மனைவியின் காதலன்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 10283
மனைவிக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்ற விஷயம் தெரியும்போது, கணவன் இந்த அளவிற்கு ஏன் கோபம் கொள்ள வேண்டும்? மனைவி இல்லாமல் கணவனுக்கென்று ஒரு வாழ்க்கையின் பக்கம் இல்லையா? அங்கு நிறைய ரகசியங்கள் இருக்கும். கணவனுக்கு ஏன் ஒரு காதலி இருக்கக்கூடாது?
இந்தக் கணவனின் திருமணத்திற்கு முன்பு இருந்த வாழ்க்கைமுறை எப்படி இருந்தது? பல இளம் பெண்களையும் அவன் காதலித்திருக்க வேண்டும். பலருக்கும் காதல் கடிதங்களை அனுப்பியிருக்கலாம். குழந்தைகளையும் உண்டாக்கியிருக்க வேண்டும். அதையெல்லாம் மனைவி கேட்பதில்லை. ஆனால் மனைவியின் எல்லா விஷயங்களும் கணவனுக்குத் தெரிந்தாக வேண்டும். அந்த ஆர்வத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது? கணவன் ஒரு முதலாளி. மனைவி ஒரு தொழிலாளி. கணவனுக்கு சில பொதுவான சட்டங்கள் இருக்கின்றன. பொதுவான சட்டங்கள் இருக்கின்றன. அவன் எப்போதும் அதை மீறலாம். மனைவி எந்தச் சமயத்திலும் அதை மீறக் கூடாது. கணவனுடைய கடந்தகாலத்தின் முழுவதிலும் நிகழ்காலத்தின் பெரும் பகுதியிலும் ரகசியங்கள் நிறைந்திருக்கின்றன. அங்கு நடந்திருப்பது, நடந்து கொண்டிருப்பது-எதுவும் மனைவிக்குத் தெரியக்கூடாது. மனைவி கணவனைக் கண்களை மூடிக் கொண்டு நம்பி வழிபாடு செய்ய வேண்டும். ஆனால், மனைவியின் எல்லா செயல்களையும் கணவன் சந்தேகப் பார்வையுடன் கேள்வி கேட்கலாம். மனைவிக்கு ஒரு காதலன் இருந்தான் என்ற விஷயம் வெளியே தெரிந்துவிட்டது. அதற்காகக் கணவன் ஏன் இந்த அளவிற்குக் கவலைப்பட வேண்டும்? அதிகமாக யாரும் அதைத் தெரிந்துகொள்ளவில்லை. மனைவி, மனைவியின் தாய், காதலன், காதலனின் சித்தி- இவ்வளவு பேருக்குத்தான் அது தெரியும். அந்த வகையில் மனைவிக்கு திருமணத்திற்கு முன்பு சில ரகசியங்கள் இருந்தன. காதலனுக்கு நிறைய காதல் கடிதங்கள் எழுதி அனுப்பியிருக்கிறாள். கணவனின் கைக்கு காதலனின் சித்தி மூலம் அவை வந்து சேர்ந்தன. அனைத்துக் கடிதங்களும் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையின் பிரதிபலிப்புகளாக இருந்தன. மனைவியின் இதயமும் உடலும் காதலனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.
“வாழ்க்கையின் கடவுளே!” என்று மனைவி அவளுடைய காதலனை அதில் அழைத்திருக்கிறாள். தொடர்ந்து கடிதம் மூலம் காதலனுக்கு அறிவுரை கூறியிருக்கிறாள். பகல் நேரத்தில் அதிகமாக வீட்டுப் பக்கம் வரக் கூடாது என்று கூறியிருக்கிறாள். அது முழு மனதுடன் கூறப்பட்டது அல்ல. காதலனைப் பார்க்காமல் இருப்பது கஷ்டமான விஷயம். ஆனால், சகோதரனுக்கோ வேறு யாருக்கோ சந்தேகம் உண்டாகிவிட்டால் என்றொரு சந்தேகம். எது எப்படி இருந்தாலும்-
“நமக்கென்று இருப்பவர்களுடைய - மற்றும் இல்லாதவர்களுடைய மூட நம்பிக்கை சிறிது நீங்கட்டும். பிறகு இன்னொரு விஷயம்....! அது என்ன? எது எப்படி இருந்தாலும் அம்மா பார்த்து விட்டாள். அதிகமாக எதுவும் சொல்லவில்லை. அதற்காக சொல்லாமலும் இருக்கவில்லை. இப்போது எவ்வளவு பேருக்கு சந்தேகம் உண்டாகியிருக்கிறது என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். எனக்கு இதற்குமேல் எழுதத் தோன்றவில்லை. எல்லாம் கடவுள் எழுதியபடி நடக்கட்டும். உங்களின் காதலியான இந்த அப்பிராணியான நான்.”
