ஜானு சொன்ன கதை - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 10388
உண்மையாவே சொல்றேன்... நான் பார்த்ததே இல்ல. அந்தக் கடையில உட்கார்ந்துக்கிட்டு நான் பேசுறதையும் நான் தலை முடி சீவுறதையும் அந்த ஆளு பார்த்துக்கிட்டே இருந்தான். எனக்கு பயங்கரமா கோபம் வந்தது. அழுகையும் வந்தது. ஒரே அவமானமா இருந்துச்சு. “இந்த நகர நாகரீகத்தை என்கிட்ட காட்ட வேண்டாம்”னு நான் சொன்னேன். “நாகரிகம் உள்ளவங்கக்கிட்ட நான் நாகரீகத்தைக் காட்டுவேன்”னு அதுக்கு சங்குண்ணி சொன்னான். என் ஜாக்கெட்டைப் பார்த்து, நான் பாரு, கமலாக்ஷி ஆகியோரைப் போல உள்ளவ இல்லன்னு அவன் நினைச்சிருக்கணும். துணியைத் தைக்கிறதா இருந்தா நல்லா தைக்கணும். ஆறணா கொடுக்குறது எதுக்கு? இல்லையா மாதவிக்குட்டி அம்மா? என் ஜாக்கெட்டை திருச்சூர்க்காரன் வேலாயுதன்தான தச்சான். அந்த சிவப்பு சில்க்... கொஞ்சம் ஒரு மாதிரிதான். இருந்தாலும் எனக்கு அது ரொம்பவும் பிடிச்சிருக்கு.
சங்குண்ணி என் பக்கத்துல நெருக்கமா உட்கார்ந்திருக்குறதைப் பார்த்துட்டு கடைக்காரன் சொல்றான். “இதோ உட்கார்ந்திருக்காங்க பிரேம் நசீரும் மிஸ். குமாரியும்”னு. சினிமாக்காரர்களோட பேரு! அதைக் கேட்டு எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு. புடவை வாங்கிட்டு வெளியே வர்றப்போ, சாயங்காலம் ஆயிடுச்சு. சங்குண்ணி பீடி வாங்குறதுக்காகப் போயிட்டான். அதுக்குப் பிறகு அந்த ஆளு திரும்பி வரவே இல்ல. கடைசியில வீட்டுக்குத் திரும்பிப் போறது எப்படின்றது மாதிரி ஆயிடுச்சு. படகு ஓட்டுறதுக்கு சாவக்காட்டுல இருந்த ஒரு பையனைக் கூப்பிட்டோம். பன்னிரெண்டனா அதுல போயிடுச்சு. சங்குண்ணியைப் பார்க்காத கவலையில இருந்தா கமலாக்ஷி. அவ படகுல உட்கார்ந்து அப்பப்போ கண்கள்ல நீர் வர, அதை கையை வச்சு துடைச்சிக்கிட்டு இருந்தா. அவ அந்த ஆளைக் காதலிக்கிறா போல இருக்கு.. பாவம்... ஆனா, எனக்கு ஒரு விஷயம் நல்லா தெரியும். என் மாதவிக்குட்டி அம்மா, அந்த சங்குண்ணி கமலாக்ஷியைக் கல்யாணம் பண்ண மாட்டான். அதை என்னால உறுதியா சொல்ல முடியும். அவன் கொஞ்சம் நாகரிகமானவன்.... எல்லாம் முடிஞ்சு திரும்பி வர்றப்போ பாரு கேட்டா, “ஜானும்மா, உன் செயின் எங்கே?”ன்னு. “என் குருவாயூரப்பா, என்னை ஏமாத்திட்டியா?”ன்னு நான் கேட்டேன். முக்கால் பவுன் வரக்கூடிய செயின் ஆச்சே! அப்படி ஒரு செயினைத் திரும்பவும் வாங்கணும்னா இன்னும் எவ்வளவு நாட்கள் வேலை செய்யணும்? எங்கே போயி தேடுறது? படகுல தேடிப் பார்த்தேன். கண்ணீரும் கையுமா திரும்பினேன். இனிமேல் நான் குருவாயூருக்குப் போக மாட்டேன். என்னால அதை மறக்கவே முடியல. என் செயின் கடிகார செயின் மாதிரி இருக்கும். மாதவிக்குட்டி அம்மா, உங்களுக்கு என் செயினை ஞாபகத்துல இருக்கா? அப்பவே படகைத் திருப்பி அங்கே தேடியிருந்தா கட்டாயம் செயின் கிடைச்சிருக்கும். சங்குண்ணி கூட இருந்திருந்தா அந்த ஆளு தேடிக் கண்டுபிடிச்சு அந்த செயினைத் தந்திருப்பான். அந்த ஆளு ஒரு அன்பான மனிதன்... அது எனக்கு நல்லா தெரியும். அன்பைத் தவிர வேற எதுவுமே வேண்டாம் என் மாதவிக்குட்டி அம்மா.