ஒரு கிறிஸ்துமஸ் கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7237
சித்தார்த்தனும் பத்ரோஸும் சேர்ந்து அம்மிணி என்ற விபச்சாரியை ஒரு லாட்ஜ் அறைக்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள். அடுத்த அறையில் உள்ளவர்கள் அவளை பயன்படுத்திவிட்டு வெளியே அனுப்பிய பிறகு, வராந்தாவில் அவளைப் பார்த்தான் சித்தார்த்தன்.
"எனக்கு பிராந்தியும் பிரியாணியும் வேணும்"- அவள் சொன்னாள். சொன்ன மறுகணமே சித்தார்த்தனின் கட்டில் மேல் ஏறி போர்வையை இழுத்துப் போர்த்தி கண்களை மூடி படுத்துக் கொண்டாள்.
சித்தார்த்தனும் பத்ரோஸும் சில நிமிடங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். பத்ரோஸ் பிராந்தியும் சாப்பாடும் வாங்கப் போனவுடன், சித்தார்த்தன் மெதுவாக போர்வையை நீக்கி அவளைப் பார்த்தான்.
பிராந்தி குடித்து, பிரியாணியும் சாப்பிட்டு முடித்தபிறகு, அவள் மீண்டும் கட்டிலில் போய் போர்வையை மூடி படுத்துக்கொண்டாள். சித்தார்த்தனும் பத்ரோஸும் பிராந்தியின் போதையில் இலேசாகத் தலையை ஆட்டியவாறு அவளையே பார்த்தார்கள். பத்ரோஸ் அவளை மெல்லத் தொட்டு அழைத்தான்: "நீ என்ன, இங்க உறங்குறதுக்கா வந்தே? நாங்க ரெண்டுபேரும் உன்னைச் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கவா இருக்கோம்?"
அம்மிணி சுவரைப் பார்த்தவாறு திரும்பிப் படுத்தாள். சித்தார்த்தன் சொன்னான்: "இவள் நம்மள ஏமாத்திட்டா." அம்மிணி சுவரைப் பார்த்தவாறு சொன்னாள்: "நான் இதுவரை யாரையும் ஏமாத்தினது இல்ல. சொல்லப்போனா நான் சரியா தூங்கி ரெண்டு நாட்களாச்சு. என்னோட கஷ்டமும், கவலையும் உங்களுக்குத் தெரியணும்னு அவசியம் இல்ல... நான் கொஞ்சம் முதல்ல உறங்கிக்கிறேன்..."
"உனக்கு அவ்வளவு களைப்பா இருந்துச்சுன்னா, நாங்களும் கொஞ்ச நேரம் உறங்குறோம்"-என்று சொல்லியவாறு பத்ரோஸும் சித்தார்த்தனும் அடுத்த கட்டிலில் ஏறி படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். சாயங்காலம் ஆன பிறகுதான் அவர்கள் உறக்கம் நீங்கி எழுந்தார்கள். அப்போது அம்மிணி கட்டிலில் அமர்ந்து தலைமுடியை வாரிக் கொண்டிருந்தாள். அவளின் உதடுகள் ஏதோ ஒரு சினிமா பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.
"என்ன, உன் உறக்கம் போயிடுச்சா?"- பத்ரோஸ் கேட்டான். சித்தார்த்தன் அவள் பாட்டு பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான். "ஒரு கிண்ணம் சந்தனம் கொண்டு நடக்கும் வெண்ணிலாவே!" -என்றவள் மெதுவான குரலில் பாடினாள். அதற்கு அடுத்த இரண்டு வரிகளை சித்தார்த்தன் தன் மனதிற்குள் பாடினான். அந்தப் பாட்டு அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
பிறகு... ஒரு ஆள் வெளியே நாற்காலியில் அமர்ந்து தெருவைப் பார்த்துக்கொண்டிருக்க, இன்னொருவன் அம்மிணியுடன் உடல் உறவு கொண்டான். சித்தார்த்தனுக்கு என்ன காரணத்தாலோ மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
இரவு சாப்பாடு நேரம் ஆனபோது, பத்ரோஸ் மீண்டும் போய் பிராந்தியும் பிரியாணியும் வாங்கிக்கொண்டு வந்தான். குடியும் சாப்பாடும் முடிந்ததும், அம்மிணி ஒரு நாற்காலியில் அமர்ந்து கட்டில்மேல் கால் நீட்டி வைத்தவாறு சொன்னாள்: "எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது. என்னோட கவலை என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா? ஒரு தேவடியாளோட வாழ்க்கைன்னா அது எப்படி இருக்கும்? என் விஷயத்தையே எடுத்துக்கோங்களேன். எனக்கு புருஷனும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க. அப்பாவும், அம்மாவும், அண்ணன்மார்களும், அக்கா தங்கைமார்களும், மாமாக்களும், அத்தைகளும்- எல்லாருமே இருக்காங்க. நான் ஒரு விபச்சாரி. அப்படின்னா இதன் அர்த்தம் என்ன? எங்கோ இருந்து வந்த நான் உங்களோட கட்டில்ல படுத்துக்கிடக்கேன்னா, நீங்களும் என்னைப் பார்த்து கேட்கணும்ல இதன் அர்த்தம் என்னன்னு! நான் இப்போ தேவடியாளா இல்லாமலிருந்தா, வேறு என்னவா இருப்பேன்? எனக்கு இது புரியவே இல்ல... நான் உண்மையில் என்ன? மனைவியா, மகளா, அம்மாவா, தங்கச்சியா, அக்காவா, காதலியா, விபச்சாரியா?"
