தேன் மா
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5294
“நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் உண்மை அல்ல. நான் எந்தவொரு மரத்தையும் வழிபட வில்லை. படைப்புகளில் எதையும். ஆனால், இந்த தேன் மாவிடம் எனக்குத் தனிப்பட்ட பிரியம் உண்டு. என்னுடைய மனைவி அஸ்மாவிற்கும் பிரியம் இருக்கிறது. மிகவும் உன்னத மான ஒரு செயலின் அடையாளமாக இந்த தேன்மா இருக்கிறது. அதை நான் விளக்கிக் கூறுகிறேன்.''
நாங்கள் அந்த மாமரத்திற்கு அடியில் நின்றிருந்தோம். மாங்காய்கள் இருந்தன. மாமரத்திற்குக் கீழே மிகவும் அகலமாக வட்ட வடிவில் வெள்ளை மணல் விரிக்கப்பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் இரண்டு வரிசைகளாகக் கற்கள் வைத்துக் கட்டி, சிமெண்ட் பூசி, அதில் வட்ட வடிவத்தில் ரோஜாச் செடிகள் நடப்பட்டிருந்தன. பல நிறங்களையும் கொண்ட ஏராளமான மலர்கள் இருந்தன. அவருடைய பெயர் ரஷீத். மனைவியுடனும் மகனுடனும் மிகவும் அருகில் இருக்கும் வீட்டில் வசிக்கிறார். மனைவியும் கணவரும் அருகிலிருக்கும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகின்றனர். அவருடைய மனைவி மாம்பழத்தை அறுத்து பத்து பதினாறு வயதான மகனின் கையில் ஒரு ப்ளேட்டில் கொடுத்தனுப்பினாள். நாங்கள் அதைச் சாப்பிட்டோம். தேனைப் போல இனித்தது.
“மாம்பழம் எப்படி?''
“தேன் மாவேதான்.''
“இதை நாம சாப்பிட முடிந்தது... நினைச்சுப் பார்க்கிறப்போ ஆச்சரியமா இருக்கு.''
“இங்கே நானும் அஸ்மாவும் சேர்ந்து நட்டோம். மாமரத்தைப் பற்றிய விவரத்தை நான் சொல்றேன். இந்த விஷயத்தை நான் எவ்வளவோ ஆட்களிடம் கூறியிருக்கிறேன். கேட்டவர்கள் சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, மரத்தை வழிபட ஆரம்பித்து விட்டனர். இதில் வழிபடுவதற்கு எதுவும் இல்லை. மிகப் பெரிய ஒரு செயலைப் பற்றிய நினைவு இருக்கிறது. என்னுடைய தம்பி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தான். இங்கேயிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு நகரத்தில் அப்போது அவனுக்கு வேலை. நான் தம்பியைப் பார்ப்பதற்காகப் போனேன். பிறகு தம்பியுடன் தங்கினேன். பெரிய நகரமொன்றும் இல்லை. எனினும், நான் கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டேன். கடுமையான கோடை காலம். வெப்பம் நிறைந்த காற்று வீசிக் கொண்டிருந்தது. நீருக்கு கடுமையான பஞ்சம் நிலவிக் கொண்டிருந்தது. நான் அப்படியே நடக்கும்போது, ஒரு ஒற்றையடிப் பாதையில், ஒரு மரத்தின் நிழலில் எதுவுமே செய்ய முடியாமல் ஒரு வயதான மனிதர் கிடப்பதைப் பார்த்தேன். தாடி, முடி அனைத்தும் மிகவும் நீண்டு வளர்ந்திருந்தன. ஒரு எண்பது வயது இருக்கும். மிகவும் முடியாமல் மரணத்தைத் தழுவும் நிலையில் இருந்தார். என்னைப் பார்த்தவுடன், "அல்ஹம் துலில்லா. மகனே, நீர்...”என்று கூறினார். நான் அருகில் இருந்த வீட்டிற்குச் சென்று வாசலில் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த இளம் பெண்ணிடம் நீர் வேண்டுமென்று சொன்னேன். அழகான இளம் பெண் போய் ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து தந்தாள். நான் அதை வாங்கிக் கொண்டு நடக்கும்போது, இளம் பெண், "பாத்திரத்தை எங்கே கொண்டு போகிறீர்கள்' என்று கேட்டாள். "வழியில் ஒரு மனிதர் விழுந்து கிடக்கிறார். அவருக்கு குடிப்பதற்குத்தான்' என்று