நான்தான் தவறு செய்தவன்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6349
பலபலவென்று வெளுக்கும்போது சங்கரன் நாயர் வீட்டைவிட்டுப் புறப்படுவார். ஆறு மைல் தூரம் நகரத்திற்கு நடக்க வேண்டும். நகரத்திலிருக்கும் முன்சீஃப் நீதிமன்றத்தில் சேவகனாக இருக்கிறார் அவர்.
ஒரு வேட்டி அணிந்து, துண்டை இடுப்பில்கட்டி மெதுவாக அவர் நடந்து செல்வார். ஒரு பழைய குடையை கையிடுக்கில் இறுகப் பிடித்திருப்பார். மாநிறத்தில், மெலிந்துபோன உருவத்தைக் கொண்ட மனிதர் அவர். வழியில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் எதையாவது பேசாமல் அவர் கடந்து செல்லமாட்டார்.
முன்சீஃப் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள யாரைப் பார்த்தாலும் சங்கரன் நாயர் அவர்களைத் தடுத்து நிறுத்தி ஏதாவது பேசுவார். எல்லா வழக்குகளிலும் வெற்றி கிடைக்குமாறு செய்வது தன் பொறுப்பு என்பார். அவர்களைத் தேநீர்க் கடைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் செலவில் அவர் தேநீர் குடிப்பார்.
வழியில் ஆட்கள் யாரையும் பார்க்கவில்லையென்றால், அவர் தேநீர்க் கடையில் நுழைந்து உட்காருவார். வேறு யாருடைய செலவிலாவது தேநீர் குடித்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்புவார். நகரத்தை அடைவதற்குள் மூன்று தேநீர்க் கடைகள் இருக்கின்றன. ஏதாவதொரு தேநீர்க் கடையிலிருந்து அவருக்கு தினமும் தேநீர் கிடைக்காமல் இருக்காது.
நீதிமன்றத்துக்குச் சென்ற பிறகு, எப்போதும் அவருடைய பார்வை வராந்தாவை நோக்கியே இருக்கும். வழக்குக்காக வராந்தாவில் வந்து நின்று கொண்டிருக்கும் ஆட்கள் எல்லோரிடமும் போய் அவர் ஏதாவது பேசுவார். மதிய நேர உணவுக்காக ஒரு ஆளையாவது எப்படியும் தயார் பண்ணிவிடுவார், நீதிமன்றம் முடிந்துவிட்டால், ஒரு நிமிடம்கூட இருக்காமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பத்து விடுவார்.
சில நாட்கள் முன்சீஃப்பின் ஃபைல்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லவேண்டிய வேலை, சங்கரன் நாயர்மீது வந்து விழும். அந்த வேலை எப்போதும் தனக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கடவுளிடம் வேண்டிக்கொள்வார். ஆனால், எப்போதாவது ஒருமுறைதான் அவருக்கு அந்த வேலை கிடைக்கும்.
முன்சீஃப்பின் வீட்டிற்குச் செல்லும் நாட்களில் அவர் அங்கேயே தங்கிவிடுவார். வெளியே போ என்று கூறமுடியாத அளவிற்கு அவர் ஏதாவது வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். இரவு உணவும் மறுநாள் காலை நேர காபியும் முடிந்து முன்சீஃப்பின் ஃபைல்களை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு அவர் செல்வார்.
நீதிமன்றத்தில் வேறு சேவகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சங்கரன் நாயரிடம் கூறுவார்கள்.
“காசு கொடுத்து எதையும் வாங்கித் தின்னுடா சங்கரன் நாயர். தினமும் கண்ணுல படுறவன்கிட்டயெல்லாம் வாங்கி சாப்பிட முடியுமா?”
“எனக்கு யாராவது எதையாவது வாங்கித் தர்றாங்க. அதைப்பற்றி உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை?” - சங்கரன் நாயர் திருப்பிக் கேட்பார்.
அவர் வீட்டிலிருந்து நீதிமன்றத்திற்குச் செல்வதைப் போலவேதான், திரும்பி வீட்டிற்குச் செல்வதும் வழியில் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் எதையாவது பேசியவாறு மெதுவாக நடந்து செல்வார். இரவு ஒன்பது மணி ஆகாமல் அவர் வீட்டை அடையமாட்டார்.
அவருடைய வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பாள் கவுரியம்மா. இரவு உணவிற்கு சாதம், மரவள்ளிக் கிழங்கு, மீன் எல்லாம் தயாராக இருக்கும். நீரைச் சூடாக்கி வேறு வைத்திருப்பாள். சங்கரன் நாயருக்கான சாதம், மரவள்ளிக்கிழங்கு, மீன் ஆகியவற்றை மிகவும் உயரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் மண் பானைக்குள் அவள் வைத்திருப்பாள். இல்லாவிட்டால், பங்கன் அதிலிருப்பவற்றை எடுத்து சாப்பிட்டுவிடுவான்.