சித்தார்த்தன் அம்மிணியின் பாதங்களை இரு கைகளாலும் இறுகப் பிடித்தவாறு சொன்னான்: "உன்னைப் பார்க்குறப்போ உண்மையிலேயே பாவமா இருக்கு. ஆமா... உன்னோட பேரு என்ன?"
"என் பேரை இப்போ நீங்க தெரிஞ்சு என்ன ஆகப்போகுது? என்னோட பேரு- விபச்சாரி. என்னோட வேலை ஆண்களை வசீகரிக்கிறது..."- அம்மிணி இதைச் சொல்லிவிட்டு தேம்பித் தேம்பி அழுதாள்: "இப்பத்தான் என் பேரை உங்களுக்குக் கேட்கணும்னு தோணிச்சா? இவ்வளவு நேரம் நீங்க யார்கூட பேசிக்கிட்டு இருந்தீங்க? இவ்வளவு நேரமா யார்கூட நீங்க படுத்துக் கிடந்தீங்க?"
சித்தார்த்தனும் பத்ரோஸும் குற்ற உணர்வு குடிகொள்ள கூறினார்கள்: "சரி... மன்னிச்சுக்கோ. உன்னை எங்களுக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு. நீ இன்னைக்கும் நாளைக்கும் கூட இங்கே தங்கிட்டுப்போகலாம். நாங்க உனக்கு எந்தத் தொந்தரவும் தரமாட்டோம்."
"அப்படின்னா முதல்ல என்னோட கதையைக் கேளுங்க. என்னோட காதலன் ஒரு வேளை இங்கே என்னைத் தேடி வந்தாலும் வரலாம். என் புருஷன் கூட என்னை இங்கே தேடி வரலாம். என்னோட அப்பாவோ, அம்மாவோ என்னைத் தேடி வரமாட்டாங்க. அப்படி ஒரு சூழ்நிலை வந்தா நீங்க என்ன செய்வீங்க? ஆச்சரியப்படாம இருக்கணும்னா என்னோட முழு கதையையும் கேளுங்க. நான் விபச்சாரியா ஆனதே என்னோட புருஷன் சொல்லித்தான். அந்த ஆளுக்கு தண்ணி போட பணம் வேணும். இன்னொரு பொம்பளையை வைப்பாட்டியா வச்சிருக்கவும் அவனுக்கு அதிக பணம் தேவைப்பட்டதுன்னு பின்னாடிதான் எனக்கே தெரிய வந்துச்சு. என் புருஷன் கூட்டிக்கிட்டு வந்த ஆளுங்ககூட நான் படுப்பேன். அந்தச் சமயத்துல அவன் திண்ணையில உட்கார்ந்து, பீடி பிடிச்சிக்கிட்டு இருப்பான். கொஞ்ச நேரத்துல ரூபாய்களை எண்ணுவான். நானும் அவனும் தனியா இருக்குறப்போ என்னை எல்லா இடங்கள்லயும் தொட்டும், மோந்தும் பார்ப்பான். நான் பாதி ராத்திரி ஆனாக்கூட, குளிச்சிட்டு என் குழந்தைகள் கூட போய்ப் படுத்துக்குவேன். என் புருஷனை அப்பவும் எனக்குப் பிடிக்கும். அதுக்குக் காரணம் என்ன? புருஷன்னா என்ன? எதுக்காக நான் அந்த ஆளை விரும்பணும்? அந்த ஆளு எனக்குத் தந்த குழந்தைகள்மேல எனக்கு விருப்பம் இருந்ததால, அவன் மேலயும் அது தொடர்ந்திருக்குமோ? இல்லாட்டி ஒரு காலத்துல என்னை மனப்பூர்வமா பிரியப்பட்ட மனிதன்னு என் மனசுல நினைச்சதால இருக்குமோ? அவனோட பணம் எண்ணும் பழக்கமும், மோந்து பார்க்குறதும் எனக்கே வெறுப்பு தந்தபிறகு, எனக்கு ஒரு காதலன் கிடைச்சான். அவன் ஒரு டிரைவர். பிராந்தியும் பிரியாணியும் வாங்கிட்டு வருவான். என் பிள்ளைகளுக்கு நல்ல ஆடைகளும் விளையாட்டுப் பொருள்களும் வாங்கிட்டு வருவான். பசங்களைப் பள்ளிக்கூடத்துல கொண்டு போய் விடுவான். என்னை லாரியில அவனுக்குப் பக்கத்துல உட்கார வச்சுக்கிட்டு, எம்.ஸி.ரோட்ல படுவேகமா போவான். என்னை படம் பார்க்க கூட்டிட்டுப் போவான். என்னோட வாழ்க்கையிலேயே முதல் தடவையா எனக்கு முத்தம் தந்தது அவன்தான்.