சொன்னேன். இளம் பெண்ணும் என்னுடன் வந்தாள். வயதானவரிடம் நீரைக் கொடுத்தேன். பெரியவர் மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். பிறகு ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு செயலைச் செய்தார். பாத்திரமும் நீருமாக எழுந்து சாலையின் அருகில் வாடித் தளர்ந்துபோய் நின்றிருந்த மாங்கன்றின் அடியில் பாதி நீரை "பிஸ்மி” கூறி ஊற்றினார். மாம்பழத்தைச் சாப்பிட்ட வழிப்போக்கர் யாரோ கொட்டையை வீசி எறிந்து விட்டுப் போயிருக்கிறார்கள். அது முளைத்துவிட்டது. பெரும்பாலும் வேர் மண்ணுக்கு வெளியேதான் இருந்தது. பெரியவர் வந்து மரத்தின் நிழலில் உட்கார்ந்துகொண்டு மீதி நீரை "பிஸ்மி” சொல்லிப் பருகிவிட்டு "அல்ஹம் துலில்லா” என்று கடவுளை வணங்கிக் கூறிவிட்டு சொன்னார்: "என் பெயர் யூசுப் சித்திக். வயது எண்பதைத் தாண்டிவிட்டது. உறவினர்கள் என்று யாரு மில்லை. பிச்சைக்காரனாக உலகத்தைச் சுற்றிக் கொண்டிருக்கி றேன். நான் இறக்கப் போகிறேன். உங்க இருவரின் பெயர்களும் என்ன?' நான் சொன்னேன்: "என் பெயர் ரஷீத். பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.' இளம் பெண் சொன்னாள்: "என் பெயர் அஸ்மா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணியாற்று கிறேன்.'
"நம் எல்லாரையும் அல்லாஹ் காப்பாற்றட்டும்” என்று கூறி பெரியவர் படுத்து விட்டார். எங்களுடைய கண்களுக்கு முன்னால் யூசுப் சித்திக் மரணத்தைத் தழுவினார். அஸ்மாவை அங்கேயே இருக்குமாறு கூறிவிட்டு, நான் போய் தம்பியிடம் விவரத்தைச் சொன்னேன். ஒரு வேனைக் கொண்டு வந்தோம். இறந்த உடலை பள்ளிவாசலுக்குக் கொண்டு போய் குளிப்பாட்டினோம். புதிய ஆடையால் உடலை மூடி அடக்கம் செய்தோம். பெரியவரின் பையில் ஆறு ரூபாய்கள் இருந்தன. நானும் அஸ்மாவும் ஐந்தைந்து ரூபாய்களைப் போட்டு மிட்டாய் வாங்கிப் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும்படி அஸ்மாவிடம் சொன்னேன். பின்னர் நான் அஸ்மாவைத் திருமணம் செய்து கொண்டேன். மாங்கன்றுக்கு அஸ்மா நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். நான் இந்த வீட்டைக் கட்டிக் குடியிருப்பதற்கு முன்னால், அந்த மாங்கன்றின் வேருக்கு சேதமுண்டாகாமல் ஒரு சாக்குத் துண்டில் மண்ணை இட்டு நானும் அஸ்மாவும் சேர்ந்து மாங்கன்றைப் பிடுங்கிக் கட்டிக்கொண்டு வந்து நீர் ஊற்றினோம். இரண்டு மூன்று நாட்கள் மாங்கன்று அஸ்மாவின் படுக்கையறையில் மூலையில் சாய்ந்து நின்றிருந்தது. அதை இங்கே கொண்டு வந்து நானும் அஸ்மாவும் சேர்ந்து குழி வெட்டி, காய்ந்த சாணத்தையும் சாம்பலையும் இட்டு நட்டு நிறுத்தி நீர் ஊற்றினோம். புதிய இலைகள் வந்து ஜோரானவுடன் எலும்புத் தூளையும் பசுமை உரத்தையும் சேர்த்தோம். அந்த வகையில் அந்த மாங்கன்று இப்படி ஆனது.''
“இனிய சம்பவம்... இறப்பதற்கு முன்னால் பேசமுடியாத மாங்கன்றுக்கு அந்த வயதான மனிதர் நீர் ஊற்றினார். நான் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன்.''
நான் விடை பெற்றுக் கொண்டு நடந்தபோது, பின்னால் அழைத்தார்கள்.
நான் திரும்பி நின்றேன்.
ரஷீதின் மகன் நான்கு மாம்பழங்களை ஒரு தாளில் சுற்றிக் கொண்டு வந்து தந்துவிட்டுச் சொன்னான்: “மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கச் சொன்னாங்க!''
“மகனே, நீ படிக்கிறியா?''
“கல்லூரியில் படிக்கிறேன்.''
“பெயர் என்ன?''
“யூசுப் சித்திக்.''
“யூசுப் சித்திக்?''
“ஆமாம்... யூசுப் சித்திக்!''