தமிழகத்தின் வளர்ச்சியைப் பார்த்து மலையாளிகளுக்கு பொறாமை!
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3027
எண்ணியதை எழுதுகிறேன் - சுரா (Sura)
தமிழகத்தின் வளர்ச்சியைப் பார்த்து மலையாளிகளுக்கு பொறாமை!
ஒரு மாதத்திற்கு முன்பு நான் கேரளத்திற்குச் சென்றிருந்தேன். பத்து நாட்கள் அங்கு இருந்தேன். அப்போது பல வகைப்பட்ட மனிதர்களுடனும் நெருங்கி பழகுவதற்கும், பல விஷயங்களைப் பற்றி உரையாடுவதற்கும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அவர்களுடன் பல்வேறு சூழ்நிலைகளில் உரையாடியபோது நான் தெரிந்து கொண்ட விஷயங்கள்:
1. தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடிக் கணக்கில் ஊழல் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும், அவருடைய தைரிய குணம் கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிடித்திருக்கிறது. அவரைப் போன்ற துணிச்சலான அரசியல்வாதி கேரளத்தில் ஒருவர் கூட இல்லை என்பதை பெருமையுடன் குறிப்பிட்டார்கள்.
2. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் ஊழல் விஷயத்தில் கெட்ட பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அவருடைய பங்கு பெரியது என்ற கருத்து பரவலாக எல்லோரிடமும் இருக்கிறது. அவர் முதல்வராக இருந்தபோது தமிழகம் முன்னேற, நிறைய நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார் என்ற கருத்து பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது.
3. தமிழகம் தொழிற் துறையில் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது என்ற எண்ணம் பரவலாக எல்லோரிடமும் இருக்கிறது. கடந்த சில வருடங்களில் தமிழகத்தில் நிறைய தொழிற்சாலைகள் உண்டாகியிருக்கின்றன என்பதை பெருமையுடன் கூறுகிறார்கள். குறிப்பாக-கடந்த தி.மு.க. ஆட்சியின்போது.
4. தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் 'ஏ ஒன்' என்ற கருத்து கேரளத்தைச் சேர்ந்த அனைவரின் மனங்களிலும் இருக்கிறது. தமிழகத்தின் சாலைகளுடன் ஒப்பிடும்போது, கேரளத்தின் சாலைகள் மோசமான நிலையில் இருக்கின்றன என்பதை வருத்தத்துடன் கூறுகிறார்கள்.
5. பா. ம. க. வைச் சேர்ந்த மூர்த்தி, வேலு-இருவரும் ரயில்வே அமைச்சர்களாக மத்தியில் இருந்தபோது தமிழகத்திற்கு நிறைய ரயில்கள் கிடைத்திருக்கின்றன என்பதை குறிப்பிடுகிறார்கள். ஆனால். அவர்களின் செயல்களால் தமிழகத்திற்கு பயன் கிடைத்திருந்தாலும், கேரளத்திற்கு பாதிப்பு உண்டாகியிருக்கிறது என்பதையும் மறக்காமல் கூறுகிறார்கள்.
6. கேரளத்தில் வேலை செய்வதற்கு மலையாளிகள் தயாராக இல்லை. பெரும்பாலானவர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று விட்டதால், பணி செய்வதற்கு ஆட்களை தேட வேண்டியதிருக்கிறது. அதன் விளைவாக, 30%-40%பீகார், அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தாம் கேரளத்தில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். கேரளத்தைச் சேர்ந்தவர்கள் வயல்களிலோ. தோட்டங்களிலோ வேலை செய்தால், ஆணுக்கு நாளொன்றுக்கு 700 ரூபாயும், பெண்ணுக்கு 500 ரூபாயும் தர வேண்டியதிருக்கிறது. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு அதைவிட 200 ரூபாய் குறைவாக கொடுத்தாலும், வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு நேரம் ஒரு பொருட்டல்ல.
7. . கேரளத்தின் உணவு விஷயத்தில் மிகப் பெரிய மாற்றம் உண்டாகியிருக்கிறது. கேரளத்தின் பாரம்பரிய உணவைச் சாப்பிடும் பழக்கம் கணிசமாக குறைந்திருக்கிறது. இட்லி, தோசை, வெண்பொங்கல், பூரி, வடை, சப்பாத்தி, பரோட்டா என்று பிற மாநிலங்களின் உணவு வகைகள் அதிகமாக நுழைந்து விட்டன. கேரளத்தின் பாரம்பரிய அரிசியை பயன்படுத்தும் பழக்கம் கூட சமீப காலமாக குறைந்திருக்கிறது. ஓட்டல்களில் கூட வெளி மாநில அரிசிதான் பயன்படுத்தப்படுகிறது.