சங்கரன் நாயர் குளித்து முடித்து வரும்போது, கவுரியம்மா சாதம், மரவள்ளிக் கிழங்கு, மீன் ஆகியவற்றை எடுத்து முன்னால் வைப்பாள். தூங்குவதற்காக படுத்திருக்கும் பங்கன் எழுந்து முன்னால் வந்து உட்காருவான். கவுரியம்மாவிற்கு அதைப் பார்த்துக் கோபம் வரும்.
“எழுந்து போடா, உனக்குத் தந்தேன்ல?”
அவன் போகமாட்டான். கொடுக்காவிட்டால் அவனே கையை நீட்டி எடுத்துவிடுவான். சங்கரன் நாயர் கொடுப்பார். கவுரியம்மா முணுமுணுப்பாள்.
“இவனைக் கொண்டுபோக ஒரு எமனும் இல்லையா?”
“முணுமுணுக்காதடி கவுரி. நீ இப்படி முணுமுணுத்துத்தான் இரண்டு பேரு செத்துப் போனாங்க!”
“செத்தவங்க புண்ணியம் செய்தவங்க. பட்டினி கிடந்து கஷ்டப்படாமல், உயிரை விட்டுட்டு சீக்கிரம் போய்ச் சேர்ந்தாங்க. அதிர்ஷ்டம் செய்தவங்க....”
“நீ இன்னைக்கு ஒண்ணும் சாப்பிடலையா?”
“ஓ... சாப்பிட்டேன். ஒரு துண்டு மரவள்ளிக் கிழங்கு சாப்பிட எடுத்தேன். இந்த பங்கன் வந்து அதைத் தட்டிப் பறிச்சிட்டுப் போயிட்டான். திருடன்! திருடன்!”
சங்கரன் நாயர் பங்கனை அங்கிருந்து விரட்டி அனுப்பிவிட்டு சாதத்தையும் மீனையும் மரவள்ளிக் கிழங்கையும் கவுரியம்மாவிற்குக் கொடுப்பார். கவுரியம்மா அப்போது கூறுவாள்:
“எனக்கு வேண்டாம். எல்லாத்தையும் சாப்பிடுங்க. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.”
“நீ இதை எடுத்துச் சாப்பிடுடி கவுரி. நான் தேநீர் குடிச்சிட்டுத்தான் வந்தேன்.”
கணவனும் மனைவியும் அதைப் பங்கிட்டு சாப்பிடுவார்கள். கஞ்சி நீரையும் குடித்துவிட்டு, அவர்கள் இரண்டு பேரும் படுப்பார்கள். மீண்டும் பலபலவென்று வெளுக்கும்போது சங்கரன் நாயர் எழுந்து புறப்படுவார்.
சில நேரங்களில், சங்கரன் நாயர் நீதிமன்றத்திலிருந்து வரும்போது ஒரு பொட்டலத்தைக் கொண்டு வருவார். வடை, அதிரசம், வேர்க்கடலை ஆகியவை அந்தப் பொட்டலத்தில் இருக்கும். அதைக் கொண்டு வந்தால், பிள்ளைகள் யாருக்கும் தெரியாமல் அதை அவர் ஒளித்து வைப்பார். எல்லோரும் உறங்கிய பிறகு, அதை எடுத்துத் தன் மனைவிக்குத் தருவார். அப்போது கவுரியம்மாள் கூறுவாள்:
“எனக்கு எதுவும் கொண்டு வரலைன்னாக்கூட பரவாயில்ல... எதையாவது வாங்கி வயிறு நிறைய சாப்பிடுங்க. சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்.”
சங்கரன் நாயருக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். கவுரியம்மா ஒன்பது பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் இறந்துவிட்டன.
மூத்த மகன் அச்சுதனுக்கு இருபத்து ஒன்பது வயது நடக்கிறது. அவனுக்கடுத்தவன் ராமு. அவனுக்கு இருபத்தேழு வயது நடக்கிறது. அவனுக்கு அடுத்து இளையவன் ஒரு ஆண். அவன் இறந்துவிட்டான். அதற்குப் பிறகு பிறந்தவள் லட்சுமிக்குட்டி. இவளுக்கு இளையவள் ஒரு பெண். அவளும் சுமதியும் பங்கனும் ராஜனும். எல்லோருக்கும் இளையவனான ராஜனுக்கு எட்டு வயது முடிந்துவிட்டது.
அச்சுதன் ஆறாம் வகுப்பு படித்துவிட்டு, படிப்பை நிறுத்திக்கொண்டான். நிறுத்தாமல் என்ன செய்வான்? கஞ்சி குடித்துவிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றால், சாயங்காலம் வரை அவன் பட்டினியாக இருக்கவேண்டும். பாடப் புத்தகங்கள் இல்லை. நோட்டுப்புத்தகங்கள் இல்லை. பென்சில் இல்லை. வகுப்பிற்குள் நுழைந்தவுடன் ஆசிரியர், அவனை வெளியில் போய் நிற்குமாறு கூறுவார். பிறகு எதற்கு அவன் பள்ளிக்கூடத்திற்குப் போகவேண்டும்?