நான்தான் தவறு செய்தவன் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் சண்டியர்களுடன்தான் அச்சுதனுக்கு நட்பு. திருவிழா நடக்கும் இடங்களுக்கும் நாடகக் கொட்டகைகளுக்கும் சென்று, அவன் வீண் சண்டையை உண்டாக்குவான். வழியில் நடந்து செல்லும் பெண் பிள்ளைகளைப் பார்த்து ஏதாவது வர்ணிப்பான். மாலை நேர சந்தைக்குச் சென்று, வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களின் தலைவனாக ஆவான். மதியமும் இரவிலும் வீட்டிற்குச் சென்று இருப்பதில் பங்கு பிரித்துக்கொள்வான்.
அச்சுதன் நாயருக்கு ஒரு சேவகன் வேலை வாங்கிக் கொடுக்க சங்கரன் நாயர் முயற்சித்தார். முன்சீஃப்பின் மனைவியிடம் சொல்லி முன்சீஃப்பிடம் கூறும்படி செய்தார். மேஜிஸ்ட்ரேட்டின் தந்தையின் மூலம், மேஜிஸ்ட்ரேட்டிடம் கூறும்படி செய்தார். போலீஸில் சேர்க்கவும் பல முயற்சிகள் செய்தார். எதுவும் நடக்கவில்லை.
இப்படி இருக்கும்போதுதான், ஒருநாள் மாலை நேரத்தில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு அச்சுதன் நாயர் வீட்டிற்குள் வந்தான். எல்லோரும் அதைப் பார்த்துத் திகைத்துப் போய்விட்டார்கள். கவுரியம்மா கேட்டாள்:
“இந்தப் பெண் யார்டா அச்சுதா? இவளை இங்கே எதற்காக அழைச்சிட்டு வந்தே? ”
“இவள் என் மனைவி.”
“உன் மனைவியா? எங்கள் யாருக்கும் தெரியாமல் உனக்கு எப்படிடா மனைவி வந்தா? நீ யாருடி பெண்ணே?”
அவள் பதில் எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டு நின்றிருந்தாள். அச்சுதன் நாயர் சொன்னான்:
“இவள் ஸ்ரீதரன் பிள்ளையோட தங்கை. இவளை இங்கேயே தங்குறதுக்காகத்தான் நான் அழைச்சிட்டு வந்தேன். இருக்குறதுல இவளுக்கும் பங்குபோட்டுக் கொடுத்தால் போதும்.”
“இங்கே இருக்குறதுல கொடுக்குறதுன்னா, மற்றவர்களோட சம்மதம் வேண்டாமா?”
“இல்லாட்டி.... என் பங்கை இவளுக்குக் கொடுத்தால்கூட போதும்.”
கவுரியம்மா அந்தப் பெண்ணிடம் கேட்டாள்:
“ஒரு காசுக்கும் பிரயோஜனமில்லாத இவன்கூட நீ எதுக்குப் புறப்பட்டு வந்தே?”
அந்தப் பெண் அழுதுகொண்டே சொன்னாள்:
“எனக்கு இது நாலாவது மாதம்...”
அதைக் கேட்டு கவுரியம்மாவிற்கு பயங்கரமான கோபம் உண்டானது.
“நாசாமாக்கிட்டியே..... இந்தச் சின்னப் பெண்ணை நாசமாக்கிட்டியே!”
அச்சுதன் நாயர் உரத்த குரலில் சொன்னான்:
“இவளை நான் நாசமாக்கல. நாசாமாக்கவும் மாட்டேன். இவளை இங்கே தங்கவைக்க விருப்பமில்லைன்னா, இப்பவே நான் அழைச்சிட்டுப் போறேன்.”
கவுரியம்மாவின் மனம் மாறியது. அவள் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னாள்:
“வா மகளே..... நீ இங்கேயே இரு. ஒன்பது பிள்ளைகளைப் பெத்தவ நான். இருக்குறதுல உனக்கும் பங்கு தர்றேன்.”
சங்கரி என்பதுதான் அந்தப் பெண்ணின் பெயர். ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் அவள். அவளுடைய அண்ணன் ஒரு தெருச்சுற்றி. அவனும் அச்சுதன் நாயரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து சங்கரியின் வீட்டிற்கு எப்போதும் போவார்கள். சில நேரங்களில் அச்சுதன் நாயர் மட்டும் தனியாக அங்கு செல்வதும் உண்டு. ஒருநாள் சங்கரி தன் தாயிடம் ரகசியமாகச் சொன்னாள் - தான் கர்ப்பம் தரித்திருப்பதாக. இந்த விஷயத்தை தாய் மகனிடம் சொன்னாள். மகன் அச்சுதன் நாயரிடம் உண்மையைச் சொல்லவில்லையென்றால் குத்தப் போவதாகச் சொன்னான். அச்சுதன் நாயர் தன் தவறை ஒப்புக்கொண்டான். சங்கரியைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாக அவன் சொன்னான். இதுதான் சங்கரியின் கதை.
