பெண் மீசை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6270
பெண்களுக்கு ஆண்களைவிட சிந்தனைத்திறன் இருக்கிறது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன என்றாலும், என்னுடைய அறிவில் படுவது ஒன்றே ஒன்றுதான். அதைக் கேட்பதாக இருந்தால் கூறுகிறேன்:
ஒருநாள் நான் ஒரு விருந்தாளியாக ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த வீட்டில் இருந்த கல்லூரி மாணவிக்கு அழகான, எளிய அரும்பு மீசை இருந்தது. அதைப் பார்த்ததும் நான் என்ன சொல்ல வேண்டும்? இளைஞர்களைப் போல இளம்பெண்கள் எதற்காக மீசை வைத்துக் கொள்கிறார்கள்? பொதுவாகக் கூறுவதாக இருந்தால்- ஆண்களுக்கென்று இருக்கும் ஒரு தனிச் சொத்து அது. சமத்துவ அழகியல் என்பதன் அடிப்படையில் நான் நினைத்தேன். சில நாட்கள் கடந்த பிறகு, பெண்கள் வழுக்கைத் தலையை வளர்ப்பதற்கும் முயற்சிப்பார்கள்! இவற்றிற்கெல்லாம் எதிராக ஒரு சட்டம் உண்டாக வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு நான் ஒரு கட்டிலில் படுத்திருந்தேன். அப்படிப் படுத்திருக்கும்போது, உண்மையாகவே நான் கூறுகிறேன். சாளரத்தின் வழியாக நான் ஒரு காட்சியைப் பார்த்தேன். முன்பு கூறிய மீசையைக் கொண்ட கல்லூரி மாணவி மேஜையின் மீது குனிந்து உட்கார்ந்து கொண்டு கண்ணாடியைப் பார்த்தவாறு கத்திரியால் மெதுவாக மீசை வெட்டிக் கொண்டிருக்கிறாள்!
"ஹோயி!" நான் அழைத்தேன்.
அவள் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே கதவிற்கு அருகில் வந்து நின்றாள்.
"முட்டாள் பெண்ணே, நீ என்ன செய்தாய்?" என்று நான் கேட்கவில்லை. நான் கேட்டேன்:
"குழந்தை, நீ மீசையை வெட்டிக் கொண்டிருந்தாயா?"
அவள், "ஆமாம்" என்று ஒப்புக் கொண்டாள்.
நான் சொன்னேன்:
"அப்படி வெட்டினால், மீண்டும் பலமாக அங்கு நல்ல கருமையான முடி வளர்ந்து வரும்."
அவள் கேட்டாள்:
"பிறகு... இவனை என்ன செய்ய வேண்டும்?"
அவள் பொதவாகவே ஒரு மாதிரியான பொருட்களையெல்லாம் 'இவள்', 'அவள்' என்றுதான் கூறுவாள்.
நான் சொன்னேன்:
"அவனை நீக்குவதற்கு மருந்து தருகிறேன்."
"முடியை அழிக்கக் கூடியவனா?"
"ஹாய்! அவனல்ல."
"பிறகு?"
"என்ன தருவாய்?"
"என்ன தரணும்?"
அப்போது எனக்கு கொஞ்சம் சில்லறைக் காசுகளின் தேவை இருந்தது-. அதனால் நான் சொன்னேன்:
"இருபத்தைந்து ரூபாய்?"
அதைத் தருவதாக அவள் ஒப்புக் கொண்டாள். முன்கூட்டியே காசு வாங்காமல், நான் என்ன மருந்து என்பதையும் கூறிவிட்டேன். ஆனால், இந்த நிமிடம் வரை... அவள் பணத்தைத் தரவில்லை!
ஆண்களைவிட பெண்களுக்கு சிந்தனை சக்தி இருக்கிறது என்பதுதான் அவளுடைய எண்ணம். கிட்டத்தட்ட அது உண்மையும் கூட. ஏனென்றால், நான் கூறிய மருந்து ஒரு சிறிய இடுக்கி, அதைப் பயன்படுத்தி ஒவ்வொரு முடியையும் மெதுவாகப் பிடுங்க வேண்டும். பிறகு அங்கு முடி வளராது. வேண்டுமென்றால்,பச்சை மஞ்சளை அரைத்து அங்கு தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் கழுவி முடித்தால்... சம்பவம் க்ளீன்!
அப்போது அவள் கேட்டாள்:
"சிறிய இடுக்கி எங்கே கிடைக்கும்?"
அது எங்கே கிடைக்கும் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. விசாரித்துக் கூறுவதாக நான் சொன்னேன்.
அது நடந்து, ஒரு பதினைந்து நிமிடம் கடக்கவில்லை. அவள் க்ளீன் ஷேவ் செய்ததைப் போல சிரித்துக் கொண்டே வந்து உட்கார்ந்திருக்கிறாள்! என்ன ஒரு சந்தோஷம்!
"கழுதையின் தலையைக் கொண்டவளே! நீ என்ன செய்தாய்? கத்தியால் முடிகளை நீக்கி விட்டாயா? என்று கேட்பதற்கு பதிலாக நான் கேட்டேன்:
"மீசை எங்கே போனது?"
அவள் சிரித்தாள்:
"அவன் போய் விட்டான்!"
"எப்படி?"
அவள் சொன்னாள்:
"நான் அவன்களை ஒவ்வொருவராக இரண்டு விரல்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு, நகத்தால் கிள்ளி எறிந்தேன்."
அடடா... பெண்ணே! அறிவு அரக்கியே!"