கோபாஷி குடும்பத்தில் ஒரு சம்பவம்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8671
எகிப்தின் முஸ்லிம் வாழ்க்கையின்- அடைக்கப்பட்ட அறைக்குள் இருக்கும் இருட்டுக்குள் முகத்தைப் பார்த்து எழுதக் கூடியவர் ஆலிஃபா. அரேபிய மொழியில் பெரிய அளவில் பட்டங்கள் எதுவுமில்லை. ஆங்கிலம் தெரியாது. எகிப்தை விட்டு வேறெங்கும் சென்றதுமில்லை. எழுதுவது, பேசுவது எல்லாமே அரபு மொழியில்தான். ஆனால், எழுதும்போது எப்படிப்பட்ட எழுத்தாளரையும்விட, மிகச்சிறந்த படைப்புகள் உருவாகக்கூடிய ஊற்றாக இருக்கிறார் கெய்ரோவைச் சேர்ந்த இந்த பெண் எழுத்தாளர்.
அரபு உலகம்தான் ஆலிஃபாவின் முழு வாழ்க்கையும். முஸ்லிம் மதத்தின் பரம்பரைத் தன்மையிலும், கலாச்சாரத்திலும் முழுமை யாக மூழ்கிவிட்டிருக்கிறார். கறாரான ஒரு இஸ்லாம் மத வாழ்க்கையை அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய படைப்புகளில், ஆண்களின் ஆதிக்க மையமாக இருக்கும் தன்னுடைய சமூகத்தில் பெண்கள் அனுபவிக்கும் துயரங்கள் அதிகமாகக் காட்டப்படுகின்றன.
ஆலிஃபா ரிஃபாத் ஒரு பெண் விடுதலை போராளி அல்ல. எனினும், இஸ்லாம் சமூகத்தில் குடும்ப உறவுகளில் உண்டாகும் கீறல்கள், பெண்கள் சந்திக்கும் ஏமாற்றங்கள், திருமண வாழ்க்கையின் பொருத்தமற்ற தன்மைகள் ஆகிய விஷயங்கள் தான் அவருடைய படைப்புலகம்.
விதவையான ஆலிஃபா தன்னுடைய மூன்று பிள்ளை களுடன் இப்போது கெய்ரோவில் வசிக்கிறார்.
மேற்கூரையிலிருந்து உரத்து ஒலித்த சேவலின் முரட்டுத்தனமான கூவல் சத்தத்தைத் கேட்டுத்தான் ஜீனத் கண்விழித்தாள். கிராமத்தின் ஒரத்தில் இருந்த கோபாஷியின் வீட்டுக்கு முன்னால் நதியும், புகை வண்டிப் பாதை வரை நீண்டு கிடக்கும் வயல் களும் இருந்தன.
சேவலின் கூவலுக்கு பக்கத்து வீடுகளின் மேற்கூரைகளிலிருந்து பதில்கள் உரத்து வந்தன. அவை மல்பரி செடிகளுக்கு மத்தியில் இருந்த மசூதியிலிருந்து வந்த மொல்லாக்காவின் வாங்கு ஒலியில் அமைதியாக்கப்பட்டு விட்டது. “பிரார்த் தனை உறக்கத்தைவிட மேலானது.”
தனக்கு அருகில் தூங்கிக் கொண்டி ருந்த குழந்தைகளின் பக்கம் கையை நீட்டிய ஜீனத், அவர்களை மூடியிருந்த பழைய போர்வையின் நுனிப்பகுதியை மேல் நோக்கி இழுத்துவிட்டாள். தொடர்ந்து மூத்த மகளின் தோளைப் பிடித்து குலுக்கினாள்.
“பெண்ணே... பொழுது விடிஞ்சிருச்சு... படைத்தவனின் இன்னொரு அதிகாலைப் பொழுது... எழுந்திரு... நீமா, இன்னைக்கு சந்தை நாள்.”
நீமா முதுகைக் காட்டிக் கொண்டு களைப்புடன் நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தாள். சூறாவளிக் காற்று தாக்கி நிலை குலைந்த ஒரு ஆளைப் போல ஜீனத், தனக்கு முன்னால் மலர்ந்து கிடந்த சரீரத் தையே வெறித்துப் பார்த்தாள். நீமா எழுந்து தன் தொடைகளில் பாவாடையை இழுத்துவிட்டாள். பிறகு வட்ட முகத்தில் உறக்கத்தைத் தவழவிட்டுக் கொண்டிருந்த கண்களைக் கசக்கினாள்.
“சந்தைக்கு சோளத்தைச் சுமந்து கொண்டு போய்வர உன்னால முடியுமா மகளே? மிகவும் கனமாக இருக்குமே?”
“முடியும் உம்மா. அப்படி இல்லைன்னா இங்கே வேறு யார் இருக்காங்க?”
ஜீனத் குளிப்பதற்கும் சிக்கு எடுப்பதற்கும் நடுமுற்றத்தை நோக்கி அலட்சியமான காலடிகளுடன் நடந்தாள். “நிஸ்காரம்” முடிந்த பிறகும், விரலால் அல்லாஹுவின் புகழ்களை உச்சரித்துக் கொண்டே அவள் உட்கார்ந்திருந்தாள். வெளியே நீமா நின்று கொண்டிருக்கி றாள் என்பது தெரிந்து அவளை நோக்கித் திரும்பினாள்.
“ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்? போய் தேநீர் தயார் பண்ணு பெண்ணே.”
கோபாஷி சோள மூட்டைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்த மூலையை நோக்கி ஜீனத் நடந்தாள். ஒரு முன் ஏற்பாடு என்பதைப் போல அதை அவர்களுக்குக் கொடுத்துவிட்டு, கோபாஷி வேலை தேடி லிபியாவிற்குச் சென்றுவிட்டான். ஒரு வருடத்திற்குள் அவன் திரும்பி வருவான்.
“கோபாஷி, தூரத்தில் இருந்தாலும் படைத்தவன் எங்களைக் காக்கட்டும்.”
அவர்கள் முணுமுணுத்தார்கள்.
ஒரு மூட்டைக்கு முன்னால் உட்கார்ந்து தொடைகளுக்கு மத்தியில் வைத்த நாழியில் ஜீனத் அளவு வரும் வரை சோளத்தை அள்ளிப் போட்டாள். பிறகு அதை ஒரு கூடைக்குள் கொட்டினாள். இருமல் வந்தபோது, முகத்தை நோக்கி வந்த தூசியை விலக்கிவிட்டு, மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.
பெரிய மண் பாத்திரத்தின் மரத்தாலான மூடியை எடுத்து, நீமா நீரை எடுத்து முகத்தில் தெளித்தாள். விரல் நுனிகளை நனைத்து, பின்னிய தலைமுடியைப் பிரித்து அவள் கொண்டை போட்டுக் கட்டினாள். தொடர்ந்து தன் உம்மாவின் பக்கம் திரும்பினாள்.
“இவ்வளவு போதாதா உம்மா? நமக்கு எதற்கு- ஏன் இவ்வளவு காசு?”
“நாம ஹம்தானுக்கு கூலி கொடுக்க வேண்டாமா? நமக்காக அவன் சும்மாவா அவரை நட்டு நனைக்கிறான்? விளையாட்டுக்கா?”
நீமா திரும்பி சுவரிலிருந்த அலமாரியிலிருந்து ஸ்டவ்வை எடுத்து காய்ந்த சோளமணிகளை பிரமிட்போல வைத்து, நெருப்பைப் பற்ற வைத்தாள். ஸ்டவ்வை தன் உம்மாவின் அருகில் வைத்துவிட்டு, அவள் மண் பாத்திரத்திலிருந்து நீரை எடுத்து தேநீர் பாத்திரத்தில் நிறைத்து, அருகில் வைத்தாள்.
நீமா கீழே உட்கார்ந்தாள். அமைதி நிறைந்த போர்வை இருவரையும் மூடியது.
“நம்ம எருமைக்கு எப்போ சினை பிடிச்சது?”
“உன் வாப்பா போன பிறகு...”
“சரியாகச் சொல்றதா இருந்தால், பெரிய பெருநாள் முடிந்த பிறகு... அப்படித்தானே?”
அவள் அதை ஒப்புக்கொண்ட மாதிரி தலையை ஆட்டினாள். பிறகு தலையைக் குனிந்து கொண்டு தூசியில் வெறுமனே வரைய ஆரம்பித்தாள்.
“எத்தனை முட்டைகள் இருக்குன்னு தேநீர் கொதிக்குறப்போ போய் பார்.”
ஜீனத் சுட்டுப் பழுத்த நெருப்புக் கனலையே வெறித்துப் பார்த்தாள். நடனமாடிக் கொண்டிருந்த நெருப்புக் கொழுந்து களைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தபோது, அவளுக்கு அதிகமான மனநிம்மதி உண்டானது.
குழந்தைகளும்... மண்ணும்... எருமையும்... எல்லா சுமைகளையும் அவளுடைய தோளில் ஏற்றி வைத்துவிட்டு கோபாஷி போய் விட்டான். “நீமாவைப் பத்திரமா பார்த்துக்கணும். அவளுக்கு ஏற்பாடுகளோட வர்றேன்.” போவதற்கு முந்தைய நாள் இரவில் அவன் அவளிடம் சொன்னான். அதற்குப் பிறகு தன்னுடைய கைகளை விரித்து வைத்துக்கொண்டு அவன் தெய்வத்திடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். “என் ரப்பே, அவளுக்காக நிக்காஹ் சோளம் வாங்கி வர எனக்கு அருள் செய்யணும்.” “உங்களுடைய வார்த்தைகள் உடனடியாக நேராக சொர்க்கத்தில் போய் சேரட்டும்”- அவள் அவனிடம் கூறினாள். வருகிற பெரிய பெருநாளுக்கு முன்னால் அவனால் வரமுடியவில்லை. திரும்பி வந்து அவன் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளும்போது... என்ன நடக்கும்? தலையைக் கையால் தாங்கியபடி அவள் நெருப்புக் கனலில் இருந்த சாம்பலைத் தட்டிவிட்டாள்.
“இப்போதைய பெண் பிள்ளைகளின் ஒரு பிரச்சினை...” -மாதக்குளியல் நேரத்தில் எதுவுமே நடக்காததைப்போல ஒவ்வொரு மாதமும் அந்த தந்திரக்காரப் பெண் துணியைத் தொங்க விடுகிறாள். இங்கு அவள் நான்காவது மாதம். எனினும், எதையும் காண முடியவில்லை.