இரவு எட்டு மணி தாண்டியபோது, சங்கரன் நாயர் வந்தார். கவுரியம்மா எல்லா விவரங்களையும் அவரிடம் சொன்னாள். சங்கரன் நாயர் கேட்டார்.
“யாருடி இவளை சாப்பாடு போட்டுக் காப்பாத்துறது? அவன் கையில் பணம் இருக்குதா என்ன?”
“கையில் பணம் இல்லைன்னாலும், அவன் இந்தப் பெண்ணை ஏமாத்தலையே!”
“ஏமாத்தாதது நல்ல விஷயம் தாண்டி, உண்மையிலேயே அது நல்லதுதான். அதே நேரத்துல, இவளைச் சாப்பாடு போட்டு காப்பாத்துறது யாருடி? இவளுக்கு ஆகுற செலவைப் பாக்குறது யாருடி?”
“இருப்பதை அவளுக்கும் பங்கு போட்டுக் கொடுப்போம். பிறகு என்ன செய்றது?”
மறுநாள் காலையில் சங்கரன் நாயர் நீதி மன்றத்திற்குப் புறப்படும்போது, அச்சுதன் நாயர் சொன்னான்:
“நான் ஒரு தேநீர்க் கடை வைக்கப் போறேன்!”
“கேக்குறதுக்கு நல்லாதான் இருக்கு. ஆனால், தேநீர்க் கடை வைக்கப் பணம் வேணுமே!”
“இந்த மாமரத்தை வெட்டி விற்பனை செய்தால் பணம் கிடைக்கும். அந்தப் பணத்தை வச்சு தேநீர்க் கடை தொடங்க வேண்டியதுதான்.”
“எல்லோருக்கும் உரிமை இருக்குற மாமரமாச்சே அது! அதை வெட்டி விற்பனை செய்ய மத்தவங்க சம்மதிக்க வேண்டாமா?”
“அந்த மாமரத்தை எனக்கு தந்துட்டா அதற்குப் பிறகு எதுவும் தரவேண்டாம். பிறகு நான் இந்தப் பக்கம் வரவே மாட்டேன்.”
“அப்படியா? நான் கிளம்புறேன். நீங்க எல்லாரும் சேர்ந்து யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க”
வீட்டின் முன்னால் பல வருடங்களாக நின்று கொண்டிருக்கும் மாமரம் அது. ஒவ்வொரு வருடமும் நிறைய பூக்கும். நிறைய காய்களைத் தரவும் செய்யும். அந்த மாமரத்தில் மாங்காய்கள் காய்க்க ஆரம்பித்துவிட்டால், அது முடிகிற வரையில் அந்த வீட்டில் திருவிழாதான். அதை வெட்டி விற்பனை செய்யப்போகும் விஷயம் தெரிந்ததும், எல்லோருக்கும் தாங்கமுடியாத துக்கம் உண்டானது. ராஜன் குலுங்கிக் குலுங்கி அழுதான். ராமு அதை பலமாக எதிர்த்தான். அவன் சொன்னான்.
“அதை வெட்டுறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.”
“சம்மதிக்க முடியாதுன்னு யார்டா சொல்றது? அச்சுதன் நாயர் கோபமாகக் கேட்டான்.”
“சம்மதிக்க முடியாதுன்னு நான்தான் சொன்னேன்.”
“மாமரம் உனக்குச் சொந்தமானதா?”
“அண்ணே உங்களுக்குச் சொந்தமானதா?”
“அப்பாவுக்குச் சொந்தமானது அது. அப்பா சம்மதிச்சுதான், நான் அதை விற்கப் போறேன்.”
“பாதிப் பணத்தை எனக்குத் தந்துடனும். அப்படிச் செய்துட்டா, நான் பிரச்சனைக்கே வரமாட்டேன்.”
“இதுல இருந்து உனக்கு ஒரு பைசாகூட தரமாட்டேன்.”
“அப்படின்னா இதை வெட்ட முடியாது.”
“வெட்டுறேனா இல்லையான்னு நீ பார்க்கத்தானே போறே!”
ஒரு விறகு வியாபாரி அந்த மாமரத்திற்கு அறுபது ருபாய் விலை சொன்னான். அச்சுதன் நாயர் அதற்குச் சம்மதித்தான். வியாபாரி மாமரத்தை வெட்டுவதற்காக கூலியாட்களுடன் வந்தபோது, ராமு அதைத் தடுத்தான். அண்ணனுக்கும் தம்பிக்குமிடையே சண்டை உண்டானது. அச்சுதன் நாயர் ராமுவிற்கு பலமான ஒரு அடி கொடுத்தான். ராமு தன் கையை ஓங்கினான். கவுரியம்மா ஓடி வந்து ராமுவைப் பிடித்துக்கொண்டாள்.