8. இப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி மிகவும் நல்லவர். ஆனால், மிகப் பெரிய திறமைசாலி அல்ல. அவர் மக்களுக்கு நிறைய நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால். அவருடன் இருக்கும் பெரும்பாலான அமைச்சர்களும், அதிகாரிகளும் ஊழலில் திளைத்தவர்களாய் இருப்பதால், அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. செய்ய விட மாட்டார்கள். ஆனால், இந்த அயோக்கியர்களை வைத்துக் கொண்டுதான் அவர் அரசாங்கத்தை நடத்த வேண்டியதிருக்கிறது. அவரைப் பார்த்தால் பரிதாபப்படத்தான் தோன்றுகிறது.
9. வீ. எஸ். அச்சுதானந்தன் ஒரு சுத்தமான அரசியல்வாதி. அவர் ஒரு புனித மனிதர். அவரைப் பற்றி ஒரு சிறு குறை கூட கூற முடியாது. இப்போதும் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது.
10. . ஏ. கே. ஆன்டனி ஒரு நல்ல மனிதர். ஆனால் அரசியல் நடத்த தேவைப்படும் சாமர்த்தியம், தந்திரம் இவையெல்லாம் அவருக்கு தெரியாது. அதனால்தான் அவரால் மாநில அரசியலில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.
11. ஈ. எம். எஸ். நம்பூதிரிப்பாடு, ஸி. அச்சுதமேனனுக்குப் பிறகு கேரளம் கண்ட நல்ல முதலமைச்சர்-பி. கே. வாசுதேவன் நாயர்.
12. . பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால், நிலத்தின் விலை மிகவும் கூடியிருக்கிறது. அரசாங்கம் சாலை அமைக்க இடம் கேட்டால் கூட யாரும் அரசாங்கம் கேட்கும் விலைக்கு தர தயாராக இல்லை. இனி வரும் நாட்களில் நிலத்தின் மதிப்பு மேலும் பல மடங்கு கூடும்.
13. கேரள மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் உயர்ந்திருக்கிறது. தரித்திரம் என்பதே கேரளத்தில் இல்லை என்று கூட கூறலாம். சொந்தத்தில் வீடு, கார், வங்கியில் பணம் என்று கேரள மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகியிருக்கிறது. வளைகுடாவை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் சொர்க்க பூமியாக ஆக்கினார்கள். பதிலுக்கு கேரளத்தில் வறுமையை விரட்டியடித்திருக்கிறது வளைகுடா.
14. தொழிற்சாலைகள் கேரளத்தில் சொல்லிக் கொள்கிற அளவிற்கு உண்டாகாவிட்டாலும், சுற்றுலா வளர்ச்சியில் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது கேரளம். கடந்த சில வருடங்களில் கேரளம் பல மடங்கு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்றால், அது டூரிஸம் விஷயத்தில்தான்.
15. பணம் தேடுவதே வாழ்க்கையின் நோக்கம் என்றாகி விட்ட பிறகு, இதற்கு முன்பு இருந்த பல நல்ல விஷயங்கள் இப்போது கேரளத்தின் இளம் தலைமுறையிடம் இல்லாமற் போய் விட்டன. அல்லது குறைந்து விட்டன. உதாரணத்திற்கு-முன்பெல்லாம் கூலி வேலை செய்பவர்களுக்குக் கூட இலக்கியவாதிகளைப் பற்றி தெரிந்திருக்கும். குடிசையில் இருப்பவர்கள் கூட தகழி, பஷீர், பொற்றெக்காட், கேசவதேவ் ஆகியோரின் பெயர்களையும், அவர்களின் படைப்புகளையும் தெரிந்து வைத்திருப்பார்கள். இன்றைய தலைமுறையிடம் அந்த போக்கு குறைந்திருக்கிறது. நான் உரையாடிய கல்லூரி மாணவர்கள் பலருக்கும் கூட முத்திரை பதித்த பல இலக்கியவாதிகளைப் பற்றியும், அவர்களுடைய காலத்தை வென்று நிற்கும் படைப்புகளைப் பற்றியும் எதுவுமே தெரியவில்லை. எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்த விஷயம் இது. கேரளத்தின் தனித்துவமே இந்த உயர்ந்த இலக்கியங்கள்தாம். அதை கேரள மண்ணும், இளம் தலைமுறையும். மறக்கலாமா?