பெயரும் எதுவும் இல்லை. கையெழுத்து மனைவியுடையது தான். அடுத்த கடிதம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு எழுதப்பட்டது. ஒரு கர்க்கடக மாதத்தின் இரண்டாம் தேதி... அதில் மனைவிக்கு உண்டான இதய வேதனைக்கான, மனக்குழப்பத்திற்கான, அவளிடம் இருக்கும் ரகசியங்களுக்கான திரை நீக்கப்பட்டிருக்கிறது. கவலையுடன் மனைவி காதலனுக்கு எழுதுகிறாள்.
“என்னிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டு போவதாக இருந்தால் என்னைத் தேடி வரவேண்டாம். நான் இதுவரை உங்களை நம்பவில்லை என்று கூறுவது கடவுளுக்கே பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம். என்னுடைய வயிற்றில் இருக்கும் - உங்களை நம்பாததன் அடையாளம்... அப்படித்தானே? நீங்கள் இந்த அளவிற்குக் கடினமான இதயத்தைக் கொண்டவரா? இல்லாவிட்டால் என்னைச் சோதனை செய்து பார்ப்பதற்கா? அங்கிருந்து எழுதி அனுப்பிய கடிதம் வியாழக்கிழமை இரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்தில் இருக்கும்போது கிடைத்தது. அங்கிருந்துகொண்டு பதில் எழுத வசதியில்லாமல் இருந்தது. இன்றைய இந்தக் கடிதத்தை வாசித்தபோது நான் உலகத்தையே மறந்துவிட்டேன். ஒரு மணி நேரம் கடந்த பிறகுதான் நான் பேசவே செய்தேன். பிள்ளைகள் என்னிடம் என்னவோ கேட்டார்கள். நான் அவர்களிடம் நிறைய பொய்கள் சொன்னேன். கண்ணீரும் கையும் என்று கூறிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அதைப்போலத்தான் கடிதத்தை வாசித்தேன். இதோடு என் வாழ்க்கை முடியப் போகிறது. இதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. நான் எதற்காக, யாருக்காக வாழ வேண்டும்? இனிமேலும் வாழ்வதாக இருந்தால்.... இதன் மீதியை அனுபவிக்க வேண்டுமே? நான் இந்தக் கடுமையான கவலை உண்டாக்கும் அளவிற்கு அப்படி என்ன பாவத்தைச் செய்துவிட்டேன்? இந்த வடிவத்தில் என்னைக் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நான் கடவுளிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு எப்போது செல்வீர்கள்? நான் எதை மனதில் நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டு வாழ்வது? நீங்கள் வரும்போது என்னுடைய இறந்த உடல்கூட இருக்காது. என்னுடைய ஆன்மா மேலுலகத்தில் இருந்தாலும் உங்களை அன்புடன் நினைத்துக்கொண்டிருக்கும் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்...”
அதற்குப் பிறகு மனைவி காதலனுக்குக் கடிதம் எழுதியிருப்பது கன்னி மாதம் பத்தொன்பதாம் தேதி.
‘இதய நாயகனே! உங்களுக்கு என்மீது இந்த அளவிற்குக் கோபம் உண்டாகிற மாதிரி நான் என்ன செய்துவிட்டேன்? நான் வேறு யாரையாவது தேடிப் போனதாக உங்களுக்குத் தெரியுமா? என்னைப் பற்றி இப்படி நினைப்பதற்குக் காரணம் என்ன? நான் உங்களைத் தவிர வேறு யாரையும் காதலிக்கவில்லை. எனினும் விருப்பமில்லையென்றால் எனக்கு நீங்கள் கடிதம் எழுத வேண்டாம். வேறு யாராவது ஒரு இளம்பெண்ணுடன் நீங்கள் வாழலாம். உங்களுடைய இப்போதைய காதலுக்கு நான் எதற்கு வேண்டும்? உங்களுடைய வசதிக்கேற்றபடி வாழ்ந்து கொள்ளுங்கள். அதற்கு இந்த அளவிற்கு கவலைப்பட்டுக் கடிதம் எழுதி என்னை ஏன் வருத்தத்திற்குள்ளாக்க வேண்டும்? அப்படியென்றால் ‘விரும்புகிற மாதிரி பெண் கிடைப்பது ஆண் செய்திருக்கும் அதிர்ஷ்டம்’ என்று கூறுவது அர்த்தமே இல்லாத ஒன்றுதான்.‘ஒரு பெண்ணுக்கு அடிமையாக வாழ எனக்கு விருப்பமில்லை. என்னுடைய விருப்பம்போல வாழ்வேன்’ என்று எழுதியிருந்தீர்கள் அல்லவா? எனக்கு அடிமையாக வாழ வேண்டுமென்று நான் கூறவேயில்லை. கூறவும் மாட்டேன்.
உங்களுடைய விருப்பப்படி நீங்கள் வாழலாம் என்றால் என்னுடைய விருப்பப்படி நானும் செயல்படக் கூடாதா என்ன? இருப்பதிலேயே மிகவும் சாதாரணமான இந்த மனிதப் பிறவியை எதற்குப் பெரிய விஷயமாக நினைத்துக் கொள்கிறீர்கள்?