கோபாஷி குடும்பத்தில் ஒரு சம்பவம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 8673
நீமா திரும்பி வந்து துணி மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்து இரண்டு முட்டைகளை எடுத்து அடுப்பில் வைத்தாள். மீதியை தட்டில் வைத்தாள். தொடர்ந்து குவளைகளையும் சர்க்கரை வைக்கப்பட்டிருந்த டப்பாவையும் எடுத்துக்கொண்டு சிந்தனை களில் மூழ்கியிருந்த தன் உம்மாவிற்கு அருகில் வந்து உட்கார்ந்தாள்.
“உனக்குத் தெரிஞ்சு வேறு வழியொண்ணும் இல்லையா?”
கையற்ற நிலையில் நீமா தோள்களைக் குலுக்கினாள்.
“உன் வாப்பா போய், நான்கு மாதங்கள்தானே ஆயிருக்கு? இனியும் காலம் இருக்குல்ல?”
“அதனால என்ன? படைத்தவன் மட்டுமே என்னோட பிரச்சினைகளுக்கு காரணமா இருக்குறப்போ... உம்மா, நீங்க என்ன செய்ய முடியும்? வாய்க்கால்ல இருந்து நீர் எடுக்கறப்போ, என் கால் வழுக்கி விட்டிருந்தால், எல்லாம் எளிதாக முடிஞ்சிருக்கும்.”
ஜீனத் மார்பில் அடித்துக்கொண்டு, தன் மகளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
“அப்படி மோசமா எதையாவது பேசாம இரு. சைத்தானின் வார்த்தைகள் காதில் விழ வேண்டாம். பேசாம இரு. வாப்பா வர்றதுக்கு முன்னால், எதையாவது வழியைக் கண்டு பிடிப்போம்.”
ஜீனத் தேநீரை ஊற்றினாள். அமைதியாக தேநீரைப் பருகிவிட்டு, அவள் குவளையை தனக்கு முன்னால் வைத்தாள். ஓட்டை உடைத்து முட்டையைத் தின்றாள். நீமா அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய விரல்கள் சூடு நிறைந்த குவளையை இறுகப் பற்றியிருந்தன.
பெண்கள் அன்றைய சந்தை விஷயங்களை ஒருவரோடொருவர் கூறிக் கொள்வதும், வயலிலிருந்து திரும்பி வந்த ஆண்கள் ஒருவரோடொருவர் நலம் விசாரித்துக் கொள்வதும் வெளியே சத்தமாகக் கேட்டன. வீட்டைச் சுற்றி இருந்த வயலை நோக்கி எருமைகளை விரட்டிக் கொண்டிருந்த ஹம்தானின் சிரிப்பு இதற்கு மத்தியில் உரத்துக் கேட்டது “அவனோட கணக்கு எல்லாம் அல்லாஹுவோடதான்.” ஜீனத் முணுமுணுத்தாள்: “அவனுக்கு சந்தோஷம்... உலகத்தில் அவனுக்கு மட்டும் கவலைகளே இல்லை.”
நீமா எழுந்து, தலைமுடியைச் சரி பண்ணினாள். நீமா சந்தைக்குச் செல்ல தயாராவதை ஜீனத் பார்த்தாள். அவள் அவளுடைய பாவாடையைப் பிடித்து இழுத்து அருகில் நிற்கச் செய்தாள். அப்போது, யாரோ கதவைத் தட்டும் சத்தத்தை அவள் கேட்டாள். தொடர்ந்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணான உம்மல் கயிர் அழைக்கும் குரல் கேட்டது.
“எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீமா என்னுடன் சந்தைக்கு வர்றால்ல? என்ன... இப்போதும் அவள் கண் விழிக்கலையா?”
“அவள் எங்களோட சொந்தக்காரங்களுடன் சேர்ந்து போறாளே, தங்கச்சி!”
“அல்லாஹு அவளைக் காப்பாற்றி திரும்பக் கொண்டு வரட்டும்.”
நீமா பதைபதைப்புடன் தன் உம்மாவைப் பார்த்தாள். அப்போது ஜீனத் விரல்களை உதட்டில் சேர்த்து வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினாள்.
“உம்மா, நீங்க என்ன சொல்றீங்க? எந்த சொந்தக்காரங்களைப் பற்றி நீங்க சொல்றீங்க?” உம்மல் கயிரின் பாதச் சத்தங்கள் தூரத்தில் மறைந்தவுடன், நீமா கேட்டாள்.
ஜீனத் எழுந்து தன்னுடைய துணிப் பெட்டியைக் கூர்ந்து ஆராய்ந்து, பணம் பத்திரப்படுத்தி வைக்கப்பட்ட ஒரு துவாலை யையும் சில பழைய துணிகளையும் அதிலிருந்து எடுத்தாள். அவள் துவாலையை நீமாவின் கையில் கொடுத்தாள்.
“மகளே, இதை வச்சுக்கோ. இது என்னோட மொத்த சம்பாத்தியம்.”
உம்மா கூறுவதை நீமா அமைதியாகக் கேட்டாள்.
“நீ உன்னோட துணிகளை எடுத்துக்கொண்டு நேராக புகை வண்டி நிலையத்திற்குச் சென்று கெய்ரோவுக்கு டிக்கெட் எடுக்கணும். கெய்ரோ ஒரு பெரிய ஊர், மகளே. அதன் நேரத்திற்கு அல்லாஹு உன்னை வைத்திருக்கும் வரை, நீ அங்கேயே இருக்கலாம். பிறகு கடைசியில் ஒரு நள்ளிரவு நேரத்தில் யாரும் பார்க்கவோ கேட்கவோ செய்யாமல் நீ அதைக் கொண்டு வரணும்.”
அவள் அவளுடைய பாவாடை நுனியை உயர்த்தி இறுக கட்டினாள். பழைய துணிகளை எடுத்து அவளுடைய இடுப்பில் சுற்ற ஆரம்பித்தாள். தொடர்ந்து பாவாடையைக் கீழே விட்டாள். கவலையுடன் நீமா கேட்டாள்:
“அப்போ... நாம வாப்பாவிடம் என்ன சொல்றது உம்மா?”
“பேசிக்கொண்டு நின்று கொண்டிருக்கும் நேரமில்லை இது. புகை வண்டி நிலையத்திற்குப் போவதற்கு முன்னால் இந்தக் கூடையைத் தூக்குறதுக்கு எனக்கு உதவு. ஆண்கள் பார்த்துக் கொண்டிருக்க, நான் சந்தைக்குப் போயிட்டு வர்றேன். வாப்பா திரும்பி வர்றப்போ, தப்பா பொறந்த ஒரு பேரனைப் பார்க்குறதைவிட ஒழுங்கான ஒரு மகனைப் பார்க்குறது தானே நல்லது!”