்கூட கூச்ச நாச்சம் இருக்கா அவளுக்கு? கடையில இருந்தவங்க எல்லாரும் அதைப் பார்த்தாங்கன்னு சொல்லணுமா என்ன? அவங்களுக்கு என்ன தெரியும்? கமலாக்ஷியோட புருஷன் அந்த ஆளுன்னு அவங்க நினைச்சிருப்பாங்க. “கமலாக்ஷி...” அவளை அழைச்சு நான் சொன்னேன். “அப்படி அதிகமா சிரிக்காதே. பல் தேநீர்ல விழுந்துடப் போகுது”ன்னு. அதைக் கேட்டு அவ ஒரு மாதிரி ஆயிட்டா. சங்குண்ணி அப்போ என் முகத்தைப் பார்த்து கண்களைச் சுருக்கினான். சரியான ஆளு! தேநீருக்கான காசை சங்குண்ணியே கொடுத்துட்டான். எல்லாரும் சாப்பிட்டதுக்கான காசு எவ்வளவுன்னு பார்த்தப்போ ஒண்ணே கால் ரூபாய் வந்தது. அப்போ தெரியும்ல ஒவ்வொருத்தரும் என்னென்ன வாங்கி இருக்காங்கன்னு! லட்சுமி அம்மா மட்டும் ஆறு வடையும் ரெண்டு புட்டும் சாப்பிட்டிருந்தா. நான் ஒரு டம்ளர் தேநீர் குடிச்சேன். வேறெதுவும் சாப்பிடணும்னு எனக்குத் தோணல. அப்படியே இருந்தாலும் பொதுவா வெளியே நான் எதுவும் சாப்பிடுறது இல்ல. நான் அப்படியே வளர்ந்துட்டேன். எங்க வீட்டுப் பெண்கள் யாருக்கும் தேநீர் கடையைத் தேடிப் போய் தேநீர் வாங்கிக் குடிக்கிற பழக்கம் இல்ல. ஆம்பளைங்ககூட பேசிக்கிட்டு நிக்கிற பழக்கமும் இல்ல. ஏதாவது வேலையைப் பார்ப்போம். அது முடிஞ்சா ஒரு ஓரத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு இருப்போம். மாமா போட்ட கோடு அது.
சரி... சரி... நான் மறந்து போய் கதையை ஒழுங்கா சொல்லாம என் மாமாவைப் பற்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்! என் அறிவு அவ்வளவுதான்... எது எப்படியோ, நாங்க அந்த தேநீர் கடையை விட்டு வெளியே வந்து, ஒரு ஓடைûயைத் தாண்டி கோவிலை நோக்கி நடந்தோம். அப்போ நல்ல வெயில் அடிச்சிக்கிட்டு இருந்துச்சு. என் ஜாக்கெட் நனைஞ்சு உடம்போடு ஒட்டிக்கிடுச்சு. நான் சிவப்பு நிறத்துல சில்க் ஜாக்கெட் போட்டிருந்தேன். மத்தவங்க சாதாரண துணியில ஜாக்கெட் போட்டிருந்தாங்க. கமலாக்ஷியோட ஜாக்கெட் வாய்ல் மாதிரி தெரிஞ்சது. சரி... அது இருக்கட்டும். நாங்க கோவில் குளத்துல இறங்கி நல்லா குளிச்சோம். சங்குண்ணி வேறொரு இடத்துல நின்னுக்கிட்டு உரத்த குரல்ல சொன்னான். “ஜானும்மா... அந்த செயினைக் கழற்றி வச்சிட்டு குளத்துல இறங்க ணும்”னு. அப்போ லட்சுமி அம்மா அவனைப் பார்த்துக் கேட்டா, “அப்படின்னா எங்க யாரோட செயினும் குளத்துல போகாதா? ஜானுவோட செயின் மட்டும்தான் காணாமல் போகுமா?”ன்னு. அதுக்கு, “உங்க யாரோட செயினும் தங்கத்தால் ஆனது இல்ல. அதுனாலதான் நான் சொன்னேன்”னு சொன்னான் சங்குண்ணி.